Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டணிக்கு வரும் அண்ணியார்.. காங்கிரஸுக்கு அவுட் பாஸ் ரெடி? 25 சீட்டை வைத்து திமுக போடும் கணக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அரசியல் களத்தில் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக எந்தக் கூட்டணியில் சேரப்போகிறது என்ற முடிவை வெளிப்படுத்தாமல் சஸ்பென்ஸாக வைத்திருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 90% சதவீதம் திமுகவுடன் சேர்வார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்

கடந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றது. ஆனால் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, கூட்டணியில் தொடர விருப்பமில்லை என்று தேமுதிக வெளிப்படையாகவே அறிவித்தது.

குறிப்பாக, தேர்தல் நேரத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அதிமுகவிலிருந்து தேமுதிக விலகியது. இதனைத் தொடர்ந்து, பாஜக மற்றும் புதிதாக உருவான தவெக ஆகிய கட்சிகளுடனும் தேமுதிக தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின.

DMK DMDK Alliance

2026 சட்டசபை தேர்தல்

ஆனால் அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்த பிரேமலதா விஜயகாந்த், அதிமுக - பாஜக கூட்டணிக்கு வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கலாம் எனக் கணித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு உருவாகியுள்ள அனுதாப அலை, தேர்தலில் ஓட்டுகளாக மாறும் என்ற நம்பிக்கையும் தேமுதிக தரப்பில் உள்ளது. இந்த அனுதாப அலை முழுமையாக பயன் தர வேண்டும் என்றால், வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள ஒரு பெரிய கூட்டணியில் இணைவதே சரியான முடிவு என பிரேமலதா கருதுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேமுதிக கூட்டணி

இந்த சூழலில், நடிகர் விஜய் தலைமையிலான தவெகவுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது. தவெக காங்கிரஸுடன் இணைந்து ஒரு கூட்டணி உருவானால், அந்த அணியில் தாமும் சேரலாம் என்ற எண்ணம் பிரேமலதாவுக்கு இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் - தவெக கூட்டணி உருவாகாததால், அந்த முயற்சியிலிருந்து தேமுதிக பின்வாங்கியது. இதன் பிறகே திமுக கூட்டணி குறித்த பேச்சுகள் தீவிரமடைந்தன.
இந்நிலையில், திமுக தரப்பில், அமைச்சர் எ.வ.வேலு தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து பேசி வருவதாக கூறப்படுகிறது.

பிரேமலதா விஜயகாந்த்

இந்த சந்திப்புகளில், தேமுதிகவுக்கு 7 சட்டமன்ற தொகுதிகள் வழங்குவது குறித்தும், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட தனியாக 2 தொகுதிகள் ஒதுக்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தேர்தல் செலவுகளின் ஒரு பகுதியை திமுக ஏற்கும் வகையிலும் ஆலோசனைகள் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, திமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள காங்கிரஸ் கட்சி, 35க்கும் மேற்பட்ட தொகுதிகளை கோரி வருகிறது. ஆனால் திமுக தலைமையகம் அதிகபட்சமாக 25 தொகுதிகள் வரை மட்டுமே வழங்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு

அமைச்சரவையில் இடம் வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற அணுகுமுறையையே திமுக பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில் தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்தால், காங்கிரஸுக்கு வழங்கப்படும் தொகுதிகள் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. ஒருபடி மேலாக, தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் வரை ஒதுக்கலாமா என்ற விவகாரத்தையும் திமுக தலைமை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இது காங்கிரஸ் தரப்புக்கு சவாலாக மாறக் கூடும்.

காங்கிரஸ்

ஏற்கனவே தேசிய அளவில் பல மாநிலங்களில் பின்னடைவை சந்தித்து வரும் காங்கிரஸ், தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை விட்டு வெளியேறும் நிலையில் இல்லை என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. இதனால், இறுதியில் திமுக நிர்ணயிக்கும் தொகுதி எண்ணிக்கையையே காங்கிரஸ் ஏற்க வேண்டிய சூழல் உருவாகலாம். மேலும், தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்தால், ஏற்கனவே கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் தொகுதி பங்கீட்டிலும் மாற்றம் ஏற்படலாம். கடந்த தேர்தலில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பிற கூட்டணி கட்சிகளுக்கு 2 முதல் 10 தொகுதிகள் வரை வழங்கப்பட்டன.

திமுக கூட்டணி கணக்கு

இந்த முறை தேமுதிக சேரும் பட்சத்தில், அந்த கட்சிகளின் தொகுதி எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கேட்போம் என பல கூட்டணி கட்சிகள் கூறிவரும் நிலையில், தேமுதிக வருகை திமுக தலைமையகத்திற்கு ஒரு புதிய சவாலாக மாறக்கூடும். மொத்தத்தில், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேமுதிக திமுக கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில் தான் உள்ளது என்கின்றனர் தேமுதிகவினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+