"ரைட்டு.. கிளம்பிட்டாங்க.." இதுதான் அந்த 'இறங்கி' அடிக்கிற ஸ்டைலா.. முதல் போனியே அவர் தான் போல!
சென்னை : திமுக ஐடி விங்கின் மாநில செயலாளராக டி.ஆர்.பி.ராஜா பொறுப்பேற்ற பிறகு, அணியில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. புதிதாக பலர் பணியமர்த்தப்பட்டனர்.
இனி எதிரிகளின் பாணியில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் இது விங் 2.ஓ என்றும் கூறியிருந்தார் டி.ஆர்.பி.ராஜா. அவர் சொன்னபடி ஐ.டி விங் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது.
நேற்று கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஹேஷ்டேக்கை நாள் முழுவதும் டாப் ட்ரெண்ட் செய்த நிலையில், இன்று அண்ணாமலையை டேமேஜ் செய்யும் விதமாகவும் ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

திமுக ஐடி விங்
2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஐ.டி விங்கின் பணிகள் அரசியல் கட்சிகளுக்கு அத்தியாவசியமானதாக இருந்து வருகிறது. இதனை உணர்ந்தேதகவல் தொழில்நுட்ப பிரிவை தொடங்கி, அதன் செயலாளராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நியமித்தார் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி. அதன் பிறகு தி.மு.க ஐ.டி விங் சமூக ஊடகங்கள் மூலம் தங்களது திராவிட கொள்கைகளைத் தினமும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் முக்கிய பிரச்சார அங்கமாக தி.மு.க ஐடி விங் செயல்பட்டது. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகும் தி.மு.க ஐடி விங் தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், சமூக வலைதளங்களில் இயங்கும் மற்றவர்கள் ஐடி விங்கின் பணிகள் குறித்து அவ்வப்போது அதிருப்தி தெரிவித்து வந்தனர். கட்சிக்குள்ளும் இதுதொடர்பாக பிரச்சனைகள் ஏற்பட்டன.

டி.ஆர்.பி.ராஜா
நிதி அமைச்சராகவும் இருந்துகொண்டு ஐடி விங் செயலாளராகவும் செயல்படுவது சிரமமாக இருப்பதாகக் கூறி தான் விலகிக் கொள்வதாக ஸ்டாலினிடம் தெரிவித்தார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இதையடுத்து, அந்தப் பொறுப்புக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏவுமான டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டார்.

விங் 2.O
டி.ஆர்.பி.ராஜா பொறுப்பேற்ற பிறகு ஐ.டி விங்கை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. பலர் புதிதாக பணியமர்த்தப்பட்டனர். அதுபோக, ஆலோசகர்களாகவும் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். தி.மு.க ஐ.டி விங் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்ல உள்ளதாக அந்த அணியின் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா சமீபத்தில் தெரிவித்தார்.

கட்சிக்குள்
கட்சித் தொண்டர்களிடையே ஐ.டி விங் பணிகள் பற்றி எழுந்த சலசலப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஆதங்கத்தில் நம்மில் சிலரும், அரசியல் புரிதல் இல்லாத காரணத்தினால் சிலரும், எழுப்பும் கேள்விகளுக்கும் இங்கே பதில் சொல்ல துவங்கினால் அது எதிரிக்கே ஆதாயம். அணியில் உள்ள பலரும், இல்லாத உடன்பிறப்புகள் பலரும், சிறப்பான அர்ப்பணிப்போடு செயல்பட்டு தலைவர் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் எனத் தெரிவித்தார்.

நாகரீக அரசியல் சரிவராது
மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்திய அரசியல் களம் எதிர்பார்க்கும் மாபெரும் தலைவராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். அவரது திராவிட மாடல் ஆட்சியை நோக்கி வரும் அவதூறுகளையும் பொய்களையும் பரப்புவோரை விட்டு வைக்க மாட்டோம். இதற்கு நாகரீக அரசியல் சரிவராது. எதிரி பொய்களையும் அவதூறுகளையும் பரப்பினால், அவனை அவனது பாணியிலேயே வெளுத்து வாங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார் டி.ஆர்.பி.ராஜா.

கருணாநிதி பிறந்தநாள்
கருணாநிதி பிறந்தநாளை டார்கெட்டாக வைத்து, கருணாநிதி ஆட்சியின் சாதனைகள், அவரது பெருமைகள் என பரப்பி அன்றைக்கு முழுவதும் ட்ரெண்டிங்கிலேயே இருக்க வேண்டும் என திமுக ஐடி விங்கில் திட்டமிடப்பட்டிருந்தது. ஐடி விங் செயலாளரான டிஆர்பி ராஜாவும் கருணாநிதி குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வந்தார். இதனால் கருணாநிதி பிறந்தநாள் ஹேஷ்டேக் ட்விட்டரில் நாள் முழுவதும் ட்ரெண்டிங்கில் இருந்தது.

முரசொலிக்கும்
இதுதொடர்பாக இன்று ட்வீட் செய்துள்ள ஐடி விங் மாநில செயலாளர் டி.ஆர்.பி.ராஜா, #HBDKalaignar99 ஹேஷ்டேக் 36 மணி நேரம் ட்ரெண்டிங்கில் இருந்தது. பூத் லெவல் வரை புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணிகள் நடைபெறுகின்றன. மாநிலம் முழுவதும் ரெடியாகும் 'திராவிட மாடல் பாசறை'க் கூட்டங்கள். ஐடி விங் 2.O இனி 'முரசொலி 'க்கும் எனத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பிறந்தநாளுக்கும்
நேற்றைய ட்ரெண்டிங் சூட்டை அதோடு விடாமல் இன்றும் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராகவும் ஒரு ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தது திமுக ஐடி விங். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளான இன்று அண்ணாமலையை டேமேஜ் செய்யும் விதத்தில் ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி சுற்றலில் விட்டனர். அந்த ஹேஷ்டேக் பல்லாயிரம் ட்வீட்களில் பயன்படுத்தப்பட்டு ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

ஆரம்பிச்சிட்டாங்க
இதுகுறித்து இளம் இணைய உடன்பிறப்புகளிடம் கேட்டால், நாகரீக அரசியல் பாணி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது. கைக்கு கை, பல்லுக்குப் பல் என திமுக ஐடி விங் இறங்கிவிட்டது. இதெல்லாம் ஆரம்பம்தான், இனி எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு மூவுக்கும் அதிரடி பதிலடி இருக்கும். இனி வரும் நாட்களில் இன்னும் உக்கிரத்தைப் பார்க்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications