சன் பிக்சர்ஸ் உருவாக்கிய விஜய்! மாஸாக மாற்றிய ரெட் ஜெயன்ட்! விலாவாரியாக விளக்கிய பிரபல இயக்குநர்!
சென்னை: விஜய் ஒரு நட்சத்திரம்.. அவர் 'சூப்பர்ஸ்டார்' அந்தஸ்தை அடைவதற்கும், அரசியல் தலைவராக மாறுவதற்கும் அவரது தனிப்பட்ட திறமை மட்டும் போதாது. அது பல ஆண்டுகளாக ஊடகம், பெருநிறுவனங்கள் (Corporates) மற்றும் அரசியல் அதிகார மையங்கள் தங்களின் சுயலாபத்திற்காகப் பின்னிக் கொண்ட ஒரு சிலந்தி வலை என கூறியுள்ளார் பிரபல இயக்குநரான சீனு ராமசாமி.
இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்திய அளவிலும் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாகவும், அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும் உருவெடுத்துள்ளார் விஜய்.
ஒரு சாதாரண நடிகராக அறிமுகமாகி, இன்று இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை அவர் கட்டமைத்ததற்கு அவரது தனிப்பட்ட உழைப்பு, நடனம், பொறுமை ஆகியவை அடித்தளமாக அமைந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால், ஒரு சாதாரண கலைஞன், கோடிக்கணக்கான மக்களின் ரட்சகனாகவும், ஆளும் வர்க்கத்தையே அச்சுறுத்தும் அரசியல் சக்தியாகவும் உருவெடுப்பது ஒரு இரவில் நடக்கும் வித்தையல்ல. ஒரு நட்சத்திரம் 'சூப்பர்ஸ்டார்' அந்தஸ்தை அடைவதற்கும், அரசியல் தலைவராக மாறுவதற்கும் அவரது தனிப்பட்ட திறமை மட்டும் போதாது. அது பல ஆண்டுகளாக ஊடகம், பெருநிறுவனங்கள் (Corporates) மற்றும் அரசியல் அதிகார மையங்கள் தங்களின் சுயலாபத்திற்காகப் பின்னிக் கொண்ட ஒரு சிலந்தி வலை.
இன்று அந்த வலையில் அவர்களே சிக்கிக் கொண்டுள்ளார்கள் என்பதுதான் காலத்தின் மிகப்பெரிய முரண். திரைத்துறையில் விஜய் அவர்கள் அடைந்திருக்கும் அசுர வளர்ச்சியும், இன்று அவர் முன்னிறுத்தும் அரசியல் பிம்பமும், இந்த சமூக அரசியல் கார்ப்பரேட் கட்டமைப்பால் உருவாக்கப்பட்டது ஒரு முக்கிய காரணம். அதை யாரும் மறுக்க முடியாது. ஒரு நடிகர், ஒரு கட்டத்தில் அரசியல் தலைவராக மாறுவதற்கு அவரைச் சுற்றியுள்ள ஊடக மற்றும் பொருளாதாரக் காரணிகள் மிகப்பெரிய வினையூக்கிகளாகச் செயல்பட்டன என்பது உண்மை.
90களின் பிற்பகுதியிலும் 2000களின் தொடக்கத்திலும் தமிழ்நாட்டில் சன் தொலைக்காட்சி மிகப்பெரிய தகவல் தொடர்புப் புரட்சியை ஏற்படுத்தியது. 'ஒலியும் ஒளியும்', 'டாப் 10 மூவிஸ்', 'பாட்டுக்கு பாட்டு' போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விஜய்யின் நடன அசைவுகளும், துள்ளலான பாடல்களும் கிராமப்புறங்கள் வரை தினசரி கொண்டு செல்லப்பட்டன.
குறிப்பாக, 'ஷாஜகான்' திரைப்படத்தில் வரும் "சரக்கு வச்சிருக்கேன்... கருத்த கோழி மிளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்" பாடலில் மீனாவுடனும், 'யூத்' திரைப்படத்தில் வரும் "ஆல்தோட்ட பூபதி" பாடலில் சிம்ரனுடனும் அவர் ஆடிய அசாத்தியமான நடன அசைவுகள் சாதாரண ரசிகர்களையும் பாமர மக்களையும் திரையரங்குகளை நோக்கிக் காந்தம்போல இழுத்தன. இதுபோன்ற பாடல்களின் துள்ளலான இசையும், புகழ்பெற்ற தொலைக்காட்சிகளின் வழியான தொடர் விளம்பரமும்தான் ஒரு மாஸ் ஹீரோவுக்கான வியாபார எல்லையையும், ரசிகர் பட்டாளத்தையும் விரிவுபடுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தன.
சன் பிக்சர்ஸ் திரைப்பட விநியோகம் மற்றும் தயாரிப்பில் களமிறங்கிய பிறகு, 'வேட்டைக்காரன்', 'சுறா' முதல் சமீபத்திய 'சர்க்கார்', 'பீஸ்ட்' வரை அவர்கள் வழங்கிய பிரம்மாண்டமான ஊடக வெளிச்சம் விஜய்யை பட்டிதொட்டியெங்கும் ஒரு அசைக்க முடியாத பிராண்டாக நிலைநிறுத்தியது. ஒரு நடிகர், 'பாக்ஸ் ஆபிஸ் சூப்பர் ஹீரோ' என முத்திரை குத்தப்படுவதற்கு, பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் அவரை நம்பி கோடிகளை முதலீடு செய்ய முன்வர வேண்டும்.
2008-ல் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக விஜய் அவர்களுக்கு 'குருவி' திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆளும் கட்சியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தயாரிப்பாளர் தனது முதல் படத்துக்கு விஜய்யைத் தேர்ந்தெடுத்தார் என்ற செய்தியே, திரைத்துறையில் விஜய்யின் வியாபார எல்லையையும், ஆளுமையையும் பல மடங்கு விரிவுபடுத்தி, கார்ப்பரேட் முதலீடுகளின் மையமாக அவரை மாற்றியது. திரையில் உருவாகும் 'மாஸ்' பிம்பம், நிஜ வாழ்வில் அரசியல் வடிவமாக மாறுவதற்குப் பொது மேடைகளும், அதிகாரத்துடனான உரசல்களும் அவசியமாகின்றன.
கலைஞர் காலத்துப் பாராட்டு விழாக்கள் அதற்கும் காரணம்.
2006-2011 காலகட்டத்தில் அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நடந்த பல பிரம்மாண்டமான பாராட்டு விழாக்களில் விஜய் தொடர்ந்து பங்கேற்றார். அரசியல் தலைவர்களுடன் மேடையைப் பகிர்வது, ஒரு 'எண்டர்டெயினர்' என்ற வட்டத்திலிருந்து அவரை வெளியே கொண்டு வந்து, சமூக நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு பொது ஆளுமையாக மக்களின் ஆழ்மனதில் பதிய வைத்தது.
அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் தங்கள் பக்கம் நின்று தங்களை வாழ்த்த வேண்டும் என்று எதிர்பார்த்தது அவர்களை வளர்க்கக் காரணமாக அமைந்தது.
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் காலகட்டத்தின் அரசியல் முரண்களை முக்கியமாகப் பார்க்கிறேன். ஒருவர் அரசியல் தலைவனாக மாறுவதற்கு, அதிகாரத்தை எதிர்கொள்ளும் ஒரு 'கலகக்காரனாக' உருவெடுக்க வேண்டும் என்பார் சேகுவேரா. இதுதான் எம். ஜி. ஆர் செய்தார். 2011-ல் 'காவலன்' வெளியீட்டுச் சிக்கலில் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆதரவு கோரியது முதல், 2013-ல் 'தலைவா' திரைப்படத்திற்கு "Time to Lead" வாசகத்தால் ஏற்பட்ட தடை வரை பல முரண்களை விஜய் சந்தித்தார். இந்த நெருக்கடிகள் விஜய்க்கு மிகப் பெரிய அனுதாப அலையை ஏற்படுத்தின.
"அதிகாரத்தால் நசுக்கப்படும் நாயகன்" என்ற பிம்பம் பொதுமக்கள் மத்தியில் இயல்பாக உருவானது. இதுவே அவரை ஒரு எதிர்காலத் தலைவராகப் பார்க்க இளைஞர்களைத் தூண்டியது. இங்கு அதிகார மையங்கள் இழைத்த வரலாற்றுப் பிழையுண்டு. அரசியல் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் சுயலாபத்திற்காக இழைத்த ஒரு மாபெரும் வரலாற்றுப் பிழை இன்று அவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
அந்தப் பிழை நானறிந்து "சிறிய படங்களையும், புதிய படைப்பாளிகளையும் புறக்கணித்தது."
இந்த அதிகார மையங்களும், பெருநிறுவனங்களும் கலையை ஜனநாயகப்படுத்துவதற்குப் பதிலாக, உடனடி லாபத்திற்காகத் திரைப்படத் துறையை ஒரு சில நட்சத்திரங்களின் கைகளில் மட்டுமே சுருக்கினார்கள்.
புதியவர்களின் எதார்த்தமான படங்களை ஊக்குவித்திருந்தால் இந்த நிலை நீடித்திருக்குமா எனத் தர்க்கபூர்வமாக ஆராய்ந்தால், கீழ்க்காணும் உண்மைகள் புலப்படும்.
பல நூறு கோடிகளை ஒரு மாஸ் ஹீரோ படத்திற்கு முதலீடு செய்வதற்குப் பதிலாக, அதே தொகையைச் சிறிய படங்களுக்குப் பகிர்ந்தளித்திருந்தால், தமிழ் சினிமாவிற்குப் பல புதிய சிந்தனைகளும், படைப்பாளிகளும் கிடைத்திருப்பார்கள். சினிமா மக்களின் வாழ்வியலைப் பேசும் கலையாகப் பரிணமித்திருக்கும். மக்களும் பலதரப்பட்ட கதைகளை ரசித்துப் பழகியிருப்பார்கள். அதிகார மையங்கள் செய்த இந்தத் துரித கார்ப்பரேட் வியாபாரம், கலையின் வளர்ச்சியைத் தடுத்துவிட்டது. எதார்த்தமான சிறிய படங்கள் பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்திருக்கும்.
இதைத்தான் சினிமா ரசனை கல்வியின் அவசியமாக அமரர் பாலு மகேந்திரா அவர்கள் கலைஞர் அவர்களின் மேடையில் பேசினார். பின்னாளில் நானும் ஒரு நீண்ட கடிதம் இது பற்றி அன்றைய முதல்வர் கலைஞர் ஐயாவுக்கு எழுதினேன். சினிமா ரசனை கல்வியின் வழியாக தர்க்கபூர்வமான ரசிகர்கள் தோன்றுவார்கள் என்பது அதன் சாராம்சமாக இருந்தது. உண்மையில் மாஸ் படங்கள் பார்வையாளர்களைக் கண்மூடித்தனமான பக்தர்களாக மாற்றும். பெருநிறுவனங்கள் தங்களின் முதல் நாள் வசூலுக்காகவும், விளம்பரங்களுக்காகவும் இந்த ரசிகர் மன்றங்களை உசுப்பேற்றி, ஒருங்கிணைக்க மறைமுகமாக உதவினார்கள்.
சிறிய படங்கள் அதிகம் வந்திருந்தால் மேற்கு வங்கத்தைப் போலவோ கேரளாவைப் போலவோ கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்நாடு மாறியிருக்கலாம். "சினிமா மட்டும் எங்கள் கையில் கிடைத்திருந்தால் புரட்சி 10 வருடங்களுக்கு முன்பாக கிடைத்திருக்கும்" என்றார் மாமேதை லெனின். அப்படி ஒரு சாதனம் சினிமா; அதுவும் ஒரு கல்விச்சாலைதான். அமைப்பு ரீதியாகத் திரளாத எந்தக் கூட்டமும் அரசியல் அதிகாரத்திற்கு வாக்கு வங்கி ரீதியாக அச்சுறுத்தலாக மாறாது.
சிறிய பட்ஜெட் படங்கள் வாழ்வியல் எதார்த்தங்களைப் பேசும். அங்கு நாயகன் ஒரு சாதாரண மனிதன். ஆனால், கார்ப்பரேட்கள் பல நூறு கோடிகளை இறைத்து, திரையில் ஒரு தனி மனிதன் ஒட்டுமொத்த அரசாங்கத்தையோ, கார்ப்பரேட் உலகத்தையோ ஒற்றை ஆளாக நின்று வீழ்த்துவதைப் போலப் பிரம்மாண்டமான 'ரட்சகன்' பிம்பத்தைக் கட்டமைத்தார்கள். இந்த பிம்பமே பாமர மக்களிடம் அவரை ஒரு தலைவராகப் பதிய வைத்தது. சிறிய எதார்த்தப் படங்களில் இந்த மாய பிம்பத்தை உருவாக்கியிருக்க முடியாது.
"நாம் எதை உருவாக்குகிறோமோ, அதுவே ஒரு நாள் நம்மை ஆளத் தொடங்கும்" என்பது இந்த தேர்தல் அரசியல் விதி. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு வந்ததை நாம் அறிவோம். ஆனால் அவருடைய ஆன்மீகப் பணி, அதன் தத்துவங்கள், அரசியல் அற்ற ஒரு தொண்டனாகத் தன்னை அவர் மாற்றிக்கொண்டார்.
ஒரு வினோதமான உண்மை என்னவென்றால், தான் செய்த பூதத்தைப் பார்த்துத் தானே அஞ்சும் மந்திரவாதிகள்தான் நம்மவர்கள்.
ஒரு நாயகனுக்குத் தங்களின் தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரம் கொடுத்து வளர்ப்பதும், பதிலுக்கு அந்த நாயகன் மூலம் தங்களின் வர்த்தகத்தையும், அரசியல் பிம்பத்தையும் பெருக்கிக்கொள்வதும் ஒரு 'பரஸ்பர வியாபாரமாகவே' இது தொடங்கியது. இதை யாரும் மறக்க முடியாது. அவர்கள் புதிய இளம் படைப்பாளிகளுக்கு ஆதரவு கொடுத்து, சிறப்பான சிறிய படங்களை ஊக்கப்படுத்தி, கலையைச் செழிக்க விட்டிருந்தால், எந்த ஒரு நடிகருக்கும் முதலமைச்சருக்கு இணையான அதிகாரப் பிம்பம் உருவாகியிருக்கவே முடியாது.
இன்று திரையிலிருந்து எழுந்து வந்து, தற்போதைய அரசியல் கட்டமைப்பையே ஆட்டம் காணச் செய்யும் ஒரு மாபெரும் சக்தியாக எந்த நடிகரும் உருவாகியிருக்கவும் மாட்டார். ஆகவே, இன்று உருவாகியிருக்கும் விஜய்யின் நாயக பிம்பம் என்பது அவரது தனிப்பட்ட ஆளுமை என்பதைத் தாண்டி, எந்த இடத்திலும் நிதானம் இழக்காமல் தமக்கு ஏற்பட்ட தடைகளையே தமக்கான படிக்கட்டுகளாக மாற்றிய அவரது பொறுமையான அணுகுமுறையும் இங்கு மறுப்பதற்கில்லை.
ஆனால் திமுக, அதிமுக இருவரும் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொண்ட ஒரு தவிர்க்க முடியாத எதிர்வினையும் சேர்ந்தே உருவாக்கிய பிம்பம்தான் விஜய் அவர்கள் என்பது என் அவதானிப்பு.
இன்றைய விஜய் அவர்களின் மேடைப்பேச்சுகளைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அவர் மிகத் தெளிவாகத் திட்டமிட்டுத் தன்னை உருவாக்கி இருக்கிறார் என்று தெரிகிறது. உள்ளூர் தேர்தல்களில் நேரடியாகப் பங்கேற்காமல் மறைமுகமாகப் பல காலம் அவர் செயல்பட்டு இருப்பதும் அறிய முடிகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நூலகத்துறை, புத்தகங்கள், நூலகக் கண்காட்சிகளுக்குத் தமிழக அரசு தந்த முக்கியத்துவம் உண்மையில் மகத்தான பாராட்டுக்குரியது. அதே சமயம் கடந்த காலங்களில் சினிமாவிற்கும் ஆக்கபூர்வமான கலை வடிவங்களுக்கும், அந்தத் திரைப்படங்கள் திரையரங்குகளைத் தொட்டு வாழ்வதற்கு இடம் தந்திருந்தால் உளவியல் ரீதியாகப் பல மாற்றங்கள் தமிழ்நாட்டில் உண்டாயிருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை, இருப்பினும் ஒரு முகநூல் பதிவாகத் தேர்தலுக்குப் பிறகு இதை எழுத வேண்டும் என்று நினைத்தேன்." என கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications