Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடையும் காங்., - திமுக கூட்டணி? 40 சீட்டா? வாய்ப்பேயில்லை! 3 நாள் கெடு கொடுத்த அறிவாலயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி வரும் நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 40 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் எதிர்பார்க்கும் நிலையில் ராஜ்யசபா சீட்டை கேட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் 25 தொகுதிகளுக்கு மேல் ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது என திட்டவட்டமாக திமுக சொன்ன நிலையில் கூட்டணியை விட்டு வெளியேறும் முனைப்பில் காங்கிரஸ் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், கூட்டணி குறித்து இன்னும் 3 நாட்களில் முடிவெடுக்க காங்கிரஸ் தலைமைக்கு கெடு விதித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்க இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை வேகப்படுத்த அரசியல் கட்சிகள் முனைந்துள்ளன. ஆளும் திமுக, கடந்த சில ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வரும் கூட்டணியுடனேயே தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டிருந்தது.

ஆனால் காங்கிரஸ் கட்சி, கடந்த தேர்தல்களில் பெற்ற வெற்றிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முறை அதிக தொகுதிகள் கோரி வலியுறுத்தி வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றதையும், சமீபத்திய மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் முன்னிலை பெற்றதையும் முன்வைத்து, இந்த முறை குறைந்தது 40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன்வைத்துள்ளது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 DMK

தமிழக தேர்தல் களம்

அதோடு, இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்ற கருத்தும் காங்கிரஸ் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த கோரிக்கைகளுக்கு திமுக தரப்பில் ஒப்புதல் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கூட்டணிக்குள் புதிய கட்சிகள் இணைந்துள்ள சூழலில் அதிக தொகுதிகளை ஒதுக்க இயலாது என்ற நிலைப்பாட்டை திமுக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுக காங்கிரஸ் கூட்டணி

குறிப்பாக, 25 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வரை மட்டுமே வழங்க முடியும் எனத் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு, கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் மட்டுமே அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வர முடியும் எனக் கூறியுள்ளது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சிக்கலான கட்டத்துக்கு சென்றுள்ளது. பேச்சுவார்த்தை காலதாமதமாக தொடங்கியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக கூட்டணி

காங்கிரஸ் தரப்பு பல மாதங்களுக்கு முன்பே பேச்சுவார்த்தை குழுவை அமைத்து தயாராக இருந்த நிலையில், திமுக தரப்பில் இருந்து தாமதமாக அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாமதம் இரு கட்சிகளுக்கிடையிலான நம்பிக்கை குறைவாகியுள்ளது என்ற அரசியல் மதிப்பீடுகளும் முன்வைக்கப்படுகின்றன. இதற்கிடையில் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியாக திமுக புதிய கட்சிகளை இணைத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக, பிற கட்சிகளுடன் கூட்டணி விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டதால் தொகுதிகள் பகிர்வு சிக்கலாகியுள்ளது என திமுக வட்டாரங்கள் விளக்கம் அளிக்கின்றன.

முறியும் கூட்டணி?

இதன் மூலம் கூட்டணிக்குள் அதிகாரத்தை திமுக கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கூட்டணி உறவில் ஏற்பட்டுள்ள மன உளைச்சல் அரசியல் தொடர்புகளிலும் வெளிப்படத் தொடங்கியுள்ளது. வழக்கமாக பரஸ்பர பாராட்டு, அரசியல் மரியாதை போன்ற நடைமுறைகள் குறைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது கூட்டணிக்குள் உறவு சீர்குலைவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தல்

தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்னதாகவே கூட்டணி ஒப்பந்தத்தை இறுதி செய்ய திமுக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், மாநிலங்களவைத் தேர்தல் காலக்கெடு முன்னிட்டு முடிவு எடுக்க வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மாறாக, காங்கிரஸ் தரப்பு தங்களது கோரிக்கையில் தளர்ச்சி காட்டாத நிலைப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், கூட்டணி தொடருமா அல்லது தனித்துப் போட்டியிடும் சூழல் உருவாகுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. இரு கட்சிகளும் இறுதி முடிவை எடுக்கும் வரை பேச்சுவார்த்தை வாயில் திறந்தே இருக்கும் என்றாலும், தற்போதைய நிலைமை கூட்டணியின் எதிர்காலத்தை நிச்சயமற்றதாக மாற்றியுள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+