கிடப்பில் சிபாரிசு கடிதங்கள்... தவிக்கும் திமுக நிர்வாகிகள்... காரணம் லோக்கல் பாலிடிக்ஸ்..!
சென்னை: கட்சியினர் வழங்கும் சிபாரிசு மற்றும் கோரிக்கை கடிதங்கள் மீது ஒரு சில அமைச்சர்களை தவிர பெரும்பாலான அமைச்சர்கள் அதனை கிடப்பிலேயே வைத்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் திமுக நிர்வாகிகள்.
இதற்கு அமைச்சர்களுக்கு இருக்கும் துறை ரீதியான அலுவல் பணிகளும், உள்ளூர் அரசியலும் தான் காரணமாக பார்க்கப்படுகிறது.
உதாரணத்துக்கு ஒரு ஒன்றியச் செயலாளர் ஏதேனும் கோரிக்கையுடன் ஒரு அமைச்சரிடம் கடிதம் கொடுக்கிறார் என்றால், அது அந்த மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட மந்திரியின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே அந்தக் கடிதம் பரிசீலிக்கப்படுகிறது.

திமுக ஆட்சி
கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் திமுகவுக்கான பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் வந்ததே தவிர குறையவில்லை. ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என ஒவ்வொரு திமுக தொண்டனும் வெறிகொண்டு தேர்தல் பணியாற்றியதை கடந்த தேர்தலில் பார்க்க முடிந்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் நமக்கு நல்லது நடக்கும் என ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் இரவு பகல் பாராமல் தங்கள் உழைப்பை கொட்டியிருக்கின்றனர்.

உதாரணம்
இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்து 5 மாதங்களாகியும் கட்சியினர் பலர் அளித்த கோரிக்கை கடிதங்கள் மற்றும் சிபாரிசு கடிதங்களை பல அமைச்சர்கள் இன்னும் கிடப்பிலேயே வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சியினர் என்று வந்துவிட்டால் அதில் புரோட்டகால் முறை பார்க்கப்படுகிறது. உதாரணத்துக்கு ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு திமுக நிர்வாகி, புதுக்கோட்டை மாவட்ட அமைச்சர் ஒருவரிடம் கடிதம் கொடுக்கிறார் என்றால், அந்த கடிதத்தில் ராமநாதபுரம் திமுக மாவட்டச் செயலாளரின் ஒப்புதலோ, அல்லது அந்த மாவட்டத்தில் அமைச்சராக இருப்பவரின் ஒப்புதலோ இருக்கிறதா என பார்க்கப்படுகிறது. இது எடுத்துக்காட்டுத் தான்.

உள்ளூர் அரசியல்
அவ்வாறு இல்லாத கடிதங்கள் பெரும்பாலும் தூசு படிந்து அமைச்சர் அலுவலகங்களிலேயே இருக்கின்றன. இப்படி உள்ளூர் அரசியல் காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் கூட எதையும் சாதித்துக்கொள்ள முடியவில்லை என திமுக நிர்வாகிகள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.

காரியம் சாதிக்கலாம்
இதனிடையே அதிமுக ஆட்சியில் அண்ணா திமுக கரைவேட்டி கட்டிய எந்தவொரு தொண்டனும் எந்த அமைச்சரிடம் வேண்டுமானாலும் காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும் அதிமுகவில் தொண்டர் படை கட்டுக்குலையாமல் நிற்கிறது.












Click it and Unblock the Notifications