பொங்கல் பரிசு வழங்குவதில் ரேஷன் கடைகளில் குளறுபடி? தமிழக அரசுக்கு தினகரன் வைத்த மேஜர் கோரிக்கை!
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் அறிவிக்கப்பட்ட 3 ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் சிறப்புத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து பொருட்களும் முழுமையாக விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாட்டப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது.

பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி சேலை வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு ரொக்கமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 8ஆம் தேதி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசு ரேஷன் அட்டைதார்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.3,000 ரொக்க வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று, பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூபாய் 3000 ரொக்கப் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
ஜனவரி 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், வெளியூர்களில் இருப்பவர்களுக்காக ஜனவரி 14ஆ ம் தேதி அன்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வருபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்நிலையில், பொங்கல் பரிசு வழங்குவதில் பல்வேறு இடங்களிலும் குளறுபடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. சில இடங்களில் வேட்டி சேலை பற்றாக்குறை என்றும், கரும்பு தரமானதாக இல்லை என்றும், கைரேகை பதிவாகவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. குளறுபடி ஏற்படாமல் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணத்தை வழங்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் குளறுபடி என புகார் -அறிவித்த பொங்கல் சிறப்புத் தொகுப்பு அனைவருக்கும் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்.
திருவள்ளூர், நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலைக்கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வேஷ்டி, சேலைகள் வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசு அறிவித்திருக்கும் பொங்கல் சிறப்புத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பொருட்கள், அந்தந்த மாவட்டங்களுக்கு முழுமையாக விநியோகம் செய்யப்படாததே, நியாய விலைக்கடைகளில் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதோடு, டோக்கன் வழங்குவதில் குளறுபடி, ஊழியர்கள் பற்றாக்குறை, கைரேகை சரி பார்க்கும் இயந்திரத்தில் பழுது என நியாய விலைக்கடைகளில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளால், குடும்ப அட்டை தாரர்கள் பொங்கல் பரிசை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதோடு, பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் அறிவிக்கப்பட்ட 3 ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் சிறப்புத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து பொருட்களும் முழுமையாக விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications