அன்றே நீதிபதியிடம் முறையிட்ட சபாநாயகர் அப்பாவு.. அதிமுக தொடுத்த அவதூறு கேஸில்.. இன்று என்னாகுமோ? பரபர
சென்னை: அதிமுக எம்எல்ஏக்களை களங்கப்படுத்தியதாக, சபாநாயகர் அப்பாவு மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு இன்று விசாரணைக்கு வரஉள்ளது. இன்றைய தினம் சபாநாயகர் அப்பாவு கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் தருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

சபாநாயகர் அப்பாவு இப்படி பேசியிருந்தது, அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கு ஒன்றை தொடுத்தார்.
வழக்கு விசாரணை: இந்த வழக்கானது, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. இந்த வழக்கு விசாரணையின்போது, அப்பாவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் உள்ளார் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, கடந்த 13ம் தேதியும் இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆப்போது சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜரானார்.
சம்மன் கிடைக்கவில்லை: நீதிபதியிடம் அப்பாவு, "நீதிமன்ற சம்மனை தான் பெற மறுத்து விட்டதாக கூறியது தவறு... நீதிமன்ற சம்மன் எதுவுமே எனக்கு வரவில்லை. நீதிமன்றத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளது.. எனவே, இதுசம்பந்தமாக விசாரிக்க வேண்டும்" என்று நீதிபதியிடம் முறையிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு அதாவது, இன்றைய தினம் நீதிபதி ஜெயவேல் தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.
விளக்கம்: பின்னர், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அப்பாவு பேசியிருந்தார்.. அப்போது, தனக்கு சம்மன் எதுவும் கிடைக்கவில்லை என்று மீண்டும் கூறினார்..
"சென்னையில் இருந்த போதும் சரி, திருநெல்வேலியில் என் சொந்த கிராமத்தில் இருந்தபோதும்சரி, எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. சென்னையில் உள்ள வீட்டில் இருந்த போலீஸாரிடமும், கடிதங்கள் வந்தால் உடனே எனக்கு தெரிவிக்கும்படி ஏற்கனவே சொல்லியிருந்தேன்.. ஆனால் சம்மன் எதுவும் வரவில்லை.. இதுகுறித்து கோர்ட்டில் புகார் தந்துள்ளேன்" என்றார். இந்நிலையில், இன்றைய தினம், மீண்டும் வழக்கு விசாரணை வரஉள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications