எல்லாம் நடிப்பா கோபால்..கண்ணீர் விட்ட சத்யபாமா! எல்லாமே ஸ்க்ரிப்டா? பேக் ஃபயரான தாராபுரம் பிரச்சாரம்
சென்னை: தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு நேற்று அங்கு பிரச்சாரம் செய்தார் முதலமைச்சர் விஜய். அப்போது, தன்னை அவதூறாக பேசுகிறார்கள்.. அசிங்க அசிங்கமாக பேசுகிறார்கள் என கண்ணீர் வடித்தார் சத்யபாமா. அவரை மேடையிலேயே தேற்றினார் முதல்வர் விஜய். ஆனால் அதுவே தற்போது பேக் ஃப்யராகியிருக்கிறது. திமுக, பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் நேற்று விஜயின் பிரச்சாரம் தாராபுரத்தில் கை கொடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
பரபரப்புகளுக்கு விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் களம் சென்று கொண்டிருக்கிறது. அதிமுகவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சத்யபாமா அங்கு போட்டிருக்கிறார்.

அவருக்கு எதிராக திமுக, அதிமுக, நாம் தமிழர், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தாராபுரம் தொகுதி எப்போதுமே திராவிட கட்சிகளின் கோட்டையாக இருந்திருக்கிறது. குறிப்பாக அதிமுகவுக்கு சாதகமான தொகுதி தான் தாராபுரம்.
கடந்த தேர்தலில் விஜய் அலையையும் தாண்டி, ஆளுங்கட்சி திமுகவின் பலத்தையும் தாண்டி அதிமுக வெற்றி பெற்றது. அந்த அளவுக்கு இரட்டை இலைக்கு அங்கு தனி செல்வாக்கு இருக்கிறது. சத்யபாமாவும் ஓரளவுக்கு செல்வாக்கு பெற்றவர் தான். ஆனால் அது அதிமுகவில் இருந்தவரை, தற்போது தமிழக வெற்றி கழகத்தில் அவர் இணைந்திருக்கும் நிலையில் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது. பிரச்சாரம் செய்ய விடாமல் சில இடங்களில் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியது.
விஜய் வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார் சத்யபாமா. அதற்கேற்றார் போல் தாராபுரத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசினார். அதற்கு முன்பாக சத்யபாமா பேசும்போது உணர்ச்சி வசப்பட்டு மேடையிலேயே கண்ணீர் சிந்தினார். திமுகவுடன் கூட்டணி சேர்ந்து முதல்வராக வேண்டும் என எடப்பாடி சொன்னார். அதை பிடிக்காமல் தான் நாங்கள் கட்சியிலிருந்து வெளியே வந்தோம். ஆனால் நான் துரோகம் செய்துவிட்ட மாதிரி பேசுகிறார்கள். சமூக வலைதளங்களில் அசிங்க அசிங்கமாக என்னை பற்றி பேசுகிறார்கள்.. நான் எந்த தவறும் செய்யவில்லை.. கட்சிக்கு துரோகம் செய்யவில்லை" என கண்ணீர் மல்க பேசினார்.
இதை எடுத்து மேடையில் இருந்த விஜய் அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். அந்த காட்சிகளும் புகைப்படங்களும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவே தவெகவுக்கு எதிராக திரும்பி இருக்கிறது. சத்யபாமா நன்றாக பேசிக் கொண்டிருந்தபோது அமைச்சர் ராஜ்மோகனுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததும், அதற்கு பிறகு சத்யபாமாவின் காதுகளில் ஏதோ சொன்னதும்.. சிறிது நேரத்திலேயே அவர் பேச்சு மாறியதை வைத்து இது முழுக்க முழுக்க ஸ்கிரிப்ட் என விமர்சித்து வருகிறது.
அதிமுக, பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகள் அதுமட்டுமல்லாமல் நெட்டிசன்கள் பலரும் சத்தியபாமாவின் பேச்சு நாடகத் தன்மையுடன் இருக்கிறது எனக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக வலைதளங்களை திறந்தாலே சத்யபாமாவின் அழுகையு,ம் அதற்கு விஜய் கொடுத்த ரியாக்ஷன் தான் ட்ரோல் மெட்டீரியலாக மாறி இருக்கிறது.
பிரச்சாரம் செய்துவிட்டு போயிருந்தால் கூட ஏதாவது நடந்திருக்கும். ஆனால் அழுது கண்ணீர் விட்டு கதையை மாற்றிவிட்டார் சத்தியமா என தாராபுரத்துக்குள்ளேயே பேசி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பிரச்சாரம் செய்யும் அதிமுக திமுக தலைவர்களும் இதை ஒரு பிரச்சார ஆயுதமாகவே கையில் எடுத்துள்ளார்கள். இதனால் தமிழக வெற்றி கழகத்திற்கு இது ஒரு சிக்கலாகவே மாறி இருக்கிறது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications
