பொட்டு வச்ச ‘கொங்கு’ குடம்.. திரும்பிய பக்கமெல்லாம் செந்தில் பாலாஜி! கொந்தளிக்கும் திமுக சீனியர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை, கரூர்,ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களின் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக தலைமையால் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இதை அடுத்து மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், ஏன் சில அமைச்சர்கள் கூட செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களாக மாறி இருக்கின்றனர். அதே நேரத்தில் செந்தில் பாலாஜி மீது சில சீனியர்கள் கடும் கோபத்தில் உள்ளதாகவும், சொல்லப்படுகிறது. ஒருபடி மேலே போய் 'சில நிர்வாகிகளை" ஒருமையில் பேசி ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆன என்.கே.கே.பி.ராஜா. இந்த சம்பவம் திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூரைச் சேர்ந்த செந்தில் பாலாஜி, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ.வாகவும், பின்னர் அமைச்சராகவும் பணியாற்றியவர். ஆனால், சில காரணங்களால் ஜெயலலிதா அவரது அமைச்சர் பதவியை நீக்கியது அனைவரும் அறிந்ததே.

அதற்குப் பிறகு சில காலம் அமைதியாக இருந்த செந்தில் பாலாஜி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக மாறினார். தினகரன் அணியுடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக, செந்தில் பாலாஜி பின்னர் திமுகவில் இணைந்தார்.

Senthil Balaji dmk mk stalin

திமுக

திமுகவில் சேர்ந்தவுடன் அவருக்கு உடனடியாக முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. முதலில் கரூர் மாவட்ட பொறுப்பாளராகவும், பின்னர் மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவின் முக்கியத் தலைவரான அமைச்சர் விஜயபாஸ்கரை நேரடியாக எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றது, செந்தில் பாலாஜிக்குப் பெரும் திருப்பமாக அமைந்தது. அதன்பிறகு மதுவிலக்கு மற்றும் மின்சாரம் போன்ற முக்கிய அமைச்சகங்கள் அவருக்கு வழங்கப்பட்டன.

செந்தில் பாலாஜி

கொங்கு மண்டலம் முழுவதும் அதிரடி மாநாடுகள், ஆலோசனைக் கூட்டங்கள் போன்ற நடவடிக்கைகள் மூலம் செந்தில் பாலாஜி மீது திமுக தலைமைக்கு நம்பிக்கை அதிகரித்தது. பின்னர் கோவை மண்டல பொறுப்பாளராகவும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். அதிமுகவின் ஆட்சி காலங்களில் கோவை மாவட்டம் முழுவதும் அந்தக் கட்சிக்கே ஆதரவு இருந்து வந்தது. 2001, 2011, 2021 என நடைபெற்ற மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக வென்றது குறிப்பிடத்தக்கது.

கோவை திமுக

குறிப்பாக எஸ்.பி. வேலுமணி போன்ற தலைவர்கள் சமூக செல்வாக்கு மற்றும் ஆதரவால் கோவையை அதிமுகவின் கோட்டையாக மாற்றி வைத்திருந்தனர். ஆனால் திமுகவின் நிலை இதுவரை தலைகீழாகவே இருந்தது. 1996இல் கோவையில் முழுமையாக வெற்றி பெற்ற திமுக, 2006ல் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது. 2011இல் பூஜ்ஜிய நிலை, 2016இல் ஒரே ஒரு தொகுதி என தொடர்ந்து பின்னடைவு. 2021ல் ஆட்சியில் இருந்தபோதும், கோவையில் திமுகவுக்கென ஒரு எம்எல்ஏ கூட இல்லாதது தலைமைக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது.

திமுக தலைமை

இதனால் கோவையில் திமுகவின் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முக்கிய பொறுப்பு செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே கோவையில் நடத்தி வந்த மாநாடுகள், கூட்டங்கள் மூலம் கட்சித் தொண்டர்களின் மனநிலையை உற்சாகப்படுத்தியுள்ளார். இதனைக் கணக்கில் கொண்டு, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவையின் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை அமைத்துள்ளதாக கட்சித் தலைமை கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி தற்போது வழக்கில் சிக்கி, சிறை சென்று வந்திருந்தாலும், கோவை மற்றும் கரூரில் இன்னும் "அமைச்சருக்கு இணையான அதிகாரம்" கொண்டவராகச் செயல்படுவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்கள் அதிருப்தி

இப்போது அதில் தான் பிரச்சனையே தொடங்கி இருக்கிறது. தற்போது கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் 39 சட்டமன்ற தொகுதிகளின் பொறுப்பாளராக செந்தில் பாலாஜி இருக்கிறார். அவர் யாரை டிக் செய்கிறாரோ அவர்தான் தேர்தலில் போட்டியிடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதை அடுத்து அமைச்சர்கள் தொடங்கி வட்டச் செயலாளர்கள் வரை எம்எல்ஏ, அமைச்சர் ஆசை கொண்ட பலரும் செந்தில் பாலாஜியை வட்டமிட தொடங்கி விட்டனர். சமீபத்தில் செந்தில் பாலாஜியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் தங்களது விசுவாசத்தை காட்ட பலரும் போட்டி போட்டுக் கொண்டு இந்த மாவட்டங்களில் செயல்பட்டனர்.

என்.கே.கே.பி. ராஜா

நலத்திட்ட உதவிகள் வழங்குவது, சமூக வலைதளங்களை வீடியோக்கள் என கலக்கி எடுத்தனர். கொங்கு மண்டலத்தில் திரும்பும் பக்கமெல்லாம் செந்தில் பாலாஜியின் புகைப்படங்கள் தான் இருந்தது. அதே நேரத்தில் நேற்று வந்த செந்தில் பாலாஜிக்கு இவ்வளவு முக்கியத்துவமா? என திமுகவில் பல ஆண்டுகளாக அரசியல் செய்யும் சீனியர்கள் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். குறிப்பாக ஈரோட்டில் இருந்து முதல் குரல் வெளிவந்துள்ளது. ஈரோடு டிஎன் பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் 'மாண்புமிகு மேற்கு மண்டலம்' என செந்தில் பாலாஜிக்கு பல இடங்களில் போஸ்டர்களையும் பிளக்ஸ் பேனர்களையும் அமைத்திருந்தார்.

ஸ்டாலின்

அதில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் படங்கள் சிறிதாகவும், பெரியார் கலைஞர் உள்ளிட்டவர்களின் படங்கள் ஸ்டாம்ப் சைசிலும் இருந்தது. மேலும் திமுக ஐடி விங்கை சேர்ந்த ஜுனாயத் என்பவரது வாழ்த்துச் செய்தியில் செந்தில் பாலாஜியின் படத்தைத் தவிர வேறு எந்த தலைவர்களின் படமும் இடம் பெறவில்லை. இதனால் கோபமடைந்த திமுக முன்னாள் அமைச்சரான என்கேகேபி ராஜா உங்கள் போஸ்டரில் கலைஞரின் படமே இல்லை, ஸ்டாம்ப் சைஸில் தளபதியின் படம் இருக்கிறது. இதுக்கு ரோசம் வரவில்லையா உங்களுக்கு.. எதுக்கு கருப்பு சிவப்புக் கொடி என ஒருமையில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்ததோடு, வாய்ஸ் மெசேஜ் போட்டு இருந்தார்.

திமுக தலைமை

திமுகவை பொறுத்தவரை ஈரோட்டில் என்கேகேபி ராஜா அமைச்சராக இருந்ததோடு அவரது தந்தையும் அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் அப்போது அதிமுகவில் வலுவாக இருந்த, இப்போது திமுக அமைச்சராக இருக்கும் முத்துச்சாமி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரை எதிர்த்து அரசியல் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி திமுக சீனியர்களில் ஒவ்வொருவராக அதிருப்தி குரல் எழுப்பி வரும் நிலையில், திமுக தலைமை அதனை எப்படி சமாளிக்க போகிறது என்பதுதான் கொங்கு மண்டலத்தில் பேசுபொருளாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+