“குரங்கு போல கட்சிக்கு கட்சி தாவியவர் அமைச்சர் நிர்மல்குமார்”.. ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா பேச்சு!
சென்னை: "குரங்கு போல கட்சிக்கு கட்சி தாவியவர் நிர்மல்குமார். 7 கட்சி தாவி இங்கு வந்து உட்கார்ந்திருக்கிறார்" என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த முதல்வர் விஜய்யை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி பங்கேற்றுப் பேசினார்.

ஆ.ராசா பேசுகையில், "திமுக ஆட்சியில் தவறு நடந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை. தவெக ஆட்சியில் நடந்தால் அது தனிமனித ஒழுக்கமா? இந்த அதிபுத்திசாலிகளுக்கு பெயர் என்ன? மிசா பற்றி ஒரு அமைச்சர் பேசுகிறார். எங்கு படித்தார் என்று தெரியவில்லை.. குரங்கு போல கட்சி தாவியவர் நிர்மல்குமார். 7 கட்சி தாவி இங்கு வந்து உட்கார்ந்திருக்கிறார்.
மிசாவில் அடிபட்டவர்கள், மிதி பட்டவர்கள் இன்று யாரெல்லாம் உயிருடன் இருக்கிறார்களோ அவர்களிடம் கேளுங்கள். கி.வீரமணி இருக்கிறார், அவரை எங்கள் தாய்க்கழகம் என்பீர்கள். தியாகு இருக்கிறார். ஸ்டாலின் பற்றி அவதூறு சொல்கிறீர்கள் என அவர் சொல்கிறார். இத்தனைக்கும் அவர் திமுகவை விமர்சிப்பவர். அவர் சொல்கிறார்.
மிசா கொடுமைகள் பற்றி நாடாளுமன்றத்தில் நான் பேசினேன். பிரதமர் மோடி, உள்துறை அமைச்ச அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜகவின் அத்தனை தலைவர்கள், சிபிஐ, சிபிஐஎம் என அத்தனை கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அமர்ந்திருந்தார்கள். அப்போது நான் திமுக சார்பில் பேசினேன்.
எமர்ஜென்சி கொடுமைகளுக்காக இந்திரா காந்தி மன்னிப்பு கேட்டார். தென்னாப்பிரிக்காவில் விடுதலைப் போராட்டம். பெஞ்சமின் மொலாய்ஸ் தென்னாப்பிரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராகப் போராடிய ஒரு கவிஞர், சமூக செயற்பாட்டாளர். அவரது பேச்சும், எழுத்தும், கவிதையும் அனல் தெறிக்கிறது.
அவர் சொன்னார். ஒரு பெண்ணைக் கைது செய்து 2, 3 மாதங்கள் தனியே வைத்திருந்து, கொடுமைகள் செய்து அதன் பிறகு நீதிமன்றத்தில் நிறுத்துகிறார்கள். நீதிபதிக்கு சந்தேகம், போலீஸ் விசாரணையில் உங்களுக்கு ஏதேனும் கொடுமை நடந்ததா என விசாரிக்கிறார். அங்கிருந்த போலீஸ்காரர்கள் கண்களாலேயே மிரட்டுகிறார்கள்.
அந்தப் பெண் சொன்னார், எனக்கு எந்தக் கொடுமையும் நடக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு கொடுமை நடந்தது. போலீஸ் கைத்தடிக்கு விந்து வீசுகிற ஆற்றல் இருந்தால் இன்று நான் 3 மாத கர்ப்பிணி. அவ்வளவுதான் என்றார். நீதிமன்றம் திகைத்துப் போனது. இந்தக் கதையைச் சொன்னதும் நாடாளுமன்றத்தில் எல்லோரும் 'உச்' கொட்டினார்கள்.
அடுத்த விநாடி சொன்னேன். இதைவிடப் பெரிய கொடுமை என் அன்புத் தலைவருக்கு மிசாவில் நடந்தது. ஒரு 23 வயது இளைஞன், திருமணமாகி சில மாதங்களில் கைது செய்து அழைத்துப் போய் தாக்கி, தாடையைக் கிழிக்கிறார்கள். அவரை காப்பாற்ற முயன்று இன்னொரு இளைஞர் செத்தே போகிறார்.
சிறைக் கைதிகளைப் பார்க்க தலைவர் போகிறார். முழுக்கைச் சட்டையுடன் இருக்கிறார் அந்த மகன். அவருக்குப் புரிந்துவிட்டது. போலீஸ் உன்னை அடித்தார்களா என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன் சொன்னா, எனக்கு ஏற்பட்ட காயங்களை விசாரிக்க நீங்கள் வரவேண்டாம், இந்த நாட்டின் அரசியல் சட்டத்தின் மீது ஜனநாயகத்தின் மீது அடி விழுந்திருக்கிறது. இந்த தேசத்தைக் காப்பாற்றுங்கள் என்று சொன்னார். அந்த இளைஞன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இதனை நான் நாடாளுமன்றத்தில் பதிவு செய்தேன். ஒருவர் எழுந்து இது பொய் என்று சொன்னார்களா?
இதனை பேசிவிட்டு அவையை விட்டு வெளியே வந்தேன். ஒரு கை என்னை தொட்டது. அது பிரியங்கா காந்தி. நீங்க சொன்னதெல்லாம் உண்மையா எனக் கேட்டார். அப்படியா ஸ்டாலின் அங்கிளுக்கு நடந்தது என்று கேட்டார்." என ஆவேசமாகப் பேசியுள்ளார் ஆ.ராசா.


Click it and Unblock the Notifications
