அண்ணாமலை பதட்ட படாதீங்க.. அவசரத்துல கைய விட்டா அண்டாகுள்ள கூட கை போகாது.. அதிமுக அட்வைஸ்
சென்னை: "அவசரத்துல கைய விட்டா அண்டாகுள்ள கூட கை போகாதுன்னு சொல்லுவாங்க. அண்ணாமலை பதட்ட படாம அரசியல் பண்ண வேண்டும்" என்று அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் ட்விட் பதிவிட்டுள்ளார்.
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திமுகவினரின் சொத்து பட்டியல் என்று கூறி ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் பல்வேறு திமுக தலைவர்களின் சொத்து மதிப்பு என்று கூறி பல பாயிண்டுகள் இருந்தது. முன்னதாக பேசிய அண்ணாமலை அரசியல் குறித்து பல்வேறு விஷயங்களை பேசினார்.

வீட்டு வாடகை முதல் தனக்கு மாதம் தோறும் எத்தனை லட்சம் செலவு ஆகிறது... என பெரிய பட்டியலே போட்டு விளக்கம் அளித்தார். தொடர்ந்து, முறைகேடு பட்டியல் ஒன்றுடன் முடிவடையாது. தமிழ்நாடு அரசில் இதுவரை எந்த கட்சி எல்லாம் அமைந்து இருக்கிறதோ..., ஒரு கட்சிக்கு மட்டுமல்ல அத்தனை கட்சிகளின் ஊழல்களும் 2024 தேர்தலுக்கு முன்பு கொண்டுவரப்போகிறேன்.
ஊழலை எதிர்க்கிறோம் என்றால் மொத்தமாகத்தான் எதிர்க்கவேண்டும். பாதியை மட்டும் எதிர்க்கக்கூடாது. ஊழல் செய்பவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்போம். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இவ்வாறு அவர் பேசியிருந்தார். அண்ணாமலை அதிமுக ஊழல் பட்டியலை வெளியிட போவதாக மறைமுகமாக குறிப்பிட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது.

அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் தனது ட்விட்டரில் அண்ணாமலையை காட்டமாக விமர்சித்து இருக்கிறார். பாபு முருகவேல் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- "நேற்றைய திமுக சொத்து பட்டியல் ஒரு நகைச்சுவை காட்சி. இதில் அதிமுகவை சார்ந்தவர்களின் பட்டியலையும் வெளியிடுவாராம். அவசரத்துல கைய விட்டா அண்டாகுள்ள கூட கை போகாதுன்னு சொல்லுவாங்க. அண்ணாமலை பதட்ட படாம அரசியல் பண்ண வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications