கண்சிவந்த அமீர்.. நீட் விவகாரத்தில் தவெக மட்டுமின்றி திமுகவையும் விடாத இயக்குநர்.. ரகசியம் எங்கே? என கேள்வி
சென்னை: ''ஜனநாயகத்திற்காக ஒரு சிறு கூட்டம் போராடி கொண்டிருக்கும் வேளையில் 'ஜனநாயகன்' திரைப்படத்தை காப்பாற்ற ஒரு பெருங்கூட்டம் போராடி கொண்டிருக்கிறது. இதில் ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்றால் நீட் தேர்வை கொண்டு வராமல் நாங்கள் பார்த்துக்கிறோம். எங்களிடம் அதற்கான ரகசியம் இருக்கு என்று சொல்வார்கள். அவர்களும் ஆண்டு முடிச்சிட்டுட்டு போய்ருவாங்க. கடைசி வரை ரகசியத்தை சொல்லவும் மாட்டாங்க. தடை வாங்குவதும் இல்லை'' என்று தவெக மற்றும் திமுகவினரை விமர்சனம் செய்துள்ளார் இயக்குநர் அமீர்.
'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லி உள்பட பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இயக்குநர் பா ரஞ்சித் தலைமையில் நீலம் மாணவர் இயக்க தொண்டர்களும், கல்லூரி மாணவர்களும் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் இயக்குநர்கள் வெற்றி மாறன், அமீர், ரஞ்சித், நடிகைகள் ரேவதி, ஆண்ட்ரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் அமீர் பேசும்போது திமுக மற்றும் தற்போதைய தவெக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
ஜனநாயகத்திற்காக ஒரு சிறு கூட்டம் போராடி கொண்டிருக்கும் வேளையில் 'ஜனநாயகன்' திரைப்படத்தை காப்பாற்ற ஒரு பெருங்கூட்டம் போராடி கொண்டிருக்கிறது. அந்த கூட்டம் இதை விட பெரிய கூட்டமாக இருக்கலாம். ஆனால் இந்த கூட்டம் அவர்களை விட அறிவார்ந்த கூட்டம் என்பதை நான் சொல்லி கொள்கிறேன்.
இதற்கு முன்பு பேசிய சகோதரி ரேவதி (நடிகை) நீட் பற்றி தனக்கு எந்த அறிவும் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் நீட் தேர்வை கொண்டு வந்தவர்களுக்கு மட்டும் எந்த அறிவும் இருந்ததா என்ன? அவனுக்கும் அறிவு இல்லை. நம் மக்கள் நல்லா இருக்க வேண்டும் என்ற சிந்தனை இருந்தால் போதும். அந்த சிந்தனை தான் நம் அனைவரையும் இங்கே ஒன்றாக இணைத்துள்ளது.
10 ஆண்டுகளாக நீட் தேர்வு எதிராக போராட்டம் நடத்தி வருகிறோம். நீட் வருவதற்கு முன்பாகவே நான், வெற்றி மாறன், திருமுருகன் காந்தி என எல்லோரும் சென்னை பிரஸ்கிளப்பில் பேசினோம். டேய் எங்கள் வீட்டு பிள்ளைகள் டாக்டர் படிக்கப்போகிறது இல்லை. உங்கள் வீட்டு பிள்ளைகள் தான் படிக்கப்போகிறார்கள். நான் எல்லாம் அதனை கடந்து வந்துவிட்டேன். நான் படிக்கவில்லை என்று பத்திரிகையாளர், அடுத்த தலைமுறையை பார்த்து அன்று கூறினோம். அதனை யார் காது கொடுத்து கேட்டார்கள்? என்று தெரியவில்லை.
அனிதாவின் மரணத்தில் தொடங்கிய ஓலம் இன்று வரை நிற்கவே இல்லை. இதில் ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்றால் நீட் தேர்வை கொண்டு வராமல் நாங்கள் பார்த்துக்கிறோம். எங்களிடம் அதற்கான ரகசியம் இருக்கு என்று சொல்வார்கள். அவர்களும் கொண்டு வரமாட்டாங்க. அவர்களும் ஆண்டு முடிச்சிட்டுட்டு போய்ருவாங்க. கடைசி வரை ரகசியத்தை சொல்லவும் மாட்டாங்க. தடை வாங்குவதும் இல்லை.
அனிதாவின் மரணத்தில் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறியவரும் (முதல்வர் விஜய்) அதிகாரத்தில் இருப்பார்கள். அவர்களும் எதுவும் செய்யமாட்டார்கள். ரொம்ப முக்கியமாக கவனிக்க வேண்டும். ஆட்சியாளர்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஏதாவது கொண்டு வருவார்கள் என்பது ஒரு ஏமாற்று வேலை. அதனை எந்த ஆட்சியாளர்களும், கட்சியும் செய்யாது என்பதை நான் ஆழமாக நம்புகிறேன்.
உண்மையிலேயே நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் டெல்லியில் நடக்கிறது. அந்த மாணவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று நினைத்தால் தமிகத்தில் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்று நினைக்கும் கட்சியும், அதிகாரத்தில் உள்ள கட்சியும் நினைத்தால் முடியும். ஆனால் அவர்கள் அப்படி செய்யமாட்டார்கள்.
ஆனால் ஒவ்வொரு கட்சியிடம் கேட்டால் எங்களிடம் ஒன்றரை கோடி தொண்டன் இருக்கிறான். 2 கோடி தொண்டன் இருக்கிறான். ஒன்றரை கோடி வாக்கு உள்ளது. 50 லட்சம் வாக்கு, 80 லட்சம் வாக்குகள் உள்ளது என்பார்கள். உங்களின் தொண்டர்கள் எங்கே போனார்கள்? நீங்கள் சொன்னால் கேட்பார்கள் தானே. ஆனால் சொல்லமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அரசியல் என்பது பிழைப்பு வாதம்.
இங்கு ஜேம்ஸ் வசந்தன் பேசியபோது தமிழ்நாடு எப்போதும் சிந்திக்கிற கூட்டம் என்று கூறினார். அந்த பெயர் எல்லாம் எப்போதோ போய்விட்டது. வெளியில் சொல்ல முடியவில்லை. என்னமோ சொல்லி எங்களின் மூளையை சலவை செய்யாதீர்கள். அந்த கூட்டம் எல்லாம் எங்கேயோ போய் வேற பக்கம் திரும்பி தியேட்டர் பக்கம் நிற்கிறது. அந்த கூட்டம் இருந்தது. ஆனால் இப்போது வேறொருவர் எடுத்து கொண்டு போய்விட்டார்'' என்று விமர்சனம் செய்தார்.
நீட் விவகாரத்தில் ஆண்ட திமுக, ஆளும் தவெகவை இயக்குநர் அமீர் கோபமாக விமர்சித்ததன் பின்னணியில் 2 விஷயம் உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது திமுக ஆட்சிக்குவந்தவுடன் தமிழகத்துக்கு நீட் விலக்கு பெற்று தரப்படும் என்று கூறியது.அதோடு உதயநிதி ஸ்டாலினோ நீட் ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களிடம் உள்ளது என்று கூறியிருந்தார். ஆனால் 5 ஆண்டு ஆட்சியை திமுக நிறைவு செய்தாலும் நீட் ரத்து, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு உள்ளிட்டவற்றை பெற்று கொடுக்கவில்லை.
அதேபோல் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்தி விஜய்யின் தவெக ஆட்சியை பிடித்தது. விஜய்யும் நீட் தேர்வுக்கு எதிரான கொள்கையை தான் வைத்துள்ளார். ஆனால் தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நீட் தேர்வு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக மாணவ - மாணவிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களை தமிழக போலீசார் கைது செய்கின்றனர். இப்படி தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக இருக்கும் இருகட்சிகளும் சொன்னதை செய்யவில்லை என்பதால் தான் இயக்குநர் அமீர் கொந்தளித்து பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications
