கைக்கு ரிப்போர்ட் வரணும்.. 4 நாள் பிளான்.. எம்பிக்களுக்கு ஸ்டாலின் கொடுத்த.. கடுமையான ஆபரேஷன்
சென்னை: நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
ஆளும் திமுக சட்டசபை தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. தேர்தல் பணிகளை இப்போதே மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மிகப்பெரிய அளவில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை திமுக முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 45 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடுவீடாகச் சென்று எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மக்களை சந்திக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் மக்களை சந்தித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்த நிலையில் இந்த பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் வரும் 2026 ஏப்ரல் - மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக வரும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் தனது தேர்தல் வியூகத்தை அமைத்துள்ளது. அந்த வகையில்தான் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின் - திமுக எம்பிக்கள் உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் வாரத்திற்கு குறைந்தது நான்கு நாட்கள் செலவிட வேண்டும் என்றும், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் தங்கள் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை தனக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில், மக்கள் தங்கள் குறைகளைத் தீர்க்க உதவும் வகையில், 'உங்களோடு ஸ்டாலின்' மற்றும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் பார்வையிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைத்து பெண்களுக்கும் உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், விடுபட்டவர்களுக்கு இந்த முகாம்கள் மூலம் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
2024 நாடாளுமன்றத் தேர்தலில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்காக சட்டமன்ற உறுப்பினர்கள் கடுமையாக உழைத்தனர். நாம் 40 இடங்களையும் வென்றோம். இப்போது, சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே, உங்கள் தேர்தல் பணிகளை அதற்கேற்ப திட்டமிடுங்கள். என்று ஸ்டாலின் கூட்டத்தில் தெரிவித்தார்.
மாதம் மாதம் ரிப்போர்ட் வழங்க வேண்டும்
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மற்றும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய பணிகள் குறித்த செயல்திறன் அறிக்கையை மாதத்திற்கு இருமுறை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மத்திய அரசின் "மக்கள் விரோத நடவடிக்கைகளைப்" பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு உத்தரவிட்டார்.
அதுவும் திமுக தரப்பு வட்டார தகவல்களின்படி, ஸ்டாலின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக சில சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கியுள்ளார். "ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நான்கு அல்லது ஐந்து தொகுதிகள் வழங்கப்படும். மீதமுள்ள தொகுதிகளுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபடுத்தப்பட வாய்ப்புள்ளது" என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்க்கட்சிகள் மும்முரம்
ஏற்கனவே எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எழுச்சி பயணம் என்று தமிழ்நாடு முழுக்க பயணம் மேற்கொண்டு வருகிறார். 120 தொகுதிகளை கடந்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதுபோக நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்திற்காக மாநிலம் முழுக்க, வாரம் 2-3 மாவட்டங்கள் என்று அளவில் சனிக்கிழமை பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். இதற்கு இடையேதான் தற்போது முதல்வர் ஸ்டாலின் திமுக எம்பிக்களை களத்திற்கு செல்லும்படி உத்தரவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications