7ம் அறிவு பட வசனம்.. சூர்யா அப்பவே சொன்னார்.. எனக்கு அப்போ அரசியல் புரிதல் இல்லை.. உதயநிதி ஓபன் டாக்
சென்னை: ரெட் ஜெயன்ட்ஸ் தயாரிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் இட ஒதுக்கீட்டை விமர்சித்து ஒரு வசனம் இடம் பெற்றுள்ளதாகவும் அந்த படம் எடுக்கும் சமயத்தில் தனக்கு அவ்வளவாக அரசியல் புரிதல் கிடையாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனம் திறந்து பேசியுள்ளார்.
சூர்யா நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏழாம் அறிவு படம் வெளியானது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனத்திற்கும் ஒரு திருப்பு முனையை ஏழாம் அறிவு ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

இந்த படம் வெளியாகி 11 ஆண்டுகள் கடந்து விட்டது. ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதி ஹாசன் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசும் ஒரு வசனம் இடம் பெற்று இருக்கும். அதாவது இட ஒதுக்கீட்டால் திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்பு பறி போவதாக வசனம் ஒன்று இடம் பெற்று இருக்கும். இந்த படம் வெளியாகி 11 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், ரிசர்வேஷன் குறித்த அந்த காட்சியின் தீவிரம் பற்றி புரியாமல் தான் இருந்ததாக அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உதய நிதி ஸ்டாலின் கூறுகையில், "ஏழாம் அறிவு படத்தில் சமூக நீதியை விமர்சித்து ஸ்ருதி ஹாசன் பேசும் ஒரு வசனம் இடம் பெற்றிருந்தது. அந்த சமயத்தில் எனக்கு அரசியல் புரிதல் இல்லை. அதற்காக நான் இயக்குனர் ஏ.ஆர் முருகதாசை குறை கூறவில்லை. ஏ.ஆர் முருகதாசின் அரசியல் புரிதலில் அந்த வசனத்தை அவர் வைத்து இருந்தார். படப்பிடிப்பிலும் நான் இந்த வசனத்தை பார்க்கவில்லை.
சீன் பேப்பரையும் நான் பார்க்கவில்லை. குறிப்பிட்ட அந்த காட்சி படமாக்கப்பட்ட போது சூர்யாவும் இல்லை. டப்பிங்கிலும் அப்படி ஒரு வசனம் வருவது குறித்து சூர்யாவுக்கு தெரியாது. ஆனால், படம் ரிலீஸ் செய்யப்படும் முன்பாக படத்தை பார்த்து விட்டு சூர்யா எனக்கு போன் செய்தார். படத்தில் ரிசர்வேஷனை விமர்சனம் செய்து ஒரு காட்சி உள்ளது. அது வேணாம் எடுத்துவிடுங்கள் என்று சொன்னார்.
ஆனால், நான் ஒரு சின்ன வசனம் தானே விட்டுடுங்க.. என்று சொல்லிவிட்டேன். அந்த சமயத்தில் என்னோட அரசியல் புரிதல் அவ்வளவுதான் இருந்தது. ஆனால், சூர்யாவுக்கு அரசியல் புரிதல் இருந்துள்ளது. இப்போ யோசித்து பார்த்தால் அதை நான் அனுமதித்து இருக்கக் கூடாது என தோன்றுகிறது. ஏழாம் அறிவு படத்தில் அந்த வசனத்தை நான் வைத்திருக்கூடாது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications