அடிக்க அடிக்க எழும் பந்து திமுக.. ஜெயலலிதா, இந்திரா காந்தி வலைகளையே அறுத்தெறிந்த கட்சி: ஐ.பரந்தாமன்
சென்னை: இந்திரா காந்தி மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் விரித்த அரசியல் வலைகளையே அறுத்தெறிந்த வரலாறு திமுகவிற்கு உண்டு. எங்களை வலைவீசி பிடிக்க எந்தக் கட்சிக்கும் அரசியல் முதிர்ச்சி போதாது என்று திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ. பரந்தாமன் தெரிவித்துள்ளார்.. அதுமட்டுமல்ல, மாநில உரிமைகள், தொகுதி எல்லை வரையறை மற்றும் பாஜக அரசுடனான கொள்கை நிலைப்பாடுகள் குறித்து திமுகவின் தெளிவான பார்வையை பேட்டி ஒன்றில் அவர் முன்வைத்துள்ளார்.
பிரபல சேனல் ஒன்றில் பேசியுள்ள பரந்தாமன், "டெல்லியில் நீட் தேர்வின் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் போராடி வருகிறார்கள்.. நீட் தேர்வு முறையே முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே திமுகவின் தொடர்ச்சியான நிலைப்பாடு. வடமாநில இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால், பொது நோக்கத்திற்காகப் போராடும் மாணவர்கள் மீது மத்திய பாஜக அரசும் போலீசும் தடியடி நடத்தியதும், கண்ணீர்ப்புகை வீசியதும் கடும் கண்டனத்திற்குரியது.
ஐ.பரந்தாமன் காட்டம்
இந்த வன்முறை தாக்குதலைக் கண்டிக்காமல், "இரு தரப்பினருக்கு இடையேயான மோதல்" என்று தமிழக வெற்றிக் கழகம் கடந்து செல்வது வேதனையளிக்கிறது. பாஜகவைக் கண்டித்துப் பேசப் பயந்து தவெகவினர் ஒதுங்குகிறார்கள். ஆனால் எங்கள் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக உடனடியாகக் குரல் கொடுத்துள்ளார். நியாயத்தின் பக்கம் யார் நிற்கிறார் என்பது போராடும் இளைஞர்களுக்கும் தெரியும்.
திமுக பாஜகவுடன் நெருங்குவதாகவும், தொகுதி எல்லை வரையறை மசோதாவை ஆதரிக்க போவதாகவும் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. தென்னக மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் தொகுதி எல்லை வரையறையை முதன்முதலில் எதிர்த்ததே திமுகதான். தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு மசோதாவையும் திமுக ஒருபோதும் ஆதரிக்காது.
"ஒரே நாடு, ஒரே தேர்தல்", "ஒரே ரேஷன் கார்டு"
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும், இருமொழிக் கொள்கையில் தலையிடக் கூடாது, நவோதயா பள்ளிகளைத் திணிக்கக் கூடாது மற்றும் மேகதாது உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இவைகளை செய்தால் மட்டுமே பாஜக அரசுக்கு ஆதரவு அளிப்பது பற்றி சிந்திக்க முடியும்.
எனவே மாநில உரிமைகளைப் பறிக்கும் "ஒரே நாடு, ஒரே தேர்தல்", "ஒரே ரேஷன் கார்டு" போன்ற ஒற்றைப் புள்ளியுடன் கொள்கைகளை கொண்டுள்ள பாஜகவுடன் திமுக எந்தக் காலத்திலும் கூட்டணியோ, உடன்பாடோ வைத்துக்கொள்ளாது.
தேசிய அளவில் ஒரு கட்சியோடு கூட்டணி வைத்துத்தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியம் திமுகவிற்கு இல்லை. நாட்டின் நலன் கருதி, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதாவிற்கு ஆதரவு தருவோம்.. ஆனால் தமிழ்நாட்டை பாதிக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி எல்லை வரையறையை நாங்கள் வன்மையாக எதிர்ப்போம்.
தவெக அரசு வெளிப்படைத்தன்மையற்றது
மேகதாது விவகாரத்தை எழுப்பி ராகுல் காந்தியை நாங்கள் நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக சொல்வது அற்பவாதமானது. நாடாளுமன்றம் கூடும்போது மாநில உரிமைகளுக்காக குரல் கொடுப்பது எங்கள் கடமை.
இன்றைய அரசு வெளிப்படைத்தன்மையற்று செயல்படுகிறது... சோஷியல் மீடியாவில் தவறான தகவல்களையும், தனிமனித ஒழுக்கத்திற்கு எதிரான கருத்துகளையும் பரப்புவது தமிழ்நாட்டை ஆபத்தான திசையை நோக்கி நகர்த்துகிறது. ஜனநாயக ரீதியிலான விமர்சனங்களைக்கூடத் தாங்கிக் கொள்ள முடியாமல், கைது நடவடிக்கைகளின் மூலம் மக்களைப் பயமுறுத்தப் பார்க்கிறார்கள்.
கலைஞரின் தலையைச் சீவி - சர்ச்சை பேச்சு
கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில், பாஜகவை சேர்ந்த ஒருவர், "கலைஞரின் தலையைச் சீவி வெட்டி என் கையில் கொண்டு வருவேன்" என்று பகிரங்கமாகப் பேசினார்.. அதைவிடவா ஒரு வன்முறை பேச்சு இருக்க முடியும்? ஆனால், அன்றைக்கு நாங்கள் ஆட்சியில் இருந்தபோதும் சகிப்புத்தன்மையோடுதான் நடந்துகொண்டோம். இன்றைக்கு சகிப்புத்தன்மையே இல்லாத அரசாங்கமாக இது இருக்கிறது.
சட்டமன்றத்தை இழுத்துப் பூட்டுங்கள் என்று சொன்னதற்கெல்லாம் வழக்குப் போடுகிற மாதிரி ஒரு மோசமான முதலமைச்சரை நீங்கள் எங்காவது பார்த்திருக்கிறீர்களா?
எங்களைக் கைது செய்வதற்கு முன்னால், எங்கள் தலைவரைப் பற்றிப் பேசிய வீடியோக்கள் எங்களிடம் இருக்கின்றன, போய் ஆதவ் அர்ஜுனாவைக் கைது செய்துவிட்டு எங்களிடம் வாருங்கள். தமிழ்நாட்டைப் பற்றியே புரியாத ஒரு முதலமைச்சர், எப்போதும் ஒரு மயக்க நிலையிலேயே இருக்கும் ஒரு முதலமைச்சர் என்ன பண்ணச் சொல்கிறாரோ அதைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
இந்திரா காந்தி, ஜெயலலிதா
கைது செய்தால்தான் இனிமேல் நம்மைப் பற்றிப் பேச மாட்டார்கள் என்று நினைத்து அச்சுறுத்தல் கொடுக்கப் பார்க்கிறீர்கள், பயத்தைக் காட்ட நினைக்கிறீர்கள். ஆனால் உங்களால் ஒரு ஆணியையும் பிடுங்க முடியாது! திமுகவைக் கைது செய்யச் செய்ய நாங்கள் பேசிக்கொண்டேதான் இருப்போம். அடிக்க அடிக்கப் பந்து எழும்புவது போல திமுக எழும்புமே தவிர, இதுபோன்ற அடக்குமுறையைக் கையில் எடுத்தால் அடங்காது.
இந்திரா காந்தி மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் விரித்த அரசியல் வலைகளையே அறுத்தெறிந்த வரலாறு திமுகவிற்கு உண்டு. எங்களை வலைவீசி பிடிக்க எந்தக் கட்சிக்கும் அரசியல் முதிர்ச்சி போதாது.
காவல்துறை மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆட்சியாளர்களின் தவறான உத்தரவுகளுக்கு பணியாமல், சட்டத்திற்கு உட்பட்டு நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆட்சிகள் நிரந்தரமில்லை.. அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வதற்காக சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டால், அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்றெல்லாம் காட்டமாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
