தாய் மாமன் சீர், அண்ணன் சீர்லாம் வேண்டாம்.. பெண்கள் யார் கையையும் எதிர்பார்க்கக் கூடாது! கனிமொழி
சென்னை: தாய் மாமன் சீர், அண்ணன் சீர் எல்லாம் வேண்டாம். பெண்கள் யாரும் யார் கையையும் எதிர்பார்க்கக் கூடாது. உனக்கு சொத்துகளில் சம உரிமை இருக்கு. கல்வி இருக்கு, வருமானம் இருக்கு. சம்பாதி, தலைநிமிர்ந்து நில்லு என சொல்லி கொடுத்தது திமுக என்று திமுக எம்பி கனிமொழி பேசினார்.
மேலும் அந்த ஒரு கிராம் தங்கம் மோதிரத்தால் அந்த குழந்தைக்கு எதுவும் வந்துவிட போவதில்லை என்று கூறிய கனிமொழி, எல்லா மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான மருந்துகள் இல்லை, போதுமான மருத்துவர்கள் இல்லை' என தெரிவித்தார். திமுக முப்பெரும் விழாவில் கனிமொழி பேசியதாவது:-

சீரே எங்களுக்கு வேண்டாம்
பெண்கள் யார் கையையும் எதிர்பார்த்து நிற்கக் கூடாது என்பது திமுக கொடுக்கக் கூடிய கோட்பாடு. உனக்கு சொத்துகளில் சம உரிமை இருக்கு. கல்வி இருக்கு, வருமானம் இருக்கு. சம்பாதி, தலைநிமிர்ந்து நில்லு.. படி.. என சொல்லி தந்தது திராவிட இயக்கம். திமுக. ஆனால் இந்த ஆட்சியில் இருப்பவர்கள் கொண்டு வந்து இருக்கக் கூடிய திட்டம் தாய் மாமன் தங்கம் மோதிரம் திட்டம்.. இன்னொன்னு அண்ணன் சீர்... இந்த சீர் எல்லாம் வேண்டாம்.
ஒரு கிராம் மோதிரத்தில் என்ன வரப்போகுது
அந்த ஒரு கிராம் தங்கம் மோதிரத்தால் அந்த குழந்தைக்கு எதுவும் வந்துவிட போவதில்லை. எல்லா மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான மருந்துகள் இல்லை, போதுமான மருத்துவர்கள் இல்லை. அதை எல்லாம் பத்தி கவலையில்லை. ஆனால் பல நூறு கோடிக்கணக்கான ரூபாய் ரூபாய்களை இந்த தங்கம் மோதிரம் வாங்க செலவு செய்துவிட்டு மருத்துவர்களை எல்லாம் நகைக்கடைகளில் கியூவில் நிற்க வைத்துவிட்டு ஒரு கேடு கெட்ட ஆட்சியை தான் இப்போது தவெக நடத்தி வருகிறது.
நாங்க.. நீ (பெண்கள்) மத்தவங்களுக்கு சீர் கொடுக்கிற இடத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பது திமுக. இன்னொருத்தரிடம் போய் சீர் வாங்கிக்கொண்டு நில்லு என சொல்வது நீ. அது தாய் மாமன் தங்கம் மோதிரம் திட்டமாக இருக்கட்டும். அண்ணன் சீராக இருக்கட்டும். நம்ம கொடுக்கனும். ஏன் நமக்கு மத்தவங்க கொடுக்கனும். தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய பெண்ணை மறுபடியும் பழைய நிலைக்கே இன்னும் ஒரு 50 வருஷத்துக்கு முன்பு கொண்டு போக கூடிய ஆட்சி தான் இன்று நடக்கிறது.
நான் அவருடைய ரசிகை கிடையாது
இப்போ ஆட்சியில் இருப்பவர் தான் இப்போது பல படங்களில் பெண்கள் இப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். ரொம்ப முக்கியமான டயலாக் எல்லாம் பேசுவார் இந்த முதல்வர். பெண்கள் இப்படி உடை உடுத்த கூடாது. நான் அவருடைய ரசிகை எல்லாம் கிடையாது. டிவியில் சில நேரம் இப்படி, அப்படி போகும் போது பார்ப்பேன். பெண்கள் இப்படி உடை உடுத்தினால் நாங்க இப்படி மோசமாகத் தான் பார்ப்போம் என்று சொல்லுவார்.
பெண்களுக்கு என்று எந்த உரிமையும் கிடையாது. அவள் உடம்பின் மீது அவளுக்கு உரிமை கிடையாது. அவள் உடுத்தக் கூடிய ஆடைகள் மீது அவளுக்கு உரிமை கிடையாது. அதன்மீது வன்முறை செலுத்தக்கூடிய அதிகாரம் உனக்கு இருக்கிறது என திரும்ப திரும்ப சொன்ன ஒரு கதாநாயகனைத் தான் நாம் இப்போது தேர்ந்தெடுத்து ஆட்சி அதிகாரத்தில் இருக்க வைத்துள்ளோம். இதற்காகத் தான் எதற்கெடுத்தாலும் சீர்.. சீர் என கொடுக்கிறார்.
உன் வாழ்க்கையை நீ உருவாக்கு
சீரே வேண்டாம். நீ நின்னு உன் சொந்த காலில். உனக்கு என்ன தேவையோ அதை நீ வாங்கு. நீ உருவாக்கு.. உன் வாழ்க்கையை நீ உருவாக்கு. உன் வாழ்க்கையை நீ வாழ்.. அதற்கு உண்டான அடிப்படையை நீயே உருவாக்கு என கூறியது திராவிட இயக்கம். திமுக. மு.க ஸ்டாலின், அதற்கு முன்னால் கருணாநிதி, அண்ணா.
இதையெல்லாம் அடிச்சி நொறுக்கிவிட்டு, பெண்கள் மேலே இவருக்கு எதோ அக்கறை இருக்கிற மாதிரி அத்தனையும் பெண்களையும் கொண்டு போய் ஒரு 200, 300 வருஷம் முன்னாடி இருந்த அதே நிலையில் இருக்க வேண்டும் என்று நினைத்து தான் அன்பு தம்பி முதல்வர் விஜய் நினைக்கிறார்.. என்று கூறினார்.




Click it and Unblock the Notifications
