ஆஹா.. பாயிண்டை பிடித்த திமுக.. அண்ணாமலை ரபேல் பில்லில் பெரிய தவறு! யார் அந்த சேரலாதன் ராமகிருஷ்ணன்?
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் குறித்த பில்லை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அதில் இருக்கும் சீரியல் நம்பர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்தார். திமுகவினரின் சொத்து பட்டியல்கள் என்று குறிப்பிடப்படும் எக்ஸல் சீட் ஒன்றை அவர் வெளியிட்டார். பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம்தான் தற்போது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் டிரெண்டிங் டாப்பிக். அவர் கையில் கட்டி இருக்கும் பெல் அண்ட் ராஸ் நிறுவனத்தின் ரபேல் வாட்ச் இந்திய மதிப்பில் 4.40 லட்சம் ரூபாய் கொண்டது.
இதற்கான பில் ஒன்றையும் அவர் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டினார். இதை அண்ணாமலை வாங்கியது எப்படி? என்ற கேள்வியைத்தான் திமுகவினர் முன் வைத்து வருகின்றனர். இதை அண்ணாமலை வாங்கிய பில்லை பொதுவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று திமுகவினர் அண்ணாமலைக்கு பிரஷர் போட்டு வருகின்றனர். இதையடுத்து அண்ணாமலை இன்று பில் ஒன்றை காட்டினார்.
இந்த ரபேல் வாட்ச் பில் குறித்து பேட்டி அளித்த அண்ணாமலை, ரபேல் வாட்சை நான் சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நபரிடம் இருந்து வாங்கினேன். அவர் கோவையை சேர்ந்தவர். அவர் வாங்கி இருந்த வாட்சை அணிய வேண்டும் என்று விரும்பி.. அவரிடம் 3 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினேன். அவர் வாட்ச் வாங்கியதற்கான பில் இருக்கிறது.

அவரிடம் இருந்து நான் வாட்ச் வாங்கியதற்கான பில்லும் இருக்கிறது. இரண்டையும் அந்த பக்கத்தில் நான் வெளியிட்டு இருக்கிறேன். அதிகாரியாக பணியில் இருந்தபோது லஞ்ச பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் தகவல் பரப்பினர். திமுகவினர் இதில் பொய்யை பரப்பி வருகின்றனர்.
அப்படி எல்லாம் இல்லை. ரபேல் வாட்ச் வரிசையில் 147வது வாட்சை நான் வாங்கினேன். நான் வாங்கிய வாட்ச்சிற்கு என்று தனியாக சீரியல் நம்பர் இருக்கிறது. அதற்கு உரிய பில் இருக்கிறது. இதை வைத்து சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். சீரியல் நம்பர் தெரியாமல் திமுகவினர் பொய்யான பில்லை நேற்று வெளியிட்டனர், என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.
ஆனால் அண்ணாமலை வெளியிட்ட இரண்டு பில்களிலும் சீரியல் நம்பர் வேறு வேறாக உள்ளது. அதாவது
சேரலாதன் வாங்கினதாக சொன்ன வாட்ச் Model No. BRO394EBl147
அண்ணாமலை சேரலாதனிடம் வாங்கினதாக சொன்ன வாட்ச் Model No. BRO394DAR147
இரண்டு நம்பர்களும் வேறு வேறாக இருப்பதால்.. அண்ணாமலை சொன்னது உண்மையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு அண்ணாமலை சேரலாதனிடம் வாங்கினதாக சொன்ன வாட்சுக்கு வெறும் ரெசிட் மட்டுமே உள்ளது பில் முறையாக இல்லை. இதுவும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி செய்துள்ள போஸ்டில், ஏல 420 அண்ணாமலை
சேரலாதன் வாங்குனதா சொன்ன வாட்ச்-No BRO394EBl147
நீ அவரிடம் வாங்குனதா சொன்ன வாட்ச்-No BRO394DAR147
இதற்கு பேர்தான் பிராடுத்தனம்!, என்று விமர்சனம் செய்துள்ளார்.

இது மட்டுமின்றி இன்று அண்ணாமலை அளித்த பேட்டியில், ரபேல் வாட்ச் வரிசையில் 147வது வாட்சை நான் வாங்கினேன். நான் வாங்கிய வாட்ச்சிற்கு என்று தனியாக சீரியல் நம்பர் இருக்கிறது. அதற்கு உரிய பில் இருக்கிறது என்று கூறி உள்ளார். ஆனால் ரபேல் விவகாரம் எழுந்த காலத்தில் முதலில் அவர் அளித்த பேட்டியில் தன்னிடம் இருப்பது 149 வது வாட்ச் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் திமுகவினர் அண்ணாமலையை விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் யார் அந்த சேரலாதன்.. அவருக்கும் எப்படி ரபேல் வாட்ச் கிடைத்தது. அரிதான ரபேல் வாட்சை வாங்கிய நான்கரை லட்சத்தை விட குறைவான விலைக்கு விற்றது ஏன் என்றும் கேட்டு இருக்கிறார்கள் திமுகவினர்.












Click it and Unblock the Notifications