செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் சிறை முன் திரண்ட திமுகவினர்.. ஏராளமான கார்களால் ஸ்தம்பித்த சாலை
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். இதையடுத்து அவரை வரவேற்க புழல் சிறை முன் திமுகவினர் பலர் திரண்டனர். புழல் நெடுஞ்சாலையில் ஏராளமான கார்கள் குவிந்ததால், சாலை ஸ்தம்பித்து போனது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 15 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்து முடிப்பதற்கு ஏற்படும் காலதாமதம், நீண்ட நாட்களாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வருவது, இந்த இரண்டு காரணங்களையும் அடிப்படையாக கொண்டுதான், உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாக கூறியிருந்தது. அதேபோல் செந்தில் பாலாஜி இந்த ஜாமீனை பெறுவதற்கு ரூ.25 லட்சத்துக்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று நிறுத்தி வைத்தது. அதேநேரம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஜாமீன் உத்தரவு நகல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் தரப்பட்டது. 2 நபர்கள் ரூபாய் 25 லட்சத்துக்கான ஜாமீன் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய சிறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.
நீதிபதியின் உத்தரவை அடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் சிறைக்கு வெளியே திமுக தொண்டர்கள் குவிந்தார்கள். இந்நிலையில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். அந்த சாலையில் வரவேற்க காத்திருந்த திமுக தொண்டர்களின் கார்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் ஏராளமான கார்கள் புழல் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டுள்ளதால், சாலை ஸ்தம்பித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். அதேநேரம் போக்குவரத்து போலீசார் உடனடியாக வந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்கள். செந்தில் பாலாஜி வெளியே வந்த உடன் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.
முன்னதாக இன்று காலை உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் திரண்ட திமுகவினர் அங்கிருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கினார்கள். மேலும் செந்தில் பாலாஜியை வாழ்த்தி கோஷங்களை எழுப்பி, நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.


Click it and Unblock the Notifications
