"கரூர் சம்பவத்தில் யார் மீதோ பழி சுமத்தி திமுக அரசு தப்பிக்க முடியாது” - கொதித்த எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கரூர் துயரச் சம்பவத்தில் 41 உயிர்கள் பலியானதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். யார் யாரோ மீது பழி சுமத்தி திமுக அரசு தப்பிக்க முடியாது" என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தருமபுரியில் நடந்த கூட்டத்தில் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தருமபுரியில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

DMK Can t Escape Responsibility for Karur Tragedy EPS

அப்போது பேசிய அவர், "கரூரில் செப்டம்பர் 27 ஆம் நடந்த சம்பவத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள். இந்த ஆட்சியாளர்கள் உரிய முறையில் பாதுகாப்பு கொடுத்திருந்தால் அந்த உயிர்களை பாதுகாத்திருக்கலாம். முறையான, சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் யார்? இது மக்கள் கேட்கும் குரல்.

ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியா? நாட்டு மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணி இதுக்கெல்லாம் பாதுகாப்புக் கொடுப்பது அரசின் கடமை. முதல்வரின் கையில்தான் காவல்துறை இருக்கிறது. சரியான முறையில் முதல்வர் உத்தரவிட்டிருந்தால், காவல் துறை சரியான முறையில் செயல்பட்டிருந்தால் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டிருந்தால், 41 உயிர்களை இழந்திருக்க வேண்டியதில்லை.

இன்னும் ஆழமாகப் பேசமுடியும். ஆனால் இந்த அரசாங்கம் ஒரு நபர் கமிஷன் அமைத்துள்ளது. விசாரணை தொடங்கிவிட்டது. அதனால் மேலோட்டமாகத்தான் பேச முடியும். இவ்வளவு பிரச்சனை நடந்துவிட்டது. தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னார். ஆனால் இன்று தலைகுனிந்து நிற்கும் காட்சியைப் பார்க்கிறோம். நாடே அதிர்ந்துவிட்டது.

இதுவரை எத்தனையோ அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறது. எந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் இல்லாத அளவுக்கு 41 உயிர்கள் பறி போயுள்ளது என்று சொன்னால், இந்த அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். ஆட்சி உங்கள் கையில் இருக்கிறது, ஆட்சியாளர்களைத்தான் கேட்க முடியும். யார் யார் மீதோ பழி சுமத்தி தப்பிக்கக் கூடாது. ஓர் அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இனியாவது பொதுக்கூட்டத்துக்கு முறையான பாதுகாப்பு தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நான் 163 தொகுதிகளில் மக்களை சந்தித்தேன், 5 முதல் 6 மாவட்டத்தில் தான் காவல்துறை பாதுகாப்பு கொடுத்தனர், மற்ற இடங்களில் நம்முடைய அதிமுக தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் தான் பாதுகாப்பு கொடுத்தனர். ஆளுங்கட்சி முதல்வர் கூட்டம் நடத்தினால், ஆளே இல்லாத பகுதியில்கூட காவலர்களை நிறுத்தி பாதுகாப்பு கொடுக்கிறீர்கள். அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஆனால் ஆளே இல்லாத இடத்தில் பாதுகாப்புக் கொடுக்கும் முதலமைச்சர், ஆயிரக்கணக்கான பேர் இருக்கும் இடத்தில் ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று மக்கள் கேட்கும் கேள்விக்கு முதல்வர் பதில் சொல்லியாக வேண்டும். இதற்கெல்லாம் பதில் சொல்வதற்கு மக்கள் 2026 தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். உங்களுக்குத் தகுந்த பதிலடி வழங்குவார்கள்.

அதுமட்டுமல்ல, ஸ்டாலின் மாடல் அரசு உயர் அதிகாரிகளை, செய்தியாளர்களை சந்தித்து இந்த ஆட்சியின் திட்டங்களைச் சொல்ல வேண்டும் என்று பணித்து, இந்த 10 நாட்களாக இந்த ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் என்று சொல்லி வருகிறார்கள். அது சொல்லலாம், ஆனால் கரூரில் நடந்த சம்பவத்தை எப்படி அரசு செயலாளர் சொல்ல முடியும்?

ஒருநபர் கமிஷன் அமைத்துவிட்டு அரசு செயலாளர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். உங்கள் துறையின் பணிகளை மட்டும் நீங்கள் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு அவர் எப்போது அங்கு சென்றார். இவர் ஏன் கையைக் காட்டவில்லை என்பதெல்லாம் உங்களுடைய பேச்சாக இருக்கக்கூடாது. இதெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தோண்டியெடுத்து தவறான செயலில் ஈடுபடுகின்ற அதிகாரிகளை விடமாட்டேன்.

என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? மக்களின் வரிப்பணத்தில் தான் உங்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே, நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு மக்கள் துயரத்தை எண்ணி துடித்துக் கொண்டிருக்கிறார்கள். மிகப் பெரிய துயர சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுவது எந்த விதத்தில் சரி? அரசியல்வாதிகள் தப்பித்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும், இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த ஆட்சியிலும், அதிகாரிகளிடமும் அது கிடைக்காது.

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி நடந்த சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுகிறார், நீங்க என்ன அரசியல்வாதியா? சட்டத்தைப் பாதுகாப்பது தான் உங்கள் பொறுப்பு. சரியான பாதுகாப்பு கொடுக்காததால் இத்தனை பேரை இன்றைக்கு நாம் இழந்திருக்கிறோம். கரூரில் ஒரு டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடக்கிறது, அப்படியிருக்கும்போது ஏடிஜிபி செய்தியாளர்களிடம் நியாயப்படுத்தி பேசினால், கீழே இருக்கும் அதிகாரி எப்படி நியாயமாக விசாரிப்பார்? இவை எல்லாமே நடந்த தவறை மறைப்பதற்கு அரசு நடத்தும் கண் துடைப்பு நாடகம்.

இவ்வளவு பிரச்சனை ஏற்பட்ட பிறகும் முதல்வர் ஸ்டாலின் திருந்தவில்லை. கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்மணியைத் தூக்கிக்கொண்டு செல்கிறார்கள், தலை சாய்ந்து செல்கிறார்கள். இப்படி தமிழர்கள் தலை குனிந்த காட்சிகளைக் கண்டு அனைவரும் பதறிப்போயிருக்கிறார்கள், இதற்கு பதில் சொல்ல வேண்டியது முதல்வர் தானே?

ஒருநபர் கமிஷன் அமைத்துள்ளீர்கள், எந்த தகவல் என்றாலும் அதை கமிஷனில் தான் கொடுக்க வேண்டும். அதிகாரிகள் மூலம், தன்னுடைய அதிகாரத்தை வைத்து உண்மை சம்பவத்தை மறைத்துவிடலாம் என்றால் நிச்சயமாக நடக்காது, மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.

கரூரில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஏன் பதறுகிறார்? மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் இருக்கக் கூடாது, ஆனால் அவர் முகத்தில் பயம் தெரிகிறது. அவர் பேச்சில் பயம் தெரிகிறது, மாறி மாறி அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் எல்லாம் உண்மையை மறைத்துப் பேசுகிறார்கள். இதற்கெல்லாம் தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

பணத்தைக் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று கரூர் எம்எல்ஏ நினைத்துக்கொண்டிருக்கிறார். ஒருமுறை மக்கள் ஏமாந்துவிட்டார்கள், இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள். உங்களுடைய போலிக் கொலுசு, போலி வாக்குறுதி இனி எடுபடாது.

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 3 சென்ட் இடம் தன்னுடைய சொந்தப் பணத்தில் வாங்கிக் கொடுப்பதாகவும், வீடு கட்டித் தருவதாகவும் 25 ஆயிரம் பேருக்கு வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அத்தனையும் வெற்று அறிவிப்பு. அவற்றை எல்லாம் மாவட்ட மக்கள் ஞாபகம் வைத்திருக்கிறார்கள், எப்போது தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். சரியான தண்டனை வழங்குவார்கள்.

துயரச் சம்பவம் நடந்துவிட்டது. முதல்வர் இரவோடு இரவாக வந்து ஆறுதல் சொன்னார். ரைட்டு. துணை முதல்வர் உல்லாசமாக வெளிநாடு போய்விட்டார். ஏன் இங்கே நாடு பத்தி எரிஞ்சிக்கிட்டு இருக்கு, நாட்டு மக்கள் பதறிக்கொண்டு இருக்கிறார்கள். உடனே தனி விமானம் பிடித்து வருகிறார், பார்த்தார், மீண்டும் விமானம் ஏறி போய்விட்டார். இவரெல்லாம் ஆண்டால் நாடு உருப்படியாக இருக்குமா? மக்கள் உயிரிழந்து துடிக்கும் நேரத்தில் கூட இவர்களுக்கு இரக்கம் இல்லை, உல்லாச சுற்றுப்பயணம் தான் முக்கியம். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாட்டு மக்கள் உணரவேண்டும்.

ஒரு துணை முதல்வர் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்படும்போது எங்கே இருக்க வேண்டும்? தமிழ்நாட்டில் இருந்து தேவையான உதவிகளை செய்துகொடுக்க வேண்டும். கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதையெல்லாம் திட்டமிட்டு செயல்படுத்தி இருந்தால் ஒரு நல்ல துணை முதல்வர் என்று சொல்லலாம். ஆனால் அதையெல்லாம் கருணாநிதி குடும்பத்தில் எதிர்பார்க்க முடியாது.

யார் எப்படி இருந்தால் என்ன? தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். மக்களை சுரண்டி உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும். இதுதான் ஆட்சியாளர்களின் குறிக்கோள். இனியாவது அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டத்துக்கு முறையான பாதுகாப்பு கொடுங்கள், இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்று பிரித்துப் பார்க்காதீர்கள். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நம்முடைய சகோதர, சகோதரிகள். யார் இறந்தாலும் அது நம் குடும்ப இழப்பு என்பதை உணரவேண்டும். திமுக இன்னமும் உணர்ந்தபாடில்லை.

அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஜால்ரா அடிக்கின்றன. திருமாவளவன் உண்மையில் மனசாட்சியோடு பேசுகிறாரா? 41 உயிர் போன நேரத்தில் ஏதேதோ குற்றச்சாட்டுகள் சொல்லி ஆட்சியாளர்களுக்கு தூபம் போடுவதை விட்டுவிடுங்கள்.

இதே திருமாவளவன் திருச்சியில் மாநில மாநாடு நடத்தினார். அவரை எப்படியெல்லாம் அலைக்கழித்தார்கள் என்பதை அவரே கூறினார். கம்யூனிஸ்ட் கட்சியினர் விழுப்புரத்தில் மாநாடு நடத்தினார்கள், முழுமையான அனுமதி கொடுக்கவில்லை என்பதை எல்லாம் மறந்துவிடாதீர்கள் உங்கள் கட்சிக்கும் இதே நிலை ஒருகாலத்தில் வந்தே தீரும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+