"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் அனல் பறந்து வரும் நிலையில், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் ரிசல்ட்டுக்கு கவுண்டவுன் தொடங்கப்பட்டுள்ளது. ரிசல்ட் வருவதற்கு இன்னும் எத்தனை நாள், எத்தனை மணி நேரம் உள்ளது என கவுண்ட்டவுன் ஓடத் தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு சட்டசபைக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அனைத்துக் கட்சிகளும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளன.

ஆளுங்கட்சியான திமுக, தேர்தல் பணிகளைப் தீவிரப்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான 'கவுண்ட்டவுன்' திரை, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அண்ணா அறிவாலயத்தின் நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரிய மின்னணுத் திரையில், ஸ்டாலின் படத்துடன் "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்", "திராவிட மாடல் 2.0" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது வெறும் தேர்தல் பிரச்சார வாசகம் மட்டுமல்லாமல், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான 'திராவிட மாடல்' ஆட்சியின் அடுத்த கட்டத்தை (Version 2.0) நோக்கிய பயணமாகக் கட்சியினரால் பார்க்கப்படுகிறது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே பல மேடைகளில் "234 க்கு 234 தொகுதிகளையும் வெல்வதே நமது இலக்கு" என்று கூறியுள்ள நிலையில், அந்த இலக்கை நோக்கிய பயணத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கும் வகையில் கவுண்டவுன் திரை அமைக்கப்பட்டுள்ளது.
அந்தத் திரையில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான (மே 4, 2026) நோக்கிய நேரக் கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளுக்கு இன்னும் எத்தனை நாட்கள், மணி நேரங்கள், நிமிடங்கள் மற்றும் நொடிகள் மீதமுள்ளன என்பதைக் காட்டுகிறது இந்த 'கவுண்ட்டவுன்'.
அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தரும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் இந்தத் திரையைப் பார்த்துவிட்டுச் செல்கின்றனர். சிலர் இந்தத் திரையின் முன்னே நின்று செல்ஃபி மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கு இன்னும் 46 நாட்கள் இருப்பதாக காட்டுகிறது திமுகவின் கவுண்டவுன். அண்ணா அறிவாலயத்தில் கவுண்டவுன் திரை வைப்பது இது முதல்முறையல்ல. கடந்த தேர்தலின் போதும் இதுபோன்று அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications