நடிகையுடன் விஜய்.. எங்க போனால் என்ன? திவ்யா சத்யராஜ் இன்னொரு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி? விளாசிய பிரபலம்
சென்னை: பிரபல நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். முதல் மேடைப் பேச்சிலேயே விஜயை சரமாரியாக விமர்சித்து இருந்தார். குறிப்பாக ஏசி கேரவனில் அமர்ந்து சொகுசு விமானத்தில் நடிகையின் திருமணத்திற்கு சென்றார் என அவர் பேசியது விஜய் கட்சி தொண்டர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த நிலையில் திவ்யா சத்யராஜை விமர்சித்திருக்கிறார் பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன். திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசுவது போல திவ்யா சத்யராஜின் பேச்சு இருப்பதாக பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களாக வலம் வரும் நடிகர் சத்யராஜ். வில்லன், நாயகன், குணச்சித்திர நடிகர் என கலக்கி வருகிறார். அவரது மகன் சிபி சத்யராஜ் சினிமாவில் இருந்தாலும், சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் சினிமா வாசனை இன்றியே வளர்ந்தவர்.
தனது தாயாரின் பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் மேலும் ஊட்டச்சத்து நிபுணராகவும் இருக்கிறார் திவ்யா சத்யராஜ். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு வந்த அவர் திடீரென திமுகவில் இணைந்தது பேசு பொருளானது.

திமுகவின் கொள்கைகள் தனக்கு பிடித்துப் போனதால் அந்த கட்சியில் இணைந்ததாக கூறினார். இந்த நிலையில் நடிகராக இருந்து அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கும் விஜயை அவர் நேரடியாக விமர்சித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய் திமுக தலைவர் ஸ்டாலினை வெளிப்படையாக விமர்சித்து பேசினார். மேலும் பல்வேறு விவகாரங்களில் திமுக அரசை எதிர்த்து அறிக்கையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் விஜயை விமர்சித்து பேசினார் திவ்யா சத்யராஜ். கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக நிகழ்ச்சி ஒன்றில் முதன்முறையாக மேடையில் பேசிய அவர்," உதயநிதி ஸ்டாலின் சிலர் போல ஏசி கேரவனில் அமர்ந்து கொண்டு சொகுசு விமானத்தில் ஃப்ரண்டுடன் ஃப்ரண்ட் திருமணத்திற்காக செல்லும் போலியான அரசியல்வாதி கிடையாது. மக்கள் பிரச்சனை என்றால் வெள்ளம் மழை என்று பார்க்காமல் களத்தில் இறங்கி செயல்பட கூடியவர். தமிழ்நாட்டை காக்க வந்த மாமன்னன் தான் உதயநிதி. அவரை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் டெபாசிட் காலியாகும் என பேசி இருந்தார்.
நடிகை திரிஷாவுடன் கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு விஜய் சென்றதைத் தான் அவ்வாறு குறிப்பிட்டு பேசியிருந்தார் திவ்யா சத்யராஜ். இதை அடுத்து விஜய் ரசிகர்கள் திவ்யா சத்யராஜை கடுமையாக சாடி வருகிறார்கள். மேடைப்பேச்சு என்றால் என்ன என்பதை கற்றுக் கொண்டு வர வேண்டும். ஒருவரின் அரசியல் மீது விமர்சனம் வைக்கலாம். ஆனால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், யாருடன் எங்கு சென்றார் என்று பேசக்கூடாது என பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக திவ்யா சத்யராஜை விமர்சித்து உள்ளார் பிரபல விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"உங்களுக்கு மேடைப்பேச்சு சுத்தமாக வரவில்லை. அதை கற்றுக்கொண்டு மைக் முன்பு வாருங்கள். விஜய்யின் அரசியல் மீது விமர்சனம் வையுங்கள். அவர் யாருடன் விமானத்தில் சென்றார். யாருடைய கல்யாணத்திற்கு சென்றார் என சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போல பேசுவது எதற்கு?" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications