இடைத்தேர்தலில் 2 தொகுதிகளையும் அடிச்சு தூக்கணும்.. ஸ்டாலின் பிளான்.. பொறுப்பாளர்களை அறிவித்த திமுக!
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்பட திமுக சார்பில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், க.சுந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தாராபுரம் தொகுதிக்கு மு.பெ.சாமிநாதன், இல.பத்மநாபன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும் எனவும், அக்டோபர் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 9 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் செப்டம்பர் 16 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தலைமையிலான தவெக அரசு சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் களம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது தவெகவை வீழ்த்தி பாடம் புகட்ட வேண்டும் என திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை திட்டம் தீட்டி வருகின்றன.
முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கியுள்ளது திமுக. மதுராந்தகம் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏவும் வழக்கறிஞருமான பரந்தாமனும், தாராபுரம் தொகுதிக்கு வழக்கறிஞர் சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றும் வகையில் அந்த தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை நியமித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்பட கீழ்கண்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
மதுராந்தகம் (தனி) தொகுதி
1. தா.மோ.அன்பரசன் (காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
2. க.சுந்தர் (காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
தாராபுரம் (தனி) தொகுதி
1. மு.பெ.சாமிநாதன் (கழகத் துணைப் பொதுச்செயலாளர்)
2. இல.பத்மநாபன் (திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
அருகில் உள்ள கழக மாவட்டத்தினர் பொறுப்பாளர்களுடன் இணைந்து கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
