முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் ப.சிதம்பரம் சந்திப்பு! முன்கூட்டியே வீட்டிற்கு வந்த கனிமொழி, டிஆர் பாலு
சென்னை: முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வந்த நிலையில், அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாகவே கனிமொழி மற்றும் டிஆர் பாலு ஆகியோரும் அங்கு வந்துள்ளனர். இதையடுத்து ப.சிதம்பரத்துடன் திமுக தலைமை ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் சூழலில், திடீரென முதல்வர் ஸ்டாலினுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சந்தித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தரப்பில் அதிக தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திமுகவிடம் கேட்டு வந்தது. ஆனால் கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இணைந்திருப்பதால், 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக கூறியது.

ஆனால் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அந்த எண்ணிக்கையை ஏற்பதாக இல்லை. இதனிடையே ராஜ்ய சபா தேர்தலுக்கான மனுத்தாக்கல் நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ளது. இதனால் நாளைய வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுத்திருக்கும் சூழலில், டெல்லியில் பல்வேறு ஆலோசனை நடந்து வருகிறது.
இருந்தாலும் திமுக உடனான தொகுதி பங்கீட்டை முடிவு செய்யாமல், ராஜ்ய சபா வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவிக்க முடியாது. இது காங்கிரஸ் கட்சிக்கு மறைமுக கெடுவாக அமைந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கிரிஷ் சோடங்கரை தவிர்த்துவிட்டு நேரடியாக ப.சிதம்பரத்தை திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பி இருக்கிறார்.
இதன்பின் சென்னை வந்த ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின் ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை இருவரும் ஒரே காரில் முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கு புறப்பட்டனர். அப்போது திமுக எம்பி-க்களான கனிமொழி மற்றும் டிஆர் பாலு ஆகிய இருவரும் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இதையடுத்து ப.சிதம்பரம் வந்த சூழலில், அவருடன் முதல்வர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் டிஆர் பாலு ஆகியோர் ஆலோசித்து வருகின்றனர். ஏற்கனவே ராகுல் காந்தியுடன் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தியதும் கனிமொழி தான். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை நடப்பதால், என்ன முடிவு எடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications