முதலில் உங்கள் உடல்நலம்... பிறகு பொதுநலம்... மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ்
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் முதலில் தங்கள் உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்.
காணொலி மூலம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், மறைந்த ஜெ.அன்பழகன், சிங்கார ரத்தினசபாபதி, பேராசிரியர் அன்பழகன் மகள் மனமல்லி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக மாவட்டச் செயலாளர்கள்
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டாலின், மாவட்டச் செயலாளர்கள் தங்கள் உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும், குறிப்பாக அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட மற்ற உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் முழுமையாக கட்சிப்பணிகளில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டாலின் அட்வைஸ்
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதற்கேற்ப கட்சி நிர்வாகிகள் தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும் என வலியுறுத்தி தெரிவித்திருக்கிறார். வயது முதிர்ந்த நிர்வாகிகளை கூடுமானவரை வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தபடி ஒருங்கிணைப்பு பணிகளை மட்டும் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், கொரோனா பரவல் மற்றும் மக்கள் மனநிலை பற்றியும் கேட்டறிந்துள்ளார்.

ஜெ.அன்பழகன் மறைவு
ஜெ.அன்பழகன் மறைந்து 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவர் மறைந்த சோகத்தில் இருந்து ஸ்டாலின் இன்னும் முழுமையாக மீளவில்லை என கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்டச் செயலாளர் ஒருவர் கூறினார். மறைந்த அன்பழகன், மின்வாரிய தொமுச பொதுச்செயலாளர் சிங்கார ரத்தினசபாபதி, பாவலர் மீனாட்சிசுந்தரம், நாகை முன்னாள் மாவட்டச் செயலாளர் அம்பலவாணன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிடம் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் எழுந்துநின்று மவுன அஞ்சலி செலுத்தக் கூறினார் ஸ்டாலின்.

கிளைக் கழக தேர்தல்
கிளைக் கழக தேர்தல் உள்ளிட்ட உட்கட்சி தேர்தல் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின், இன்னும் சில மாதங்களுக்கு அந்தப் பணிகளை அப்படியே நிறுத்தி வைப்பது என முடிவெடுத்தார். மேலும், மறைந்த ஜெ.அன்பழகன் குடும்பத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Click it and Unblock the Notifications
