ரூ.1000 குடும்ப தலைவிக்கு.. குடிச்சி செத்தவனுக்கு 10 லட்சமா? இதெல்லாம் மகா கேவலம்.. சீமான் ஒரே போடு
கள்ளக்குறிச்சி: மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய், கள்ளச்சாராயத்துக்கு அரசு வழங்கிய 10 லட்சம் நிவாரணம் இரண்டையும் ஒப்பிட்டு கேள்வி எழுப்பியிருக்கிறார் நாம் தமிழர் கட்சி சீமான்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் நிலையில், இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர்... சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என அஞ்சப்படுகிறது.

திமுக கூட்டணி: கடந்த ஒரு வாரகாலமாகவே, கள்ளச்சாராய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.. அதேபோல எதிர்க்கட்சிகளும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன..
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த நிவாரண தொகையையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
கள்ளச்சாராயம்: 2 நாட்களுக்கு முன்பு இந்து முன்னணி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.. அதில், "கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு, அதிலும், சாராயத்தை விற்றவருக்கும் அரசு 10 லட்சம் ரூபாயை வாரி வழங்கியது. இதனால் கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனை தான் ஊக்கம் பெற்றது" என்று சாடியிருந்தார்.
இதுபோலவே, தேமுதிக தலைவர் பிரேமலதாவும் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி கொடுப்பது தவறானது... நிதி கொடுப்பது கள்ளச்சாராயம் அருந்துபவர்களை ஊக்குவிப்பதுபோல இருக்கிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டுமே தவிர அதை அருந்தியவர்களுக்கு நிதி தரக்கூடாது "என்று கூறியிருந்தார்.
மரணங்கள்: இந்நிலையில் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. அதற்கு சீமான் பதிலளித்தபோது:
"கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் மீது எனக்கு அனுதாபமே கிடையாது. ஆத்திரம் தான் வருகிறது. இந்த நாட்டில் அதிகபட்ச நிவாரணம் எதுக்கு கொடுக்கிறார்கள்? சாராயம் குடிச்சி இறந்ததற்குத்தான். இது நாடா? சுடுகாடா? குடிக்க வைச்சி தாலியை அறுக்குறது தான் அரசின் பொறுப்பா? கள்ளச்சாராயம் குடிச்சி இறப்பவர்களை அரசு ஊக்குவிக்கிறது.
கள்ளச்சாராயம்: நீங்க 10 லட்சம் நிவாரணம் அறிவித்த உடனே, கள்ளச்சாராயம் குடிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமாகி வீட்டுக்கு போனவன், மறுபடியும் கள்ளச்சாராயம் குடிக்கிறான், அதுவும் அந்த 10 லட்சம் பணத்திற்காக.
அப்படின்னா, குடும்ப தலைவிக்கு வெறும் 1000 ரூபாய்தான்.. ஆனால், குடிச்சி செத்தா 10 லட்சம் எப்படி இருக்கு? கேவலம்" என்று சீமான் கொந்தளித்துள்ளார்.
2 நாட்களுக்கு முன்பு சென்னை ஏர்போர்ட்டில் சீமான் பேசும்போதும் இதே கருத்தைதான் கூறியிருந்தார். கள்ள சாராயம் குடித்து சாகிறவனை ஊக்கப்படுத்துவதா?
மகளிர் உரிமைத்தொகை: ரூ.10 லட்சம் தந்ததும் குணமாகி வீட்டிற்கு போனவன் மீச்சம் இருந்த சாராயத்தை குடித்து செத்து போகிறான். மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவனுக்கு ரூ.50 ஆயிரம் என்றதும் கள்ள சாராயம் குடிக்காமல் டாஸ்மாக்கில் சரக்கு அடித்தவன் வந்து படுத்துக்குறான்...
உழைக்கிறவனுக்கு விவசாயத்திற்கு ஊக்கப்படுத்தவில்லை... மீனவன் செத்தபோது வரவில்லை. எல்லையில் செத்த ராணுவத்திற்கும் வரவில்லை. சாராயம் குடித்து செத்தவனுக்கு விழுந்து விழுந்து போய் பார்க்கறீங்க? குடும்ப தலைவிக்கு ஆயிரம் தான். குடிச்சு செத்தால் ரூ.10 லட்சம் கேவலமாக இருக்கிறது" என்று சீமான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications