விஜயகாந்த் இல்லை.. 1% ஓட்டு கூட இல்லை! முரண்டு பிடிக்குதே தேமுதிக..வேஸ்ட் லக்கேஜை சுமக்கிறதா அதிமுக?
சென்னை: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியை கிட்டத்தட்ட இறுதி செய்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்கிறது என எடப்பாடி பழனிச்சாமி கூறினாலும் ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் அதனை உறுதி செய்வோம் என்கிறார் பிரேமலதா விஜயகாந்த். மாநிலங்களவை சீட்டுக்காக அடம் பிடிக்கும் நிலையில் உண்மையில் தேமுதிகவின் நிலைமை தேர்தல் களத்தில் மிக மோசமாக இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தங்கள் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. திமுக கூட்டணி ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை பெற்ற வெற்றிகளுக்கு கூட்டணி தான் காரணம் என பாராட்டு மழை பொழிந்திருக்கிறார் திமுக தலைவர் முதல்வருமான ஸ்டாலின்.
இது ஒரு புறம் இருக்க தற்போதைக்கு அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே அதிகாரப்பூர்வமாக இணைந்து இருக்கிறது. கூடுதலாக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை அழைத்து வர எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எப்படியாவது மாநிலங்களவை சீட்டை பெற்று விட வேண்டும் என தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விரும்பினார்.

எடப்பாடி பழனிசாமி
இதற்காக எடப்பாடி பழனிச்சாமியுடன் எல்கே சுதீஷும் சந்தித்து பேசினார். ஆனால் 2026 மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படும் எனவும், தற்போது இரு அதிமுக வேட்பாளர்கள் நிற்பார்கள் என அதிரடியாக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் கூட்டணியில் தேமுதிக தொடர்கிறது என அதிமுக அறிக்கையே விட்டது. ஆனால் பிரேமலதா விஜயகாந்த் ஜனவரியில் நடக்கும் கட்சி மாநாட்டுக்கு பிறகு நாங்கள் கூட்டணி குறித்து அறிவிப்போம் என பேசி அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார்.
தேமுதிக
இந்த நிலையில் தேர்தல் களத்தில் மிக மோசமான நிலையில் இருக்கும் தேமுதிக இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும், முழுதாக 1 சதவீத வாக்குகளை கூட கையில் வைத்திருக்காத கட்சிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என அதிமுகவினரே விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர். அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளை மிக மோசமான வாக்கு வாங்கி வைத்திருக்கும் கட்சிகளில் தேமுதிகவும் ஒன்று.
மக்களவை தேர்தல்
கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக மட்டும் தனித்து 26.93% வாக்குகளை பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 20.46 % வாக்குகளையும், பாஜக 11.24% வாக்குகளையும், காங்கிரஸ் 10.67 % வாக்குகளையும் பெற்றது. மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சி 8.10 % வாக்குகளையும் பாட்டாளி மக்கள் கட்சி 4.31% வாக்குகளையும், தேமுதிக 2.59 % வாக்குகளை மட்டுமே பெற்றது.
வாக்கு சதவீதம்
சிபிஐ, விசிக, சிபிஎம் ஏறக்குறைய இரண்டு முதல் இரண்டரை சதவீத வாக்குகளையும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அமமுக ஆகியவை 1.24 முதல் 0.94 % வாக்குகளை மட்டுமே பெற்றன. நோட்டா மட்டுமே 1.07% வாக்குகளை கடந்த தேர்தலில் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதிமுக கூட்டணியில் இணைந்ததால் தான் கடந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிக 2.59 % வாக்குகளை பெற முடிந்தது என்பதை கவனிக்க வேண்டும்.
2021 சட்டசபை தேர்தல்
காரணம், கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும், அமமுக கூட்டணியும், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் என பலமுனை போட்டி நிலவியது. இதில் திமுக மற்றும் 37.70% வாக்கு சதவீதத்தை பெற்ற நிலையில், அதிமுக 33.29 சதவீத வாக்குகளை பெற்றது. தேமுதிக வெறும் 0.43 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த தேர்தலில் கூட பாமக 3.80 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. அந்த வகையில் பார்க்கும்போது பாமகவின் வாக்கு வங்கி கிட்டத்தட்ட நான்கு சதவீதம் என தொடர்கிறது.
விஜயகாந்த்
ஆனால் சட்டமன்ற தேர்தலில் வெறும் 0.43 சதவீத வாக்குகளை வைத்திருந்த கட்சிக்கு கூடுதலாக இரண்டு சதவீத வாக்குகளை பெற்றுக் கொடுத்ததை அதிமுக கூட்டணி தான். ஆனால் தற்போது மாநிலங்களவை சீட்டுக்காக தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சி போல பிரேமலதா விஜயகாந்த் நடந்து கொள்கிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் இருந்தது, மக்களவைத் தேர்தலில் விஜயகாந்த் இல்லாததும் கவனிக்கத்தக்கது. அப்படி பார்க்கையில் அதிமுக வாக்குகள் தான் தேமுதிகவுக்கு சென்று இருக்கிறது. எனவே விஜயகாந்த் இல்லாத சூழலில் கட்சியை காப்பாற்ற வேண்டுமானால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் அல்லது திமுகவுடன் கூட்டணி வைக்கலாம். ஆனால் கூட்டணி தலைமைக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு தேமுதிக வாக்கு சதவீதம் இல்லை என்பது தான் தற்போதைய நிலவரம்.












Click it and Unblock the Notifications