6க்கு 1..அறிவாலயத்தில் லிஸ்டை நீட்டிய அண்ணியார்! பட்டியலை பார்த்து பதறி போன திமுக தலைகள்! என்னாச்சு?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் புதிய அரசியல் நகர்வுகள் வேகமெடுத்து வருகின்றன. நீண்ட இழுபறிக்குப் பிறகு தேமுதிக அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான போட்டி கூட்டணிக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கியதாக கூறப்படும் விருப்பத் தொகுதிப் பட்டியலால் அறிவாலய வட்டாரங்கள் அதிர்ச்சியில் உள்ளதாம்.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தேமுதிக் - திமுக கூட்டணியை உறுதி செய்தான் பிரேமலதா விஜயகாந்த்.
இதனைத் தொடர்ந்து, எந்தெந்த தொகுதிகளில் தேமுதிக போட்டியிட விருப்பம் கொண்டுள்ளது என்பதை திமுக தலைமை கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கான பதிலாக, வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளின் பட்டியலை பிரேமலதா வழங்கியிருப்பதாக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திமுக கூட்டணி பேச்சுவார்த்தை
கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் தேமுதிக 12 தொகுதிகளை கோரியதாகவும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் 6+1 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என திமுக தரப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டால் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் உறுதி அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விருப்பத் தொகுதிகளின் பட்டியல் ஆய்வு செய்யப்பட்டு பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என திமுக தலைமை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா வழங்கியதாக கூறப்படும் பட்டியலில் பல முக்கிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. ரிஷிவந்தியம் அல்லது விருத்தாச்சலம் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், விஜய பிரபாகரனுக்கு விருதுநகர் அல்லது சாத்தூர், எல். வெங்கடேசனுக்கு விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி, பார்த்தசாரதிக்கு விருகம்பாக்கம், அனகை முருகேசனுக்கு பல்லாவரம், இளங்கோவனுக்கு பாப்பிரெட்டிப்பட்டி, அழகாபுரம் மோகன்ராஜுக்கு சேலம் தெற்கு ஆகிய தொகுதிகள் உத்தேசமாக முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தேமுதிக தொகுதி கோரிக்கை
இதனுடன், சுதீஷுக்கு ராஜ்யசபா இடம் கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விருப்பப் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, ஏற்கெனவே அந்த தொகுதிகளில் தேர்தலுக்காக பணியாற்றி வந்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. விருத்தாச்சலம் தொகுதி கடந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதேபோல், சாத்தூர் தொகுதியில் மதிமுக கட்சியின் நிர்வாகிகள் வேலை செய்து வருவதாக கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணி
விழுப்புரம், விக்கிரவாண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம் போன்ற இடங்களிலும் திமுக நிர்வாகிகள் மீண்டும் போட்டியிட தயாராக உள்ள சூழ்நிலை நிலவுகிறது. இவ்வாறு ஏற்கெனவே பல கட்சிகள் ஆர்வம் காட்டிய தொகுதிகளிலேயே தேமுதிக விருப்பம் தெரிவித்திருப்பது கூட்டணிக்குள் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்தத் தொகுதிகளில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கு மாற்றுத் தொகுதி வழங்கப்படுமா அல்லது தேமுதிகவின் தொகுதி பட்டியலில் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
2026 சட்டமன்ற தேர்தல்
கூட்டணிக்குள் ஒத்துழைப்பு நிலையை பாதிக்காமல் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வது திமுக தலைமையின் முக்கிய சவாலாக பார்க்கப்படுகிறது. பல கட்சிகள் இணைந்த விரிவடைந்த கூட்டணியில் ஒவ்வொரு தொகுதியும் அரசியல் முக்கியத்துவம் பெறும் நிலையில், இறுதி ஒப்பந்தம் எப்போது வெளியாகும் என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால், 2026 தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைப்பு உறுதியானாலும், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவுக்கு வராத நிலை தொடர்கிறது.












Click it and Unblock the Notifications