AMMK: மொத்தம் 24 வேட்பாளர்கள்.. அதில் முத்து போல 3 பெண்கள்!
சென்னை: அமமுகவின் முதல் கட்ட லோக்சபா வேட்பாளர்கள் பட்டியலில் 3 பெண்களுக்கு இடம் கொடுத்துள்ளார் டிடிவி தினகரன்.
யாருடன் கூட்டணி என்பதில் பெரும் குழப்பமாகி கடைசியில் குட்டிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறார் தினகரன். இன்று தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.
24 லோக்சபா தொகுதிகளுக்கும், 9 சட்டசபை தொகுதிகளுக்கும் அவர் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். லோக்சபா வேட்பாளர்களில் 3 பேர் பெண்கள் ஆவர். அதில் இருவர் தனித் தொகுதி வேட்பாளர்கள் ஆவர்.

சாருபாலா தொண்டைமான்
திருச்சி லோக்சபா தொகுதி வேட்பாளராக சாருபாலா தொண்டைமான் அறிவிக்கப்பட்டுள்ளார். பாரம்பிரய காங்கிரஸ்காரரான இவர் பின்னர் தமாகவிலும் இணைந்து செயல்பட்டார். திருச்சி மாநகராட்சியின் மேயராகவும் இருந்துள்ளார். பிறகு அதிலிருந்து விலகிய அவர் தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

தென்காசி பொன்னுத்தாய்
தென்காசி தனித் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் பொன்னுத்தாய் சுரேஷ். ஆசிரியர் பயிற்சி வகுப்பை முடித்துள்ள இவர் ஜவுளிக் கடை தொழிலில் ஈடுபட்டுள்ளார். சாதாரண தொண்டராக இருந்து மகளிர் அணி செயலாளர் பதவிக்கு உயர்ந்து வந்தவர்.

நாகை செங்கொடி
நாகை தனி தொகுதியில் செங்கொடி போட்டியிடுகிறார். திருவாரூர் மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்து வரும் செங்கொடி ஒரு வழக்கறிஞர் ஆவார். தினகரன் அறிவித்துள்ள இளம் வயது வேட்பாளர்களில் இவரும் ஒருவர். நாகையில் புயல் பாதித்த பகுதிகளில் அதிமுகவுக்கு உள்ள மிகப் பெரிய கெட்ட பெயரை லாபகரமாக்க முயல்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தலித் பிரதிநிதித்துவம்
எடுத்த எடுப்பிலேயே முதல் பட்டியலிலேயே 2 தலித் பெண்களுக்கு தனது வேட்பாளர் பட்டியலில் தினகரன் இடம் கொடுத்திருப்பது ஆச்சரியத்தையும், பாராட்டுதல்களையும் ஒரு சேர பெற்றுக் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications