செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக ஒரே நேரத்தில் தனது வேட்பாளர் பட்டியலையும் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டையும் அறிவித்துள்ளது. இந்த முடிவுகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள கணக்கான அரசியல் முடிவுகள் குறித்து பல்வேறு விவாதங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில், ஓரம்கட்டபட்ட சீனியர்கள், 60 புதுமுகங்களுக்கு வாய்ப்பு உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கும் போது, கட்சியில் உதயநிதியின் கை ஓங்கியுள்ளது என்கின்றனர் திமுக உடன்பிறப்புகள்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அதிமுக ஏற்கனவே தொகுதிப் பங்கீட்டை முடித்து, 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இந்த சூழலில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திமுக சார்பில் போட்டியிடும் 164 வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று வெளியிட்டார். அதன்படி, கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் களம் காண்கிறார்.
திமுக வேட்பாளர் பட்டியல்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார். தற்போதைய அமைச்சர்களில் காட்பாடியில் துரைமுருகன், திருச்சி மேற்கில் கே.என்.நேரு, ஆத்தூரில் ஐ.பெரியசாமி, திருவண்ணாமலையில் எ.வ.வேலு, குறிஞ்சிப்பாடியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அருப்புக்கோட்டையில் சாத்தூர் ராமச்சந்திரன், திருச்சுழியில் தங்கம் தென்னரசு, திருமயத்தில் ரகுபதி, ஈரோடு மேற்கில் முத்துசாமி, திருப்பத்தூரில் பெரியகருப்பன், ஆலந்தூரில் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் மீண்டும் களம் காண்கின்றனர்.
புதிய முகங்கள்
திமுக வேட்பாளர் பட்டியல் கட்சியினரின் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய அமைச்சர்கள் பலருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், 60-க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது இளம் தலைமுறையை அரசியலுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட 31 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், 3 அமைச்சர்கள் மற்றும் 17 மாவட்டச் செயலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அமைச்சர்களுக்கு வாய்ப்பில்லை
அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் மற்றும் காந்தி ஆகியோருக்கு இந்த முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்திக்கு ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதன் மூலம் கட்சியில் உதயநிதி ஸ்டாலினின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக கூட்டணி கட்சிகள்
இந்த முறை திமுக தனது வேட்பாளர் பட்டியல் மற்றும் தொகுதி ஒதுக்கீட்டில் மூன்று முக்கிய அம்சங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு சாதகமாக இருக்கும் என கருதப்படும் சென்னை நகரின் 16 தொகுதிகளில், வேளச்சேரி தொகுதியை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 15 தொகுதிகளில் திமுகவே நேரடியாக போட்டியிடுகிறது. இதன் மூலம் சென்னை நகரில் நேரடியாக மோத தயாராக திமுக முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
கொங்கு மண்டலம்
கூட்டணிக் கட்சிகளை மட்டும் நம்பாமல், முக்கிய பகுதிகளில் தானே களம் இறங்கும் திட்டம் இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுக ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் திமுக திட்டமிட்டு, கடந்த சில ஆண்டுகளாக கொங்கு மண்டலத்தில் தீவிரமாக பணியாற்றி வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
செந்தில் பாலாஜி
கரூர் மற்றும் அரவக்குறிச்சியில் தொடர்ந்து வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, தற்போது கோவை போன்ற முக்கிய நகரத்தில் போட்டியிடுவது அதிமுகவுக்கு நேரடி சவாலாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்படும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு இது சிக்கலை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
திமுக கூட்டணி
திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதிலும் பல்வேறு அரசியல் கணக்குகள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தல்களில் திமுக தொடர்ந்து வெற்றி பெற்ற சில தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், அதிமுகவின் முக்கிய தலைவர்கள் போட்டியிடும் சில கடினமான தொகுதிகளும் கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் 18 தொகுதிகளில் அதிமுகவுடன் நேரடி போட்டி நிலவுகிறது.
தென் மாவட்ட அரசியல்
இது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கும் சமநிலையாக தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வழக்கமாக வட மாவட்டங்களில் தொகுதிகள் வழங்கப்படும் நிலையில், இந்த முறை தென் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியகுளம் (தனி) தொகுதி வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது.
2026 தேர்தல் களம்
இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் 5 தனித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதும் சில முக்கிய சூழலை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாக பார்க்கப்படுகிறது. வேட்பாளர் பட்டியல் மற்றும் தொகுதி ஒதுக்கீட்டை ஒரே நேரத்தில் அறிவித்து திமுக தேர்தலுக்கான தனது முதற்கட்ட வேலைகளை முழுமையாக முடித்துவிட்ட நிலையில், இதன் மூலம் தேர்தல் களம் சூடுபிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
-
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
தேவர் Vs தேவர் மகன்.. திண்டுக்கல் சீனிவாசனை எதிர்க்கும் ஐபி செந்தில்குமார்! வரலாறு படைக்குமா திமுக? -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்.. ஏப்.6 ஆம் தேதி வெளியாகும் புதிய வாக்காளர் பட்டியல்! -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
Election Exclusive: எல்லாம் போச்சு.. இரட்டை இலையை கருக விட்ட எடப்பாடி! திமுக ’தலைகளை’ லாக் செய்ய லட்டு மாதிரி சான்ஸ்!












Click it and Unblock the Notifications