தேமுதிக வேட்பாளர்கள் முரசு சின்னத்திலேயே போட்டி.. கூட்டணி அறிவிப்பு எப்போ? பிரேமலதா விஜயகாந்த் பதில்
சென்னை: சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை கடலூரில் நடக்க உள்ள தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக வேட்பாளர்கள் முரசு சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள் என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி விவகாரத்தில் எந்த ரகசியமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, விருதுநகரில் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைந்தது. அதன்பின் அதிமுக - தேமுதிக இடையில் மாநிலங்களவை எம்பி சீட் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது.

எடப்பாடி பழனிசாமியை நேரடியாக பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்தார். இதன்பின் முதல்வர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆன பின், வீட்டிற்கு சென்று பிரேமலதா விஜயகாந்த் நலம் விசாரித்தார். இதனால் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக உள்ளதாகவும், அந்த இடத்தை தேமுதிகவை கொண்டு நிரப்ப உள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் திமுக கூட்டணியிலேயே தொடர்வோம் என்று வைகோ அறிவித்தார். அதன்பின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடன் நெருக்கம் காட்டவில்லை. இந்த நிலையில் சென்னையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், தேமுதிக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. எங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட சின்னம் முரசுதான். அந்த முரசு சின்னத்தில் தான் தேமுதிக வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள். அதேபோல் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று தான் தமிழ்நாட்டிற்கு பெயர் உள்ளது.
அதனால் வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருபவர்கள் தாராளமாக வரலாம். இங்கு வருபவர்கள் வேலை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளலாம். ஆனால் வாக்கு செலுத்துவதை அவரவர் சொந்த மாநிலத்தில் செய்வது தான் முறையாக இருக்கும். இதில் தேமுதிகவுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
கூட்டணியை பொறுத்தவரை எந்த ரகசியமும் கிடையாது. மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டிருக்கிறோம். கடலூரில் தேமுதிக மாநாடு விரைவில் நடக்க உள்ளது. அந்த மாநாட்டிற்கு முன்பாகவும் ஆலோசனை கூட்டம் நடக்கும். அதில் கூட்டணி குறித்து கருத்து கேட்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். அதன்பின் கூட்டணி அறிவிப்பை மாநாட்டில் அல்லது மாநாட்டிற்கு முன் பத்திரிகையாளர்களிடம் அறிவிப்போம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications