சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே.. ஆண்டாள் கெட்டப்பில் தமிழச்சி தங்கபாண்டியன்! இன்ஸ்டாவில் லைக்ஸ் மழை!
சென்னை: மார்கழி மாதம் துவங்கி இருக்கும் நிலையில் பெருமாள் கோவில்களில் விளக்கு பூஜை உள்ளிட்டவை நடந்து வருகிறது. இந்த நிலையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தனது இன்ஸ்டாகிராமில் ஆண்டாள் வேடத்துடன் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கார்த்திகை மாதம் முடிந்து மார்கழி பிறந்துள்ளது. புராணங்களின்படி நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் தை முதல் ஆனி வரை தேவர்களுக்கு பகல் பொழுதாகவும், ஆடி முதல் மார்கழி வரை இரவு பொழுதாகவும் கருதப்படுகிறது.
அந்த வகையில் தேவர்களின் அதிகாலை பிரம்ம முகூர்த்தம் மார்கழி மாதத்தில் வருவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மார்கழி திங்களில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு தங்களது இஷ்ட தெய்வங்களை வேண்டி விரதம் இருப்பது பெரும் பலனை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மார்கழி மாதம்
மேலும் திருப்பாவை, திருவம்பாவை ஆகியவற்றை பாடி பெருமாள், சிவன் உள்ளிட்ட இஷ்ட தெய்வங்களை வழிபடுவார்கள். குறிப்பாக 108 திவ்ய தேச தலங்களிலும் அம்மன் கோவில்களிலும் மார்கழி என்றாலே விசேஷம் தான். இன்று மார்கழி முதல் நாள் என்பதை ஒட்டி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் விளக்கு பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. மேலும் பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.
தமிழச்சி தங்கபாண்டியன்
இந்த நிலையில் திமுக எம்பி தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரிமான தமிழச்சி தங்கபாண்டியன். ஆண்டாள் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.
திருப்பாவை பாடல்கள்
"அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம்
இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை
பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
சூடிக் கொடுத்த சுடர்கொடியே !" என்ற பாடலோடு அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
தங்கம் தென்னரசு
பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் என்பதும், தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உடன் பிறந்த சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
திமுக அரசியல்
எழுத்தாளர், பேச்சாளர், இலக்கியவாதி என பல்வேறு முகங்கள் இவருக்கு உண்டு. இவரது கவிதை தொகுப்புகளும் கட்டுரைகளும் ஏராளமான நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்துள்ளது. தமிழக அரசின் பாவேந்தர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றிருக்கிறார். 2019 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications