ஓஎம்ஆர் கல்லூரியில் கொட்டும் மழையில் மகளிரணி அவதி! பிற்பகல் 3 மணிக்கு தனுஷ் சந்திப்பு ஒத்திவைப்பு!
சென்னை: டெல்லி சென்ற பிறகு முதல் முறையாக சென்னையில் ரசிகர் மன்றத்தின் மகளிரணியினரை நடிகர் தனுஷ் சந்திக்கும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்வு பிற்பகல் 3 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் காலை முதலே கொட்டும் மழையில் குழந்தைகளுடன் காத்திருக்கும் தனுஷின் ரசிகர்கள் அவதிப்படுகிறார்கள்.
சென்னை ஓஎம்ஆரில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் நடிகர் தனுஷ் தனது இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார். டெல்லியில் இரு நாட்கள் முகாமிட்டிருந்ததை அடுத்து தனுஷ் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது! இன்று காலை 11 மணிக்கு சந்திப்பு கூட்டம் நடைபெறுவதாக சொல்லப்பட்ட நிலையில் காலை முதலே கல்லூரி வளாகத்திற்குள் மகளிரணியினர் தங்களது குடும்பத்தினருடன் குழுமினர்.

சென்னைக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் காலை முதலே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தனுஷின் சந்திப்பு நிகழ்ச்சி தாமதமாகி வந்த நிலையில் தனுஷ் இன்று பிற்பகல் 3 மணிக்கு ரசிகைகளை சந்திக்கிறார் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுடன் காலையிலேயே வந்துவிட்ட ரசிகைகள் அங்கு காத்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு மதிய உணவாக சுடச் சுட சைவம், அசைவ பிரியாணி வழங்கப்படுகிறது. இந்த உணவை பரிமாற ஆட்களை ஏற்பாடு செய்யாததால் அவர்களாகவே இலை போட்டுக் கொண்டு சாப்பிடும் நிலை உள்ளது. மேலும் 3 மணிக்கு நிகழ்ச்சி நடந்தால் அது முடிவதற்கு 8 அல்லது 9 மணியாகிவிடும். அதன் பிறகு அங்கிருந்து வீடு செல்ல வேண்டும் என்பதால் மகளிரணியினர் செய்வதறியாது தவித்து வருகிறார்கள்.
தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா இல்லை வேறு ஏதேனும் ஒரு கட்சியில் இணைகிறாரா என்ற கேள்வி தமிழக அரசியலில் பேசுப்பொருளாகியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார். திருவள்ளூரில் பிரம்மாண்ட ரத்ததான முகாம், நலத்திட்ட உதவிகள வழங்கும் விழாவிலேயே ரசிகர் மன்ற கட்டமைப்புகளை வலுப்படுத்தி நற்பணிகளை விரிவுப்படுத்த உத்தரவிட்டிருந்தாராம்.
அது போல் ரசிகர் மன்றத்தில் புதிய உறுப்பினர்களை நியமித்துள்ளாராம். விரைவில் ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்ற போகிறாராம். இயக்கத்தை வலுப்படுத்த பெண்களின் ஆதரவு முக்கியம் என்பதை தனுஷ் உணர்ந்துள்ளாராம்.
இதனால் எல்லா மாவட்டங்களிலும் உள்ள இயக்கத்தில் புதிதாக பெண் உறுப்பினர்களை சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளாராம். அவ்வாறு இணைந்த பெண்களை இன்று காலை 11 மணிக்கு தனுஷ் சந்திக்கிறார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள போகிறாராம்.
தனுஷின் அரசியல் வருகை குறித்து அமைச்சர்கள் ஆதவ், மரிய வில்சன், கீர்த்தனா உள்ளிட்டோர் பேசியிருந்த நிலையில் இன்று மகளிரணியை சந்திக்கிறார். தமிழகம் முழுவதிலும் இருந்து 3000 பெண் ரசிகைகளை தனுஷ் சந்திக்கிறார்.
தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்து இயக்குநர் பேரரசு கூறுகையில் மன்சூர் அலிகான் கட்சி ஆரம்பித்தார். இப்போது தனுஷ், நாளை கிங்ஸ்லி கூட கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் மக்கள்தான் எஜமானவர்கள், அவர்கள் ஏற்றுக் கொண்டால்தான் அரசியலில் ஜொலிக்க முடியும்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அதில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும். மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்காமல் இருக்க வேண்டும். அவர்கள் வரி பணத்தை சுருட்டாமல் இருக்க வேண்டும். கட்சி ஆரம்பிப்பதில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என்றார்.




Click it and Unblock the Notifications
