வீரமணி விவகாரம்.. மன்னிக்க முடியாத குற்றம்.. யாரும் தப்பிவிடக் கூடாது.. வெற்றிமாறன், அமீர் அறிக்கை!
சென்னை: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், அதிகாரமிக்க நபர்கள், விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் அமீர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். பிஞ்சு சிறுமிகளை குறி வைத்து அரங்கேற்றப்பட்டுள்ள இந்த தீய செயல்கள் மன்னிக்க முடியாத குற்றம் என்று கூறியுள்ள இருவரும், இந்த வழக்கை விசாரிக்கும் எஸ்ஐடி நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் சாந்தி, மகேந்திர சிம்கன், உதவியாளர் கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் நீதிபதி பத்மாவின் அழுத்தம் காரணமாக வெளி வந்துள்ளது. ஆகஸ்ட் 19ஆம் தேதி தவெக ஆட்சியின் போது தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையையும் நீதிபதி பத்மா ஏற்றுக் கொள்ளவில்லை. மீண்டும் விசாரித்து 4 வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். இதன்பின்னரே ஜெம் கிரானைட்ஸ் வீரமணி கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் அமீர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் கொடுஞ்செயல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த உலகைப் பற்றிய முழுதும் அறியாத பிஞ்சு சிறுமிகளை குறி வைத்து அரங்கேற்றப்பட்டுள்ள இந்த தீய செயல்கள் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும்.
வீரமணியை பாதுகாக்க முயன்ற அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் அல்லது அதிகாரமிக்க நபர்கள் என்று அனைவரும் விசாரிக்கப்பட்டு, பதவியில் இருந்து நீக்கப்பட்டு சட்டத்தின் முன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பாலியல் துன்புறுத்தலால் அதிர்ச்சிக்குள்ளான அந்த சிறுமிகளுக்கு தேவையான சட்ட, உளவியல் மற்றும் சமூக மறுவாழ்வு அளிக்கப்படுவதோடு அவர்களின் அடையாளமும், கண்ணியமும் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும்.
இனி வரும் காலங்களில் பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் மீது பாலியல் தொல்லை கொடுக்கும் குற்றவாளிக்கு எந்தவித தளர்வுகளும் இன்றி மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதே இதுபோன்ற குற்றச்செயல்கள் இனி நடைபெறாமல் இருக்க வழிவகை செய்யும். இந்த வழக்கை விசாரிக்கும் எஸ்ஐடி எந்தவித அழுத்தத்திற்கும் ஆளாகாமல், நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும்.
மேலும் மனித நேயத்தை கேள்விக்குறியாக்கும் பாலியல் குற்றங்களை செய்பவர்கள் எவராயினும் அவர்களுக்கு எதிராகவே எங்களுடைய குரல் எப்போதும் ஒலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெம் கிரானைட்ஸ் வீரமணி தொடர்பாக சினிமாவில் இருந்து வந்த முதல் குரலாக இருவரின் குரலும் அமைந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
