பாதி அண்ணா..பாதி கலைஞர்..முதல்வர் என்ன இப்படி மாறிட்டார்..சட்டசபையில் துரைமுருகன் நவரசம்
சென்னை: திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இப்போது நிறைய மாறியிருக்கிறார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். முன்பு இருந்த மு.க ஸ்டாலினுக்கும் இப்போது உள்ள மு.க ஸ்டாலினுக்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது. பாதி அண்ணாவாகி விட்டார் பாதி கலைஞர் ஆகி விட்டார் என்று சட்டசபையில் பேசிய துரைமுருகன் கூறினார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் பேசுவது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும். அவர் நகைச்சுவையாகவும் பேசுவார். கோபமாகவும் சில நேரங்களில் பேசுவார். சில நேரங்களில் துரைமுருகன் பேசுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதிலும் கருணாநிதி பற்றி எப்போது பேசினாலும் தன்னையும் மீறி கண்கலங்கிவிடுவார். கடந்த வாரம் சட்டசபையில் பேசும் போது, "நான் நீண்ட நெடுங்காலம் திமுகவில் இருப்பவன். இனிவரும் நாள்களிலும் இருப்பேன். என்னைக்காவது ஒருநாள் மறையப் போகிறவன். அப்போது, என் கல்லறையில் "கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்" என ஒருவரி எழுதினால் போதும்'' என்று பேசினார்.

இன்றைய தினம் சட்டசபை விதியை தளர்த்தி ஆளுநருக்கு எதிராக கொடுவரப்பட்ட தீர்மானத்தின் மீது பேசிய துரைமுருகன், முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்தார்.இந்த தீர்மானத்தை சரியான நேரத்தில் நம்முடைய முதல்வர் அவர்கள் கொண்டு வந்துள்ளார்கள். அந்த தீர்மானத்தில் கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் நாகரீகத்தோடு நியாயத்தை எடுத்துரைக்கிற வகையில் காழ்ப்புணர்ச்சி சிறிதுமின்றி வாக்கியங்கள் அமைக்கப்பட்டிருப்பதை நான் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். ஒரு கனத்தை இதயத்தோடுத்தான் இந்த தீர்மானத்தை முதல்வர் கொண்டு வந்து இருப்பார்கள்.
ஆளுநர் பதவி தேவையில்லை என்பது எங்கள் கட்சி தோன்றியபோதே பிரகடனப்படுத்தி உள்ளது. நாங்களெல்லாம் ஆளுங்கட்சியாக வருவோமோ என்று தெரியாதபோதே கவர்னர் தேவையில்லை என்று தெரிவித்த கட்சி திமுக. அரசியல் நிர்ணய சபையில் பேசியவர்கள் கூட ஆளுநர் தேவையில்லை என்றுதான் சிலர் சொன்னார்கள். ஆனால் மத்திய அரசுக்கு மாநில அரசை ஆட்டிப்படைக்கவும், 365 சட்டப்பிரிவை பயன்படுத்தி கலைக்க தங்களுக்கு ஒரு ஏஜெண்டு வேண்டும் என்று ஆளுநர் பதவியை உருவாக்கினார்கள்.
பல மாநிலங்களில் ஏற்பட்ட குழப்பங்களுக்கெல்லாம் காரணம் ஆளுநர்கள்தான். முதன்முதலாக தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கலைத்தது கேரளாவில் நம்பூதிரிபாட் ஆட்சியைத்தான். மேற்கு வங்கத்தில் மம்தாவோடு செய்த தகாறு காரணாமாக சபாஷ் கொட்டி அவரை ராஜ்யசபா தலைவராக்கி உள்ளார்கள்.
அதை பார்த்துதான் நம்முடைய ஆளுநருக்கு ஒரு நப்பாசை அடடா வங்கத்திலே அவர் செய்து அவர் ஆயிருக்கிறாரே அக்லீஸ்ட் நமக்கு இது கிடக்காதா என்று நாக்கை தொங்கப்போடுவார்கள்.

ஆளுநரை போய் பலமுறை நாங்கள் பார்த்துள்ளோம். முதல்வரோடு நான் போயுள்ளேன் பேசி உள்ளோம். ஆனால் பேசினோமே தவிர காரியம் ஒன்றும் நடக்கவில்லை. இவர் மனதில் ஒரு மாதிரியாக உள்ளே வைத்துக் கொண்டு பேசுகிறார். அவர் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
நமது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இப்போது ரொம்பவே மாறி விட்டார். நான் கூட நினைத்தேன் என்ன இப்படி ஆகி விட்டார். அவர் பாதி அண்ணாவாகவும், பாதி கருணாநிதியாகவும் மாறி விட்டார் என்று சொல்லும் போதே அனைவரும் ஆமோதிப்பது போல ரசித்து சிரித்தனர். இன்றைய தினம் சட்டசபையில் பேசிய துரைமுருகன், முதலில் நகைச்சுவையாக பின்னர் கோபமாக, பிறகு ஆக்ரோசமாக பேசினார். முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பேசும் போது தன்மையாக பேசினார். மொத்தத்தில் இன்றைய தினம் சட்டசபையில் பேசிய அமைச்சர் துரைமுருகன் நவரசத்தையும் வெளிப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications