சீமான்-பிரபாகரன் போட்டோ உண்மையை சொன்ன இயக்குனருக்கு நேர்ந்த கதி! நாதக கட்சியினர் தொடர் டார்ச்சர்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்தது நான் தான் என இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் பேசியது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தனது தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னையும் தனது வீட்டுப் பெண்களையும் அருவருக்கத்தக்க வார்த்தைகளில் விமர்சிப்பதாக இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் பரபரப்பு புகாரைக் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் மூலம் பிரபலமாகி அதற்குப் பிறகு அரசியல் என குதித்து பிரபலமானவர் சீமான். தொடர்ந்து தனது கட்சி நிகழ்ச்சிகளிலும் மேடைகளிலும் பிரபாகரனை சந்தித்தது குறித்து பல கதைகளை சொல்லி வந்திருக்கிறார்.

அதனைக் கேட்டு நாம் தமிழர் கட்சியினரும் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்வது வழக்கம். இந்த நிலையில் பெரியார் குறித்து சீமான் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திடீரென சீமானின் பெயர் அதிகமாக அடிபடத் தொடங்கியது.
அதற்கு காரணம் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறிய அதிர்ச்சி தகவல். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பிரபாகரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பலரும் அது போலியாக இருக்கத்தான் வாய்ப்புள்ளது என கூறினர்.
இது தொடர்பாக மௌனம் கலைத்த சீமான், "15 வருடங்களுக்கு முன்பு அந்த புகைப்படம் வெளியானது. 15 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்டதோடு அது போலி என்பதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள்” என சவால் விடுத்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்து இருந்த சங்ககிரி ராஜ்குமார் சீமான் பிரபாகரன் இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதே ஆதாரம் தான்.. எனவும் அதற்கு ஒரு ஆதாரத்தை எங்கிருந்து கொண்டு வந்து காட்ட வேண்டும் என தெரியவில்லை. உலகம் முழுவதும் புகைப்படங்கள் எப்படி இணைக்கப்படுகிறது என காட்டப்பட்டு கொண்டே இருக்கிறது. நானும் காட்ட வேண்டும் என சீமான் எதிர்பார்க்கிறார்” என பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தனது தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னையும் தனது வீட்டுப் பெண்களையும் அருவருக்கத்தக்க வார்த்தைகளில் விமர்சிப்பதாக இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் பரபரப்பு புகாரைக் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," அண்ணனின் தம்பிகளுக்கு வணக்கம். கடந்த நான்கு ஐந்து நாட்களாக என் அலைபேசிக்கு நேரடியாகவும் வாட்ஸ் அப் மூலமாகவும் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கிறீர்கள். அழைப்பை எடுத்தால் வீட்டில் இருக்கும் பெண்களை வசை பாடுகிறீர்கள் அல்லது மிரட்டுகிறீர்கள். அதற்காக அச்சப்பட்டு கொண்டு இந்த பதிவை எழுதவில்லை.
அண்ணனின் தம்பிகளுக்கு வணக்கம்.
— Sankagiri RAJKUMAR (@Rajkumar_Dir) January 24, 2025
கடந்த நான்கு ஐந்து நாட்களாக என் அலைபேசிக்கு நேரடியாகவும் வாட்ஸ் அப் மூலமாகவும் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
அழைப்பை எடுத்தால் வீட்டில் இருக்கும் பெண்களை வசை பாடுகிறீர்கள் அல்லது மிரட்டுகிறீர்கள்.
அதற்காக அச்சப்பட்டு கொண்டு இந்த… pic.twitter.com/AJ0jN50osn
கசப்பை சுவைத்த உங்கள் நாவிற்கு இந்த ஆபாச வார்த்தைகள் தான் ஆறுதல் தரும் என்றால் பேசிவிட்டு போங்கள். இடையிடையே டேய்..சங்ககிரி ராஜ்குமார் நீ எந்த ஊர் காரன்டா என்று கேட்டு சிரிப்பும் மூட்டுகிறீர்கள். உங்கள் அச்சுறுத்தலுக்கோ.. ஆபாச வசவுகளுக்கோ நான் கவலைப்படவில்லை. உங்களிடம் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்.
எனக்கு அழைப்பதற்கு முன்பாக உங்கள் முகப்பு படமாக வைத்திருக்கும் தலைவர் பிரபாகரன் படத்தை நீக்கிவிட்டாவது அழையுங்கள். வீரம் நிறைந்த அவர் புகைப்படத்தை கண்களில் பார்த்துக் கொண்டே, காதுகளில் உங்கள் அழுக்கு வார்த்தைகளை கேட்பதற்கு அருவருப்பாக இருக்கிறது. உலகே கண்டு வியந்த ஒரு ஒப்பற்ற தலைவரை முடிந்த வரை இழிவு செய்து விட்டீர்கள் இனியேனும் விட்டு விடுங்கள்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications