தொட்டவங்கள விட மாட்டோம்.. சீறிய விஜய்! சிக்கிய திமுக விஐபி.. பிடி அரசகுமார் அதிரடி கைது.. பரபர!
சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பள்ளி நிர்வாகங்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனியார் பள்ளிச் சங்கத் தலைவராக சொல்லப்படும் பி.டி. அரசகுமார் மற்றும் அவரது கூட்டாளி முத்துக்குமார் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அதிரடியாக அவரை கைது செய்துள்ளனர். பி.டி. அரசகுமார் திமுக நிர்வாகியாக இருக்கும் நிலையில், இந்த வழக்குப் பதிவு கல்வித்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், பல்வேறு தனியார் பள்ளி நிர்வாகங்களிடமிருந்து கிடைத்த புகார்களின் அடிப்படையில் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அனுமதி மற்றும் அங்கீகாரம் தொடர்பாக செல்வாக்கு இருப்பதாக கூறி பணம் வசூலிக்கப்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புகாரின்படி, பள்ளிக் கல்வித்துறையில் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதாக பி.டி. அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் கூறியதாக சொல்லப்படுகிறது.

பள்ளிக் கல்வித்துறை
அதை நம்பிய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகங்கள், அரசு அனுமதி விரைவாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான ரூபாயை வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், உறுதியளித்தபடி அனுமதிகளை பெற்றுத் தரவில்லை என்றும், பெற்ற பணத்தையும் திருப்பி வழங்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, ஏமாற்றப்பட்டதாக கூறும் பள்ளி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தை அணுகியுள்ளனர். அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆரம்பகட்ட விசாரணை நடத்தி தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பி டி அரசகுமார்
பி.டி. அரசகுமார், தனியார் பள்ளிகளுக்கான ஒரு சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அரசியல் ரீதியாகவும் அறியப்பட்ட நபரான அவர், முன்பு பாரதிய ஜனதா கட்சியில் இருந்ததாகவும், பின்னர் அந்தக் கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான முத்துக்குமார், பள்ளி நிர்வாகங்களுடன் தொடர்பு கொண்டு பணப் பரிமாற்றங்களில் முக்கிய பங்காற்றியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி
புகாரின்படி, இந்த சம்பவங்கள் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. அப்போது கல்வித்துறையில் செல்வாக்கு இருப்பதாக கூறி பல்வேறு பள்ளி நிர்வாகங்களிடம் பணம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. போலி வாக்குறுதி அளித்து பணம் பெற்றது, மோசடி செய்தது மற்றும் சட்டவிரோதமாக பணம் வசூலித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அதிரடியாக அவரை கைது செய்துள்ளனர்.
மோசடி வழக்கு
இதையடுத்து, இருவரிடமும் விரைவில் விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது. புகார் அளித்த பள்ளி நிர்வாகங்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தற்போது இடைத்தரகர்களாக செயல்பட்டதாக கூறப்படும் இருவர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் மூலம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் பணம் கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு சென்றதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு
அதற்காக பணப் பரிமாற்ற விவரங்கள், வங்கி கணக்கு பதிவுகள், தொலைபேசி தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை போலீசார் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. விசாரணையில் புதிய தகவல்கள் கிடைத்தால், மேலும் சிலர் இந்த வழக்கில் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், பி.டி. அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோரிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications