Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“கருங்காலி” ரூபத்துல வந்த பிரச்சனை.. சூடோ சயின்ஸ் பற்றி படிச்சு படிச்சு சொன்னாரே ஸ்டாலின்! இப்படியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று காலையில் தான், ஆன்மீக மருத்துவம், சோதிட மருத்துவம் என்று போலி அறிவியலைத் திணிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டு இருப்பதாக பேசினார். அடுத்த சில மணி நேரங்களிலேயே, "கருங்காலி" ரூபத்தில் கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது திமுக.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில மாநாடு, 20-ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பேசினார். அப்போது, 'சூடோ சயின்ஸ்' (Pseudo Science) எனப்படும் போலி அறிவியல் முறைகள் குறித்துப் பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

DMK facing big criticism due to karungali malai

போலி அறிவியல் பற்றி பேசிய ஸ்டாலின்: "அறிவியலுக்குப் புறம்பான மருத்துவ முறைகள், பொதுமக்களைச் சோதனை எலிகளாக மாற்றிடும் அபாயம் கொண்டவை. மக்களின் உயிர் காத்து, அவர்களின் ஆயுளை நீட்டிக்கும் நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்கிற வகையில் Mixopathy (மிக்ஸோபதி), ஒருங்கிணைந்த மருத்துவம், Common Foundation Course, வேதகால மருத்துவம், ஆன்மீக மருத்துவம், சோதிட மருத்துவம் என்று போலி அறிவியலைத் திணிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டு இருப்பதால் அதை எதிர்த்துப் போராட வேண்டிய கடமையுணர்வு நமக்கு இருக்கிறது. மருத்துவர்களின் அறிவுப்பூர்வமான - உணர்வுப்பூர்வமான போராட்டத்தில் நாங்கள் துணை நிற்கிறோம்." என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அடுத்த சிறிது நேரத்தில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற திமுக மா.செக்கள் கூட்டத்தில் திமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என பலரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் முடிந்த பிறகு, வெளியில், மூத்த அமைச்சர்கள் கே.என்.நேருவும், ஐ.பெரியசாமியும் அளவளாவிக் கொண்டனர்.

கருங்காலி மாலை அமைச்சர்: அப்போது அமைச்சர் நேருவிடம், அவர் போட்டிருந்த கருங்காலை மாலை பற்றி கேட்டுள்ளார் அமைச்சர் ஐ.பெரியசாமி. "இது வெள்ளி கருங்காலி மாலை" என கே.என்.நேரு சொல்ல, எனக்கு வைரத்தில் கருங்காலை மாலை வேண்டும் என ஐ.பெரியசாமி கிண்டலாக கூறியுள்ளார். உடனே தனது கழுத்தில் இருந்த மாலையை கழற்றிய அமைச்சர் நேரு, "பரவாயில்ல, இதைப் போட்டுக்கங்க" எனக் கூறி ஐ.பெரியசாமி கழுத்தில் அணிவித்தார்.

DMK facing big criticism due to karungali malai

ஐ.பெரியசாமி அதை திருப்பிக் கொடுக்க முயன்றபோது, "உங்களுக்குத்தான் அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகுது.. நீங்களே போட்டுக்கங்க" எனக் கூறிய நேரு, அவரை கழுத்தில் இருந்து கருங்காலி மாலையைக் கழற்ற விடவில்லை. இதையடுத்து, இருவரும், அவரவர் காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றனர். அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு, அமைச்சர் கே.என்.நேரு கருங்காலி மாலை போட்டுவிடும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கடும் விமர்சனங்கள்: இந்நிலையில் தான் பகுத்தறிவு பேசும் திமுகவினர், கருங்காலி மாலை அணிந்துள்ளது பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன. மூட நம்பிக்கைகளை எதிர்க்கும், திராவிட கட்சியினர், குறிப்பாக திமுகவினர் இதுபோன்ற நம்பிக்கைகளை நம்புகின்றனரா என்றும் நெட்டிசன்கள் பலரும், சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி விவாதித்து வருகின்றனர்.

கருங்காலி மாலை அணிவதால் செல்வம் பெருகும், உடல்நலம் கூடும் என்று யாரோ கிளப்பி விட அதனால் கருங்காலி மாலைகளின் டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி பலரும், ஒரிஜினல் கருங்காலி மாலை எனக் கூறி ஆயிரங்களில் மாலைகளை விற்று காசு பார்த்து வருகின்றனர். கருங்காலி மாலைக்கான டிமாண்டை கண்டு செங்காலி மாலையும் மார்க்கெட்டில் குதித்து கல்லா கட்டி வருகிறது.

மூட நம்பிக்கை: கருங்காலி மாலையை அதிக விலை கொடுத்து வாங்கி பலரும் அணிந்து வரும் சூழலில், கருங்காலி மரத்தில் சில மருத்துவக் குணங்கள் இருக்கலாம், ஆனால், கருங்காலி மாலை அணிந்தால் பணம் பெருகும், தொழில் விருத்தி அடையும், அதிர்ஷ்டம் சேரும் என்பதெல்லாம் கப்சா என்கிறார்கள் பலர். கருங்காலி மாலை ஏற்கனவே பெரும் விவாதப் பொருளாக இருந்து வரும் நிலையில், திமுக அமைச்சர்கள் அதைப் பயன்படுத்துவது கடும் விமர்சனங்களைக் கிளப்பி விட்டுள்ளது.

"கருங்காலி மாலை போட்டால் உடம்பு சரியாகும்", "மாட்டு மூத்திரம் குடித்தால் கொரோனா வராது" இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பகுத்தறிவு பேசும் கட்சி அறிவியலுக்கும் நவீன மருத்துவத்துக்கும் எதிரான இதுபோன்ற மூட நம்பிக்கைகளை பொது வெளியில் வளர்த்தெடுப்பது ஆபத்தில் போய் முடியும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இன்று காலையில் தான் ஆன்மீக மருத்துவம், சோதிட மருத்துவத்தை கண்டித்துப் பேசினார் முதல்வர், கருங்காலி மாலை என்ன திராவிட மருத்துவமா என்றும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+