பிரிவினைவாதத்தை தூண்டுகிறது திமுக.. சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பாஜக நயினார் ஆவேசம்
சென்னை: சட்டசபையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்த நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக பிரிவினைவாதத்தை தூண்டுகிறது என்று கூறினார். மேலும் 2026 தேர்தலுக்கு பிறகு திமுக ஆட்சியில் இருக்காது என்றும் அவர் கூறினார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 14ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. அப்போது முதல் நாள் பொது பட்ஜெட்டும், அதற்கடுத்து நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடந்து வந்தது இந்த நிலையில் 5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடியது

அப்போது சட்டசபையில் மாநில சுயாட்சி பற்றி பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய - மாநில அரசுகளின் உறவுகள் தொடர்பாக ஆராய நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் நாகநாதன் ஆகியோரை அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஜனவரி மாதம் தமது அறிக்கையைத் தாக்கல் செய்யும் என்றார்.
சுயாட்சி குறித்து பேசிய ஸ்டாலின்
ஒவ்வொரு விஷயத்தையும் மத்திய அரசிடம் போராடி பெற வேண்டியுள்ளது. உரிமைகள் காக்கப்பட்டால்தான் இந்தியா ஒற்றுமையுடன் இருக்கும். இதை உணர்ந்தே மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை திமுக முன்னெடுத்துள்ளது. மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என தமிழகம் வலியுறுத்துகிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் திரு.கு.மே.ஜோசப் அவர்களைத் தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பாஜக வெளிநடப்பு
அப்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பேசுவதற்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அதிமுக எம் எல் ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதேபோன்று பாஜகவும் வெளிநடப்பு செய்தது. பாஜக எம் எல் ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக பிரிவினைவாதத்தை தூண்டுகிறது என்றும், அனைத்து அதிகாரமும் தனக்கே வேண்டும் என்பதா? என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவர் கூறியதாவது:-
திமுக ஆட்சியில் இருக்காது
2026 சட்டசபை தேர்தலுக்கு பிறகு திமுக ஆட்சியில் இருக்காது. இந்தியா வல்லரசு நாடாக ஆக வேண்டும் என்றால் எல்லா மாநிலங்களும் ஒன்றாக தான் இருக்க வேண்டும். சட்டமேதை அம்பேத்கர் என்ன சொன்னார் என்றால் எல்லா மாநிலங்களும் ஒன்றாக இருக்க வேண்டும் அப்போது தான் நாடு வளர்ச்சியடைய முடியும் என்று.
இந்திய நாடு பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டது எதற்காக.. நிர்வாக வசதி சீராக இருக்க வேண்டும் என்பதற்காக தான் அங்க கொண்டு வந்தாங்க. இப்போது இவங்க என்ன பண்றாங்க என்றால், இப்போது இவங்க தான் ஆட்சியில் இருக்கிறாங்க. இன்னும் ஓராண்டு தான் ஆட்சி இருக்கிறது. தேர்தலை முன்னிறுத்தி எதாவது ஒரு தீர்மானம்.. எதாவது ஒன்னு கொண்டு வர வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பாஜக சட்டமன்ற குழு தலைவர் மாற்றம்?
இது உண்மையிலேயே மக்களுக்கு விரோதமானது. இந்த தேசத்திற்கு விரோதமானது. வருங்கால நாட்டு மக்களுக்கு செய்யும் விரோதமான செயல். மக்கள் இதை சிந்தித்து புரிந்துகொள்வார்கள். பெண்களை பற்றி மிக மிக அவதூறாக பொன்முடி பேசுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதே இல்லை. அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறோம். இன்று தான் கொடுத்திருக்கோம். அதையாவது எடுத்துக்கொள்கிறார்களா என்று பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பாஜக சட்டமன்ற குழு தலைவர் மாற்றம் இருக்குமா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "மாற்றம் இருந்தால் சந்தோஷம் தானே.. ஒரே ஆளே எல்லா பதவிகளையும் வைத்துக்கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications