ஆந்திராவுக்கு சென்றது முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய டீம்.. ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கு அழைப்பு!
சென்னை: தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் மாநில தலைவர் பல்லா சீனிவாசராவ் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் எ.வ. வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் ஆகியோர் அடங்கிய குழு அழைப்பு விடுத்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதுகுறித்து மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்தும் முடிவுகள் மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 5 ஆம் தேதி அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.

அந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு "கூட்டு நடவடிக்கைக் குழு" அமைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.
தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய "கூட்டு நடவடிக்கை குழு" அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதன் அடிப்படையில், முதல்வர் ஸ்டாலின், 7 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கும், முன்னாள் முதல்வர்களுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் 7 மாநிலங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முதல் கூட்டம் மார்ச் 22ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அமைச்சர்கள் கொண்ட குழு அந்த ஏழு மாநிலங்களுக்கு நேரடியாக சென்று அங்குள்ள முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சந்தித்து 22 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு கடிதம் வழங்கி, அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இதன் முதல் கட்டமாக ஒடிசா சென்ற தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை ஏற்ற நவீன் பட்நாயக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக உறுதி அளித்தார்.
இதையடுத்து, கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழக வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் இன்று புதன்கிழமை (மார்ச் 12) சென்று கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோரை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள கட்சிகளை அழைப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் எ.வ வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் ஆகியோர் அடங்கிய குழு இன்று விஜயவாடா சென்றது. ஆந்திரா மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் பல்லா சீனிவாசராவ் ஆகியோரை நேரில் சந்தித்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் கடிதத்தை ஒப்படைத்து, அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
மேலும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நாளை வியாழக்கிழமை (மார்ச் 13) தெலுங்கானா மாநிலத்துக்கு சென்று கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications