காவலர்களுக்கான அண்ணா, காந்தி பதக்கங்கள் இருட்டடிப்பு! டெல்லிக்கு விஜய் சேவகம்! திமுக கடும் தாக்கு
சென்னை: தமிழகத்தில் காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் விழாவில் அண்ணா, காந்தி காவல் பதக்கங்களை இருட்டடிப்பு செய்துவிட்டு மத்திய அமைச்சர் பெயரை பேனரில் வைத்த தவெக அரசு என திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து திமுக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் அண்ணா, காந்தி காவல் பதக்கங்களை அவமதித்து டெல்லிக்குச் சேவகம் செய்யும் விஜய்!

முதலமைச்சர் தன் கைவசம் வைத்துள்ள காவல்துறையில், தமிழ்நாடு காவலர்களுக்குப் பதக்கம் வழங்கும் விழாவில், அண்ணா பதக்கமே முதன்மையானது. அதுபோலவே காந்தி காவல் பதக்கமும் மதிப்பிற்குரியது. தமிழ்நாட்டின் இந்த இரு பதக்கங்களையும் இருட்டடிப்பு செய்துவிட்டு, விழா மைதானத்தின் பின்னணியில், 'மத்திய உள்துறை அமைச்சர்' பதக்கத்திற்கு வானளாவிய பிரம்மாண்ட பேனர்களை வைத்துள்ளார் டம்மி முதல்வர் விஜய்!
காவல்துறையினருக்கு வழங்கப்படும் அண்ணா மற்றும் காந்தி பதக்கங்களே தமிழ்நாட்டின் பெருமை. அதை விடுத்து, மத்திய அரசின் பதக்கத்தை மட்டும் வெட்கமில்லாமல் முன்னிலைப்படுத்தி, பெருமைக்குரிய காக்கிச் சீருடை பதக்க விழாவில் காவி நிறத்தைக் காட்டியிருக்கிறது தவெக அரசு.
தன் மாநிலப் பதக்கத்தின் மாண்பைக் கூடக் காப்பாற்ற வக்கில்லாத இந்த அரசால், தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாக்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் முதல்வர் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதல்வர் பதக்கம் பெறுபவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது.
இதில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட காவல் துறையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய காவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதல்வர் விஜய் பதக்கங்களை வழங்கினார்.

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த காவல் துறையினருக்கு பதக்கங்களை வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்றார். அதன்படி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் 600-க்கும் மேற்பட்ட காவல் துறையினருக்கு முதல்வர் விஜய் பதக்கம் வழங்குகிறார்.
காவல் துறையினருக்கு ஜனாதிபதி பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், முதல்வர் பதக்கங்களை வழங்கினார்.
பதக்கம் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் விஜய்க்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அது போல் சிங்கப்பெண் அதிரடி படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றார்.
இந்த நிகழ்வுக்கு முதல்வர் விஜய் பட்டு வேட்டி சட்டையில் வந்திருந்தார். காவல் துறையினரின் சாகசங்களை கண்டு களித்தார். இந்த நிகழ்ச்சிக்கு வந்த விஜய்யை தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வரவேற்றார். அது போல் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications
