காங்கிரஸின் 12 எம்எல்ஏக்கள் செயல்பாடு.. ரிப்போர்ட்டை தயார் செய்த திமுக.. அதிர்ச்சியில் கதர்கள்!
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் கனிமொழி சந்திப்பு நடத்தி 10 நாட்களாகிவிட்ட சூழலில், இன்னும் கூட்டணி இறுதி செய்யப்படாமல் உள்ளது. இதனிடையே காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் தொடர்பான சர்வே ரிப்போர்ட் ஒன்றையும் திமுக தயார் செய்திருக்கிறது. இதனால் திமுக தலைமை தொகுதி பங்கீட்டில் தெளிவாக காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிட்ட சூழலில், திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான இழுபறி நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் கூட்டணி இறுதி செய்யப்படாத சூழலில், இரு தரப்பிலும் ஒவ்வொரு நாளும் வார்த்தை மோதல் அதிகரித்து வருகிறது. இதனிடையே திமுக தரப்பில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவே அமைக்கப்படவில்லை.

ராகுலுடன் கனிமொழி சந்திப்பு
அதேபோல் சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியை உறுதி செய்வதற்காக மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து திமுக எம்பி கனிமொழி சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த சந்திப்பின் போது திமுக தலைமையின் கருத்துக்களை ராகுல் காந்தியிடம் பரிமாறி இருக்கிறார்.
சர்வே எடுத்த திமுக
ராகுல் காந்தி தரப்பில் சில கணக்குகள் சொல்லப்பட்டுள்ளன. இதனை திமுக தலைமையிடமும் கனிமொழி கூறியுள்ளார். இந்த சந்திப்பு நடந்து 10 நாட்களாகிவிட்ட சூழலில், கூட்டணியை இறுதி செய்யாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள் செயல்பாடுகள் தொடர்பாக திமுக தரப்பில் தனியாக ஒரு சர்வே எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
கறார் காட்டும் திமுக
அந்த சர்வேயின் முடிவில் 12 பேரின் செயல்பாடுகள் பெரியளவில் இல்லை.. அவர்களுக்கு மீண்டும் சீட் கொடுத்தால், நிச்சயம் அங்கு அதிமுக கூட்டணியே வெல்லும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீட்டில் திமுக தலைமை கறாராக இருக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டால் 2 தொகுதிகள் கூடுதலாக ஒதுக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
காங்கிரஸ்க்கு செல்லும் ரிப்போர்ட்
அதுமட்டுமல்லாமல் ஒரு எம்பிக்கு 3 தொகுதிகள் வீதம் காங்கிரஸ் கட்சிக்கு 27 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆட்சியில் பங்கு என்ற பேச்சிற்கு இடமில்லை என்று திமுக தெளிவாக கூறிவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தொடர்பான சர்வே ரிப்போர்ட்டை காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவிடம் காட்டவும் திமுக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications