திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. தேதி குறித்த முதல்வர் ஸ்டாலின்.. துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு!
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 20ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசிக்கப்படும் என்றும் துரைமுருகன் அறிவித்திருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், திமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே மண்டல அளவில் மாநாடு நடத்தப்பட்டு வரும் சூழலில், புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வருகிறார். அதேபோல் SIR பணிகளிலும் திமுகவினர் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.

ஆனால் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடித்து, தொகுதி பங்கீடு நிறைவு செய்து, வேட்பாளர்களுக்கான நேர்காணலை நடத்தி வருகிறது. ஆனால் திமுக தரப்பில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு கூட அமைக்கப்படவில்லை. இதன்பின் தொகுதி பங்கீடு செய்யப்பட்டு, வேட்பாளர்கள் நேர்காணல் நடத்த வேண்டும். இதனால் திமுக இன்னும் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜனவரி 20ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 20ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கவுள்ளது.
இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்றும் துரைமுருகன் அறிவித்திருக்கிறார். இதன்பின் திமுக தரப்பில் அடுத்தடுத்த பணிகள் வேகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பின், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆன் லைன் வாயிலாக நடத்தப்பட்டது.
அதில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரையும் முதல்வர் ஸ்டாலின் வெளுத்து வாங்கினார். அதேபோல் காங்கிரஸ் கட்சியுடன் மோதல் இருந்து வரும் சூழலில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதனால் இந்த மா.செ.க்களின் ஆலோசனைக் கூட்டம் திமுக வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications