75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள்
திண்டுக்கல்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் அதிமுகவின் மிக மூத்த சீனியர்களில் ஒருவரான திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து களம் இறங்குகிறார் திமுகவின் அமைச்சரான ஐ.பெரியசாமியின் மகனான ஐபி செந்தில் குமார். 75 வருட திண்டுக்கல் சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் இதுவரை இரண்டு முறை மட்டுமே அதிமுகவும் திமுகவும் நேருக்கு நேர் மோதி இருக்கிறது. குறிப்பாக இந்த முறை தான் முதல்முறையாக அதிமுக மாவட்ட செயலாளரும், திமுக மாவட்ட செயலாளரும் நேருக்கு நேர் மோதுவது குறிப்பிடத்தக்கது.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது தமிழக சட்டசபை தேர்தல் களம். பார்த்து பார்த்து வேட்பாளர்களை தேர்வு செய்திருக்கிறது திமுகவும் அதிமுகவும். இதனால் பல தொகுதிகளில் வெற்றியை பெற முட்டி மோதுகின்றனர் வேட்பாளர்கள்.
அந்த வகையில் அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரும், மிக மூத்த சீனியரும், அதிமுகவின் பொருளாளர், அமைப்பு செயலாளர், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் என பல பதவிகளை வகித்து வரும் திண்டுக்கல் சீனிவாசன் மூன்றாவது முறையாக திண்டுக்கல்லில் களம் இறங்குகிறார்.

2026 சட்டசபை தேர்தல்
அவரை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும் திண்டுக்கல் திமுக மாவட்ட செயலாளர் ஆன ஐபிஎஸ் செந்தில்குமார் களமிறங்குகிறார். திண்டுக்கல் சீனிவாசனுக்கு இது எட்டாவது தேர்தல் என்பதும், ஐபி செந்தில் குமாருக்கு இது நான்காவது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. 75 வருட திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி வரலாற்றில் முதன்முறையாக இரு கட்சிகளின் மாவட்ட செயலாளர்களும் நேருக்கு நேர் மோதுகின்றனர். அது மட்டுமல்லாமல் இதுவரையிலான சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இரண்டு முறை மட்டுமே திமுகவும் அதிமுகவும் நேருக்கு நேர் மோதியுள்ளன.
திண்டுக்கல் வரலாற்றுப் போட்டி
திண்டுக்கல் தொகுதியில் வரலாற்றை பார்க்கும் பொழுது 1952 தேர்தலில் காங்கிரஸும் சிபிஐ கட்சியும் நேருக்கு நேர் மோதின. அதற்குப் பிறகு இந்த போட்டி 1957ல் காங்கிரஸ் - சிபிஐ, 1962ல் காங்கிரஸ்- சிபிஐ என இருந்தது. 1967 சிபிஎம் -காங்கிரஸ், 1971ல் காங்கிரஸ் -சுயேச்சை, 1977 இல் சிபிஎம் - திமுக, 1980 இல் சிபிஎம் -காங்கிரஸ், 1984 இல் அதிமுக - சிபிஎம் என இருந்தது.
திமுக - அதிமுக
அதற்குப் பிறகு 1991 தேர்தலில் அதிமுகவின் நிர்மலா சிபிஎம் கட்சியின் தங்கராஜனை தோற்கடித்தார். 1996 சட்டமன்ற தேர்தலில் தான் திமுகவின் மணிமாறன் அதிமுகவின் மருததராஜை நேருக்கு நேர் சந்தித்தார். இதில் மணிமாறன் வெற்றி பெற்றார். அதற்கு பிறகு மூன்று தேர்தல்களில் அதிமுகவும் திமுகவும் கூட்டணி மாறி மாறி இருந்த சிபிஎம் கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியை ஒதுக்கியது. அதில் திமுக, மதிமுக, பாமக வேட்பாளர்களை தோற்கடித்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்றார் பாலபாரதி.
திண்டுக்கல் சீனிவாசன்
கடைசியாக 2016 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் பசீர் அகமதுவை நேருக்கு நேர் சந்தித்து வெற்றி பெற்றார் சீனிவாசன். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சீனிவாசனை எதிர்த்து போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் பாண்டி தோல்வி அடைந்தார்.
திண்டுக்கல் சீனிவாசன் vs ஐபி செந்தில் குமார்
இந்த நிலையில் 75 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக அதிமுகவின் மாவட்ட செயலாளர், திமுகவின் மாவட்ட செயலாளரை எதிர்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கட்சி செல்வாக்கு, சமுதாய செல்வாக்கு, இளைஞர் படை என இருவரும் சரிசமமான போட்டியோடு இருக்கின்றனர். அதே நேரத்தில் ஒருவேளை இருவரில் யாராவது ஒருவர் தோற்றால்? அதற்கு அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் காரணமாக இருக்கும் என்கின்றனர் திண்டுக்கல் அரசியல் பார்வையாளர்கள். அந்த குடும்பத்தினர் யார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.!












Click it and Unblock the Notifications