கண் சிவக்கும் ஸ்டாலின்.. 40க்கு 40 ஜெயித்தாலும் சறுக்கிய திமுக ஓட்டு சதவீதம்.. பாயப்போகுது ஆக்ஷன்!
சென்னை: தமிழ்நாடு - புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளையும் "ஸ்வீப்" செய்திருந்தாலும், திமுகவின் வாக்கு சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது. 24 தொகுதிகளில் போட்டியிட்டு கடந்த முறை 33% ஓட்டு பெற்ற திமுக, தற்போது 22 தொகுதிகளில் போட்டியிட்டு 27% வாக்குகளையே பெற்றுள்ளது. வாக்குகள் குறைந்த இடங்களில் கட்சியினர் மீது விரைவில் நடவடிக்கை பாயும் எனக் கூறப்படுகிறது.
2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வென்றிருப்பதால் இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் 99 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி மொத்தமாக 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஸ்டாலினின் ஆசை பாதி தான் நிறைவேறியது: தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தமுள்ள தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. "நாற்பதும் நமதே, நாடும் நமதே" என்ற முழகத்துடன் பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால் ஸ்டாலினின் விருப்பத்தில் பாதி தான் நிறைவேறியுள்ளது. நாற்பதுக்கு 40 கிடைத்தாலும், இந்தியா கூட்டணியால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.
இந்நிலையில், தேர்தல் முடிவுகளை அனைத்து அரசியல் கட்சிகளும் அலசி வருகின்றன. அந்த வகையில், திமுக முழு வெற்றி பெற்றிருந்தாலும் கடந்த தேர்தலை விட திமுகவுக்கு வாக்கு சதவீதத்தில் பெரிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது. 2019 லோக்சபா தேர்தலை விட திமுகவின் வாக்கு சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
திமுக வாக்கு சதவீதம் சரிவு: 2024 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் திமுக ஒட்டுமொத்தமாக - 26.93%, அதிமுக - 20.46%, பாஜக - 11.24%, நாம் தமிழர் கட்சி - 8.19%, காங்கிரஸ் - 10.67%, பாமக - 4.4%, தேமுதிக - 2.59%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2.15%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2.5% வாக்குகள் பெற்றுள்ளன.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது, 38 தொகுதிகளில் வெற்றி பெற்று, 53 சதவீதம் வாக்குகளைப் பெற்றது திமுக கூட்டணி. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் 33.53% வாக்குகள் பெற்றது திமுக.
கடும் சரிவு: இந்த தேர்தலிலும் அதே 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது திமுக. எனினும் திமுக கூட்டணி 47 சதவீதம் வாக்குகளையே பெற்றுள்ளது. திமுகவின் வாக்கு சதவீதம் 33.43 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக குறைந்துள்ளது. 2 தொகுதிகளில் குறைவாக போட்டியிட்டதை கணக்கில் எடுத்தாலும் கூட இது கணிசமான சரிவு தான்.
கடந்த முறை, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியாக நின்றிருந்த நிலையில் மொத்தமாக 30 சதவீத வாக்குகள் பெற்றன. தற்போது அதிமுக கூட்டணி சுமார் 23 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேபோல பாஜக தனியாக 11.24 வாக்குகளையும் பாஜக கூட்டணி மொத்தமாக, சுமார் 18 சதவீதம் வாக்குகளையும் பெற்றுள்ளது.
கமல் சேர்ந்தும்: தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள நாற்பது தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருந்தாலும், பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளதால் அதனை தங்கள் வளர்ச்சி என்றும், 2026ல் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்றும் பாஜகவினர் கெத்தாக கூறி வருகின்றனர்.
ஆனால், திமுக கூட்டணிக்கு 2019ல் கிடைத்த வாக்குகள் தற்போது சரிந்துள்ளது கவனத்தை பெற்றுள்ளது. இத்தனைக்கும் கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது 3.69 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த முறை திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தும் கூட இந்த வீழ்ச்சியை சந்தித்துள்ளது திமுக கூட்டணி.
ஆக்ஷன் பாயும்: சில தொகுதிகளில் திமுக கூட்டணி குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விருதுநகர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் 1 லட்சத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
திமுக வாக்கு சதவீதம் சரிவடைந்த தொகுதிகளில், சரிவுக்கான காரணம் என்ன என்பதை அலசி அக்கட்சி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தப் பகுதியில் வாக்கு குறைந்தாலும், அதற்குரிய பொறுப்பாளர் மீது நடவடிக்கை பாயும் என திமுக தலைவர் ஸ்டாலின் முன்பே எச்சரித்திருந்த நிலையில், வரும் நாட்களில், வாக்கு சதவீதங்களை அலசி, ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுப்பார் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications