பணிப்பெண் சாதியை சொல்லி அடித்துக் கொடுமை.. திமுக எம்எல்ஏ மகன் ஜாமீன் மனு தள்ளுபடி.. கோர்ட் உத்தரவு
சென்னை: வீட்டுப் பணிக்கு வந்த பட்டியலின சிறுமியை கொடுமைப்படுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. மகன் மற்றும் மருமகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கருணாநிதி. இவரது மகன் மதிவாணன். அவருக்கு மெர்லின் என்ற மனைவி உள்ளார். சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வந்த இவர்கள் வீட்டில் பணிப்பெண்ணாக சேர்ந்தார் ஒரு சிறுமி. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநருங்குன்றம் அவரது சொந்த ஊர். பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த இவர் 12 ஆம் வகுப்பு படித்து முடித்தவர். நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்து உள்ளார்.

குடும்ப வறுமை காரணமாக சென்னை மதிவாணன் வீட்டில் இவர் பணிப்பெண்ணாக சேர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் மதிவாணன் மனைவி மெர்லின் சிறுமியை பல வகைகளில் கொடூரமாகக் கொடுமைப்படுத்தியதாக கடந்த மாதம் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். அவரது வீட்டில் பணிக்குச் சேர்ந்ததில் இருந்தே முறையாக ஊதியம் வழங்காமல் பெற்றோரை சந்திக்க அனுமதிக்காமலும் இருந்ததாக மாணவி குற்றம்சாட்டினார். தன்னிடம் தினமும் 16 மணி நேரம் வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாக தெரிவித்த மாணவி, பயங்கரமாக தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், சாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதாகவும் கூறினார்.
இவர் முன் வைத்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. திமுக எம்.எல்.ஏ மகன் மற்றும் அவரது மனைவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இந்த நிலையில் சென்னை திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், "தனது குடும்பத்துடன் மெர்லின் மும்பை சென்ற சமயத்தில், குழந்தைக்கு உணவு வழங்க தாமதமானதால் ஊர் திரும்பிய பின்பு துன்புறுத்தி திட்டினார்கள். அவர்களின் குழந்தை முன்பாக என்னை தாக்கினார்கள்.
குழந்தை தப்பாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காக பாட்டுப் போட்டு என்னை ஆடவும் சொன்னார்கள். எனக்கு சமைக்கவோ துணி துவைக்கவோ தெரியாது என்று சொன்னால் பச்சை மிளகாயை சாப்பிட சொல்லி துன்புறுத்தினார்கள். என் அம்மாவை நான் பார்த்து 7 மாதங்கள் ஆகிவிட்டன என்று சொன்னதற்கு ஆடைகளை கழற்றி அடித்து துன்புறுத்தினார். இங்கு 3 ஆண்டுகள் வேலை செய்யாவிட்டால் அம்மா மீதும் தம்பி மீதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என ஒப்பந்தம் எழுதி படித்துக் காட்டி கையெழுத்திடச் சொன்னார்கள்.
சாதி பெயரை அடிக்கடி சொல்லி அடித்து துன்புறுத்தினார்கள். கடந்த 16 ஆம் தேதி பொங்கல் விடுமுறைக்காக அம்மாவை சந்திக்க சென்றபோது நடந்த அனைத்து விபரங்களையும் கூறினேன்." என சிறுமி கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தங்களுக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் திருவான்மியூர் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தலைமறைவான எம்.எல்.ஏ. மகனையும் மருமகளையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி மதிவாணன் - மெர்லின் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தவறான வழக்குகள் தங்கள் மீது பதியப்பட்டு இருப்பதாக அவர்கள் வாதிட்டனர். இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்களது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
