சிவகங்கை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு தரக்கூடாது.. கார்த்தி சிதம்பரத்திற்கு திமுக நிர்வாகிகள் செக்
சென்னை: சிவகங்கை லோக்சபா தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத்தரக்கூடாது என்றும் திமுகவே போட்டியிட வேண்டும் என்று தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் திமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளதால் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காகவும் வெற்றி வாய்ப்பு குறித்தும் தொகுதிகள் வாரியாக, கட்சி நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

அந்த வகையில் சிவகங்கை மற்றும் விருதுநகர் தொகுதிகளின் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடைபெற்றது. ஆர்.எஸ். பாரதி, அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, உதயநிதி உள்ளிட்டோர் , தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக திமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அந்த தொகுதியில் இந்த முறை திமுகவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
சிவகங்கை லோக்சபா தொகுதியில் கடந்த காலங்களில் ப.சிதம்பரம் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்துள்ளார். தற்போது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்பியாக உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கார்த்தி சிதம்பரம் முயற்சி செய்தும் பலன் தரவில்லை. இதனையடுத்து அவர் லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
தேர்தல் நெருங்குவதால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கார்த்தி சிதம்பரத்திற்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கார்த்தி சிதம்பரம் பூத் கமிட்டி கூட்டங்களை நடத்தி வரும் நிலையில் அவருக்கு எதிராக செயல்படும் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி ஆதரவாளர்களும் தனியாக பூத் கமிட்டி கூட்டங்களை நடத்தி வந்தனர்.
பொது இடங்களில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கடுமையாக பேசி வருகின்றனர். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் கார்த்தி சிதம்பரம் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு செக் வைக்கும் வகையில் சிவகங்கை லோக்சபா தொகுதியை இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத்தரக்கூடாது என்றும் திமுகவே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications