சேரி மொழி என்ற குஷ்பு; ‘unfit' என்ற டிஆர் பாலு? எது சாதிரீதியான தாக்குதல்?
சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு சொன்ன 'unfit' என்ற வார்த்தை அரசியலாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்கள் முன்னதாக நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற திமுக எம்.பி டி.ஆர். பாலு, சில மாதங்கள் முன்னதாக தமிழ்நாட்டில் பெய்த மழையைச் சரியாக இந்திய வானிலை மையம் கணித்துக் கூற தவறிவிட்டது.

அதனால் சென்னை மக்கள் அதிக அளவில் வெள்ளத்தில் சிக்கிப் பாதிக்கப்பட்டனர். ஏனெனில் வானிலை மையத்தில் உள்ள உபகரணங்கள் நவீனமாக இல்லை. எல்லாம் காலாவதியான தொழில்நுட்பத்தை வைத்துக் கணித்து வருகின்றனர் என்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது இடையில் குறுக்கிட்ட பாஜக மத்திய அமைச்சர் எல்.முருகன் அதற்கு மறுப்பு தெரிவித்தார். உடனே ஆவேசமான டிஆர் பாலு, 'என்ன சொல்ல வருகிறீர்கள்? ஏன் குறுக்கிடுகிறீர்கள்? தயவு செய்து உட்காருங்கள்' என்றார்.
மீண்டும் ஆவேசமான பாலு, சபாநாயகரைப் பார்த்து 'இவர் ஏன் குறுக்கிடுகிறார். அவருக்கு என்ன வேண்டும்? இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கே தகுதி இல்லாதவர். அவரை கட்டுப்படுத்துங்கள்' என்றார்.

அதற்கு பாஜக மத்திய அமைச்சர்களான பிரகலாத் ஜோஷி மற்றும் அர்ஜூன் மேக்வால் ஆகிய இருவரும் 'எங்கள் கட்சியைச் சேர்ந்த தலித் அமைச் சருக்கு தகுதி இல்லை என்கிறார். ஒரு தலித் அமைச்சரைத் தகுதியில்லாதவர் எனச் சொல்ல இவர் யார்? பாலுவை மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள்' என்று சத்தம் போட்டனர்.
இதனால், அவையில் பெரும் கூச்சல் நிலவியது. அதன்பிறகு பாலு பயன்படுத்திய 'unfit' சாதிரீதியாகத் திசை திருப்பப்பட்டுள்ளது. இதற்கு திமுக தரப்பு விளக்கங்களை முன்வைத்துள்ளது.
ஆனாலும், டிஆர் பாலு, நாடாளுமன்றத்திற்குள் உள்ளே அமர்ந்துள்ள அமைச்சர் ஒருவரைத் தகுதி உள்ளவரா? அல்லது தகுதி அற்றவரா என்பதை இவர் தீர்மானிக்க முடியாது. அதற்கான அதிகாரம் இவருக்கு இல்லை. அவர் தனது வாதத்தை முன்வைக்கும் போது ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் குறுக்கிடவே செய்வார்கள்.

ஒரு மூத்த அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் அதற்குத் தன்மையாகப் பதிலளிக்க வேண்டியது கடமை. அதைவிட்டு விட்டு அமைச்சர் தகுதியற்றவர் எனச் சான்றளிக்க பாலு முயலக் கூடாது என்பது பாஜக தரவு வாதமாக உள்ளது.
அந்த வாதம் ஏற்கக்கூடியதே. பாலு, ஆவேசப்படாமல் அமைதியாகத் தனது கருத்துகளைப் பேசி இருக்க வேண்டும்.
அவர் எடுத்த உடனேயே 'ஹூ ஆர் யு?' என்று மத்திய இணை அமைச்சரைப் பார்த்துக் கேட்பது எந்த விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல. அவர் அமைச்சர் ஒருவருக்கான மரியாதையை அவையில் வழங்கி இருக்க வேண்டும். அதுவே நடுநிலையானவர்களின் கருத்தாக உள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் எல்.முருகன், 'திமுக சமூகநீதி பேசுகிறது. ஆனால், நடைமுறையில் அதைக் கடைப்பிடிப்பதில்லை. தகுதி அற்றவர் என்று என்னைச் சொன்னது என்னையும் என் சமுதாயத்தையும் அவமதித்ததாகவே நான் கருதுகிறேன்' என்று கூறியுள்ளார்.
உண்மையில் அவரது மனநிலையிலிருந்து இதைப் பார்க்கும்போது அவரது வலியைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவையில் நடந்த விவாதத்தைப் பார்க்கும் போது அந்த நோக்கத்தில் வார்த்தை பேசப்படவில்லை. நாகரிகமற்ற முறையில் அவர் குறுக்கிட்டுப் பேசுகிறார். ஆகவே அவர் 'unfit' என்ற தொனியிலேயே பாலு பேசியதைப் போல் உணர முடிகிறது.

ஆனால், அப்படியான பொருளில் அது பேசப்படவில்லை. தவறாக அர்த்தம் கற்பிக்கப்படுகிறது என்றால், திமுக தரப்பு அதற்கு உரிய வருத்தத்தைத் தெரிவித்திருக்கலாம். அரசியலில் எந்த ஒரு வார்த்தையும் எப்படியும் மாறலாம். ஆதாயம் வேண்டி அப்படி அரசியலாக்கப்படலாம். அந்தப் புரிதல் தவறு என உணரும் போது விளக்கம் அளித்து வருத்தம் தெரிவிப்பதில் குற்றம் இல்லை.
ஆனால், சில மாதங்கள் முன்னதாக இதே பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு, நேரடியாக 'சேரி மொழி' என்றார். தன்னால் சேரி மொழியில் பேச முடியாது என்றார். அந்தப் பேச்சு சர்ச்சையானது. அதற்கு மன இறங்கி வந்து குஷ்பு கடைசி வரை தனது தவற்றை உணரவே இல்லை. அவர் விடப்பிடியாக அதே நிலைப்பாட்டிலிருந்தார்.

அதற்கு நீலம் பண்பாட்டு இயக்கம் கடுமையான கண்டனத்தை முன்வைத்தது. அப்போது அதற்கு பிரெஞ்சு மொழியில் வேறு அர்த்தம் உள்ளது என்று அகராதி எல்லாம் எடுத்துப் புரட்டி விளக்கம் அளித்தார். மேலும் கூடுதலாகச் சென்று பாண்டிச்சேரி, வேளச்சேரி என்று எல்லாம் ஊர்ப் பெயர் உள்ளதே என்றும் நியாயம் கற்பித்தார்.
அப்போது இதே பாஜகவைச் சேர்ந்த எல்.முருகன் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களை குஷ்பு அசிங்கப்படுத்திவிட்டதாகச் சொல்லவில்லை. பாஜகவினர் கூட அதற்கு ஒரு வருத்தம் தெரிவிக்கக் கூட குஷ்புக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என்ற வடிவேல் டயலாக் தான் நமக்கு குஷ்பு விசயத்திலும் டிஆர் பாலு விசயத்திலும் ஞாபகம் வருகிறது.

அதைப் போல் இதற்கு இணையாக ஊடகங்களையும் செய்தியாளர்களையும் நோக்கி அண்ணாமலை எந்தளவுக்கு மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications