"தாயம் ஒண்ணு".. பகடைகளை உருட்டி தள்ளிய எடப்பாடி.. பாய்ந்த கணைகளை வீழ்த்தி "ஹாட்ரிக்".. பணிந்ததா பாஜக
இடைத்தேர்தல் கூட்டணி விவகாரத்தில் எடப்பாடியை பணிய வைத்துவிட்டதாக பாஜக கருதுகிறதாம்
சென்னை: சின்னம் கிடைத்த மகிழ்ச்சியுடன் அதிமுக தரப்பு, ஈரோடு கிழக்கில் ஜரூராக வேலை பார்த்து வருகிறது என்றாலும், கூட்டணி தொடர்பான சலசலப்பும், அதையொட்டிய விவாதங்களும் இன்னமும் ஓயவில்லை
இடைத்தேர்தல் விஷயத்தில், சாதுர்யமாக காய்களை நகர்த்தி உள்ளோம் என்று பாஜக தரப்பு பெருமிதமாக உணர்கிறதாம். இதற்கு 3 காரணங்களும் சொல்லப்படுகின்றன.
முதலாவதாக, எடப்பாடி பழனிசாமியின் "சின்னம் வியூகத்தை" முறியடித்ததாக சொல்லப்படுகிறது.. கடந்த 1989-ல் சட்டசபை தேர்தலில், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு ஜெயலலிதா அபார வெற்றி பெற்றார்..
அதாவது புதிய சின்னத்தில்தான் ஜெயலலிதா தன்னுடைய செல்வாக்கை நிரூபித்தார்... இதற்கு பிறகுதான் கட்சியே அவர் வசம் சென்றது.. அதுபோலவேதான், இரட்டை இலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கே வந்துவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி..

பணிந்தாரா
புதிய சின்னம் கிடைத்தால், அதில் போட்டியிட்டு, 2வது இடத்தை பிடித்தால்கூட அதிமுக தன் வசமாகிவிடும் என்று கணக்கு போட்டு வைத்திருந்திருக்கிறார்.. பாஜகவிடம் பணிந்தும் போகாமல், ஓபிஎஸ்ஸை கிட்டயும் சேர்த்துக்கொள்ளாமல், தனித்து போட்டியிடுவதில் குறியாக இருந்ததற்கு காரணமே இதுதான் என்கிறார்கள். இந்த பிளானைதான், பாஜக மோப்பம் பிடித்து, மேலிடத்துக்கு கொண்டு சென்றுள்ளது. தனி சின்னத்தில் போட்டியிட்டு செல்வாக்கை நிரூபித்தால், எம்பி தேர்தலில் எடப்பாடி பலம் கூடிவிடும் என்றும், அந்த நேரத்தில் அவர் கொடுக்கும் சீட்டுக்களை மட்டுமே நம்மால் வாங்க வேண்டிய நிலைமை வரும் என்பதையும் எடுத்து சொல்லி உள்ளது..

சேவல் கூவுதா
இதன் காரணமாகவே, இந்த 6 மாத காலங்கள் இல்லாமல், திடுதிப்பென்று, 2 தரப்பையும், பாஜக தரப்பு சமாதானப்படுத்த போவதாக சொல்லி, ஒரே நாளில் ஓபிஎஸ் + எடப்பாடி என 2 தரப்பையும் அடுத்தடுத்து சந்தித்து, ஒற்றுமையையும் வலியுறுத்த முனைந்ததாம். இதற்கு நடுவில், அதிமுக வேட்பாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய, சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, தன்னுடைய வேட்பாளரை ஓபிஎஸ் வாபஸ் பெற, இரட்டை இலை சின்னமும் எடப்பாடிக்கு உறுதியாகிவிட்டது. ஆக, ஜெயலலிதாபோல செல்வாக்கை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பை, பாஜக முறியடித்துவிட்டதாகவே பாஜக கருதுகிறதாம்.

கப்சிப் மோடு
இதனால், எடப்பாடிக்கு உள்ள சிக்கல் என்னவென்றால், இரட்டை இலை சின்னம் என்பதால், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாலும், அது அதிமுகவின் வெற்றியாக மட்டுமே பார்க்கப்படுமே தவிர, எடப்பாடியின் வெற்றியாக பார்க்கப்படாது.. தன்னுடைய வெற்றி மட்டுமே என்று எடப்பாடி பழனிசாமியாலும் முழுமையாக சொல்லி கொள்ளவும் முடியாது.. மேலும், வேட்பாளரை வாபஸ் பெற்றதால்தான், அதிமுகவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன என்று ஓபிஎஸ்ஸும் இனிமேல் உரிமை கோர முற்படுவார்.. தேர்தலில் 2வது இடத்தை எடப்பாடி பெற்றாலும்கூட, இதில் தன்னுடைய பங்கும் உள்ளது என்றே ஓபிஎஸ் சொல்ல வாய்ப்புள்ளதாம்.

3 மாங்காய்கள்
இன்னொரு விஷயத்தையும் பாஜக தரப்பில் சுட்டிக்காட்டுகிறார்கள்.. தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தினால் திமுக கூட்டணிக்குத்தான் சாதகமாக அமையும் என்பதால், அதிமுக சார்பில் பொதுவான ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே பாஜக இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டதாம். திமுகவுக்கு எதிராக பலமான ஒரேவேட்பாளர் என்ற நோக்கில் மட்டும்தான் பாஜக செயல்பட்டதே தவிர, வேறு எந்த நோக்கமுமில்லை என்று விளக்கமும் தருகிறார்கள். இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. எடப்பாடி பழனிசாமி நிமிர்ந்துவிட்டதால், இனி அவரை வளைக்க முடியாது என்பதை பாஜக நன்கு உணர்ந்துள்ளது..

உருட்டல் மிரட்டல்
அரசு எந்திரங்களை வைத்து மிரட்டினாலும் அவரை வழிக்குக் கொண்டுவர முடியாது, அதையும் மீறி ஏதாவது ஒரு வகையில் செக் வைத்தால், எம்பி தேர்தலில் கூட்டணி சிக்கல் வந்துவிடும் என்பதை உணர்ந்ததால்தான், எடப்பாடி இழுத்த இழுவைக்கு தற்போது இறங்கி வந்திருக்கிறது பாஜக என்கிறார்கள்.. சுருக்கமாக சொல்லப்போனால், தனக்காகவே வளைந்து கொடுக்கும் ஓபிஎஸ்ஸின் முதுகில் தட்டிக்கொடுத்துக் கொண்டே, ஜெ.போல உருவெடுக்க நினைத்த, எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தை நொறுக்கியதுடன், பொதுவேட்பாளரை நிறுத்தி திமுகவுக்கும் செக் வைத்து ஒரே கல்லில் 3 மாங்காய்களை வீழ்த்தியது பாஜகவின் சாதுர்யமே என்கிறார்கள்.

ஹாட்ரிக் எடப்பாடி
ஆனால் எடப்பாடி ஆதரவாளர்களோ தங்கள் வெற்றியை வேறுவிதமாக அணுகுகிறார்கள். பாஜகவின் ஏகப்பட்ட பகடைகளை சாதுர்யமாக உருட்டித்தள்ளிய எடப்பாடி, கட்சியும், சின்னமும் தன்னிடம் இருப்பதை உறுதி செய்திருப்பதுடன், ஓபிஎஸ்ஸையும் தினகரனையும் தேர்தல் களத்திலிருந்தே அப்புறப்படுத்தியிருப்பதே சக்ஸஸ் ஆக பார்க்கிறார்களாம்.. பாஜக + ஓபிஎஸ் + தினகரன் என்றில்லாது, பாஜகவுக்கு மட்டுமே ஆதரவு என்று சொல்லி கொண்டிருந்த சிறு கட்சிகளையும் தாங்களாகவே முன்வந்து ஆதரவை தர வைத்துவிட்டாராம் எடப்பாடி.. அதனால்தான், இடைத் தேர்தலில் இரட்டை இலை தோற்றாலும், அது எடப்பாடிக்கு வெற்றியே என்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள்..!!












Click it and Unblock the Notifications