திமுகவின் வரலாற்றில் மறக்க முடியாதபடி 3 சம்பவங்கள் செய்துள்ள தேமுதிக.. பாஜகவின் கோபப் பின்னணி
சென்னை: 2006ம் ஆண்டு திமுக மைனாரிட்டியாக ஆட்சி அமைத்ததற்கும், 2016 ஆம் ஆண்டு திமுக தேர்தலில் தோல்வியடைய காரணமாக இருந்ததற்கும் ஒரு கட்சி காரணம் என்றால் அது விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக தான். 2011ல் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் மோசமாக தோற்கவும் விஜயகாந்தின் தேமுதிக தான் காரணம்..அதேபால் 2016ம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணி என்று விஜயகாந்தின் தேமுதிக தலைமையில் உருவாகாமல் போயிருந்தால், 2016ல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்திருக்கும்.இந்த மூன்றும் திமுகவின் வரலாற்றில் மறக்க முடியாதபடி 3 சம்பவங்களாகவே இன்று வரை பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் திமுக என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு உருவான பேரியக்கம்.. ஆனால், அந்த கட்சியின் வெற்றிப் பயணத்தில், ஒரு தனி மனிதராக நின்று அதன் அதிகாரக் கனவுகளைச் சிதைத்தவர் 'கேப்டன்' விஜயகாந்த். 2006 முதல் 2016 வரையிலான அந்தப் பத்து ஆண்டுகளில், திமுக சந்தித்த ஒவ்வொரு சறுக்கலுக்குப் பின்னாலும் விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிகஒரு பெரும் சுவராக நின்றது என்பது தான் வரலாறு

2006: மைனாரிட்டி ஆட்சிக்கு வித்திட்ட விஜயகாந்த்
2006 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கும் சுத்தமாக சாதகமாக இல்லை.. ஆனால் திமுகவுக்கு ஒரு கசப்பான வெற்றியைத்தான் தந்தது. "மைனாரிட்டி திமுக அரசு" என்று ஜெயலலிதாவால் அடிக்கடி விமர்சிக்கப்படக் காரணமாக இருந்தது விஜயகாந்த் தான். அன்று அவர் ஒரு தொகுதியில் (விருத்தாசலம்) மட்டுமே வென்றிருந்தாலும், தேமுதிக பிரித்த 8 சதவீத வாக்குகள் திமுகவின் தனிப்பெரும்பான்மையைப் பறித்துவிட்டது. பல தொகுதிகளில் திமுகவின் வெற்றியைத் தடுத்து, காங்கிரஸின் தயவில் ஆட்சி அமைக்க வேண்டிய நெருக்கடிக்கு கலைஞர் கருணாநிதியைத் தள்ளியது விஜயகாந்தின் அரசியல் வருகைதான்.
2011: எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூடப் பறித்தார்
திமுக 1991ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளில் சந்தித்த மிக மோசமான தோல்வி எதுவென்றால் அது 2011 தான். அண்ணா உருவாக்கிய இயக்கம், சுமார் 50 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்ட கட்சி, சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூடப் பெற முடியாமல் போனது என்றால் அதற்கு விஜயகாந்த் காரணமாக இருந்துள்ளார். தனித்து போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கக்கப்பட்ட நிலையில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, திமுகவை மூன்றாவது இடத்திற்குத் தள்ளிவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியில் விஜயகாந்த் அமர்ந்தபோது அறிவாலயம் அதிர்ந்து போனது. ஒரு புதிய கட்சியான தேமுதிக, அரை நூற்றாண்டு கால இயக்கத்தை பின்னுக்குத் தள்ளியது இந்திய அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்தது.
2016 ல் கலைஞர் முதல்வராக முடியாதது ஏன்
மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம் 2016-ல் நிகழ்ந்தது. அப்போது திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு எதிராக எப்படியும் ஜெயித்து விடலாம் என்று கலைஞர் கருணாநிதி இருந்தால். "விஜயகாந்த் நம்மோடு வந்தால் ஆட்சி உறுதி" என்று காத்திருந்தார். பழம் நழுவி பாலில் விழும் என்று கூட கருணாநிதி கூறியிருந்தார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் 'மக்கள் நலக்கூட்டணி' என்ற ஒன்றைத் தலைமை தாங்கி வழிநடத்தினார் விஜயகாந்த்.
2016 வெறும் ஒரு சதவீதம் வாக்கு வித்தியாசம்
2016 தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 1.1 சதவீதம் மட்டுமே. ஒருவேளை விஜயகாந்த் அந்தத் தனி கூட்டணியை உருவாக்காமல் இருந்திருந்தால் அல்லது திமுகவுடன் கைகோர்த்திருந்தால், அன்றே மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்றிருப்பார். அல்லது இறுதி காலம் வரை கலைஞர் கருணாநிதி முதல்வராகவே இருந்திருப்பார். விஜயகாந்த் பிரித்த அந்த வாக்குகள் தான் திமுகவின் 10 ஆண்டு கால வனவாசத்தை நீட்டித்து இருந்தது.
3 கசப்பான சம்பவங்கள்
திமுகவின் சரித்திரப் பக்கங்களை யாராவது புரட்டிப் பார்த்தால், 2006-ன் தனிப்பெரும்பான்மை இழப்பு, 2011-ன் எதிர்க்கட்சி அந்தஸ்து இழப்பு, 2016-ன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இழப்பு என இந்த மூன்று முக்கியச் சம்பவங்களிலும் ஒரு 'வில்லனாகவோ' அல்லது 'வெற்றியாளனாகவோ' விஜயகாந்தின் முகம் தான் தெரிந்திருக்கும். ஆனால் 2016ல் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போக காரணமாக இருந்த விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மற்றும் இடதுசாரிகள் 2021ல் திமுக கூட்டணியில் இணைந்திருந்தன. ஆனால் 2026ல் தேமுதிகவே திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
அரசியல் என்பது அதிகாரத்தை அடைவது தான்
2016ல் விஜயகாந்தின் மக்கள் நலக்கூட்டணியில் இருந்த மூப்பனார் மகன் ஜிகே வாசனின் தமாகா மட்டுமே தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கிறது. பாஜகவை பொறுத்தவரை திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை ஏற்கவில்லை.. விஜயகாந்த் உயிருடன் இருந்தவரை திமுக கூட்டணியை எதிர்த்தார் என்றும், இப்போது இணைந்திருப்பதை விஜயகாந்த் மன்னிக்கமாட்டார் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. அரசியல் என்பது சாணக்கியராக இருப்பதே சரி என்பதாகிவிட்டது. அரசியல் என்பது அதிகாரத்தை அடைவது தான் இலக்கு என்று மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. அதில் பல சமரசங்களை பலர் ஒவ்வொரு தேர்தலிலும் நடத்தி வருகிறார்கள். அதில் தேமுதிக மற்றும் திமுக விதிவிலக்கு அல்ல..












Click it and Unblock the Notifications