சென்னை சென்ட்ரலில் சூப்பர் வசதி! வெளியூர் ரயில் பயணிகள் இனி லக்கேஜ்களோடு அலைய வேண்டியது இல்லை! செம
சென்னை: நாள்தோறும் லட்சக்கணக்கான ரயில் பயணிகள் பயன்படுத்தும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொலை தூர பயணிகள் பயன்பெறும் வகையில் சூப்பர் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. பயணிகளின் லக்கேஜ்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டணம் எவ்வளவு? எப்படி பயன்படுத்துவது என்ற விவரங்களை பார்க்கலாம்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நாட்டில் உள்ள மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துகிறார்கள். 24 மணி நேரமும் இந்த ரயில் நிலையம் பரபரப்பாகவே காட்சியளிக்கும். சென்னையில் இருந்து கோவை, சேலம், பெங்களூர், மும்பை, டெல்லி என பல நகரங்களுக்கு இங்கிருந்து ரயில் இயக்கப்படுகின்றன. இதனால் தொலை தூரம் செல்லும் பயணிகளும் வெளி மாநில பயணிகளும் அதிக அளவில் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துகிறார்கள்.

டிஜிட்டல் லாக்கர்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மட்டும் பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் 158 ரயில்கள் இயக்கப்படுகிறது. லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் தங்களில் லக்கேஜ்களை பாதுகாப்பாக வைக்க போதிய இடம் இல்லாமல் இருந்தது. வெகு தொலைவிற்கு செல்ல வேண்டிய பயணிகள் ரயில் நிலையத்திற்குள் எங்கு சென்றாலும் லக்கேஜ்களை தூக்கி செல்ல வேண்டிய நிலையே இருந்தது.
இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். வயதான மற்றும் சிறு குழந்தைகளுடன் வரும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை இருந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக சூப்பர் ஏற்பாடு ஒன்றை ரயில்வே தற்போது கையில் எடுத்துள்ளது. அதாவது, ரயில் நிலையத்தில் தற்போது டிஜிட்டல் லாக்கர் அறை வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
எந்த பிளாட்பார்ம்
பிளாட்பார்ம் 2-ன் நுழைவு வாயில் பகுதியில் இந்த டிஜிட்டல் லாக்கர் அறை திறக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று வகையான லாக்கர்கள் உள்ளன. நடுத்தரம், பெரியது, மிகப்பெரியது ஆகிய 3 வகைகளில் லாக்கர் அறைகள் உள்ளன. அவற்றின் அளவிற்கு ஏற்ப கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வகை லாக்கர்களில் பொருட்களை வைக்க 3 மணி நேரத்துக்கு ரூ.40 கட்டணம் ஆகும். 6 மணி நேரத்துக்கு ரூ.60ம், 9 மணி நேரத்துக்கு ரூ.90-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கட்டணம் எவ்வளவு
பெரிய வகை லாக்கர்களுக்கு 3 மணி நேரத்துக்கு ரூ.50, 6 மணி நேரத்துக்கு ரூ.80, 9 மணி நேரத்துக்கு ரூ.120-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மிகப்பெரிய லாக்கர் பெட்டிகளுக்கு 3 மணி நேரத்துக்கு ரூ.60, 6 மணி நேரத்துக்கு ரூ.100, 9 மணி நேரத்துக்கு ரூ.150-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, ஒரு நாளைக்கு டிஜிட்டர் லாக்கர் பெட்டியை பயன்படுத்த நடுத்தர பெட்டிகளுக்கு ரூ.120, பெரிய பெட்டிகளுக்கு ரூ.160, மிகப்பெரிய பெட்டிகளுக்கு ரூ.200 கட்டணமாகும். மொத்தம் 84 லாக்கர் பெட்டிகள் இங்கு உள்ளது.
பயன்படுத்துவது எப்படி?
டிஜிட்டல் லாக்கர் பெட்டிகள் முழுவதும் செல்போன் மூலமே இயங்கக்கூடியது. பயணிகள் இதை பயன்படுத்த வேண்டும் என்றால் தங்கள் செல்போனில் உள்ள கூகுள் லென்ஸ் வழியாக, டிஜிட்டல் லாக்கரில் உள்ள கியூ-ஆர் கோடை ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். பின்னர், தங்களுக்கு தேவையான டிஜிட்டல் லாக்கரை தேர்வு செய்து கட்டணம் செலுத்தி லக்கேஜ்களை வைக்க வேண்டும். எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோமோ அதற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
செல்போன் இன்றி இந்த லாக்கர் வசதியை பயன்படுத்த முடியாது. எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோம் என்ற விவரங்கள் செல்போன் வழியாக தெரிவிக்கப்பட்டு விடும். லாக்கரை ஒபன் செய்ய கியூ ஆர் கோடு கொண்டே திறக்க முடியும். இந்த லாக்கரில் எளிதில் தீ பிடிக்க கூடிய பொருட்களை வைக்க அனுமதி கிடையாது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் இதர தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து நீண்ட நேரம் கழித்தே அடுத்த ரயிலை பிடித்து செல்வதை காண முடிகிறது. அப்படியான பயணிகள் லக்கேஜ்களை எங்கு சென்றாலும் கைகளில் தூக்கி கொண்டு இனி அலைய வேண்டியது இல்லை. இந்த லாக்கரில் வைத்து பூட்டி செல்லலாம் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications